எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
எவ்வளவு தான் கசாயம் வைத்துக் கொடுத்தும், கை வைத்தியமும் செய்தும் அம்மாவின் உடல்நிலை ஒரு வாரமாக சரியாவே இல்லை. வேறு வழி இன்றி மருத்துவரிடம் கேட்க, ஊசி போட்டு ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும் எப்படியும் குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் ஆகும் என்று சொல்லிவிட்டார்.
அங்கு இங்கு என்று வைத்திருந்த காசுகளை எல்லாம் தேடி எடுத்தாலும் இருநூறு ரூபாயை தாண்டவில்லை. என்ன செய்வது என்று யோசித்த மாதவி, அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி செல்ல முடிவெடுத்து, அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் அம்மா விழிப்பதற்குள் வந்துவிடலாம் என்று, கூடையையும் பையையும் எடுத்துக்கொண்டு, அம்மா விழித்தால் பார்த்துக் கொள்ளும்படி பக்கத்து வீட்டு அக்காவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.
வழக்கமாக அவர்கள் ஏரியா பெண்கள் கூடி நண்டு பிடிக்கும் இடத்திற்கு வர, அவளுடன் நண்டு பிடிக்கும் இரு தோழிகள், “என்னடி? உங்க அம்மா உன்ன நண்டு பிடிக்கவே விடாது. எப்படி வந்த?” என்று கேட்டுக் கொண்டே அவர்கள் வேலையை தொடர,
இவளும் தண்ணீருக்குள் இறங்கி கொண்டு, “அம்மாவுக்கு ரொம்ப முடியல டி. டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறதுக்கு காசு வேணும். அதுதான் அம்மாக்கு தெரியாமலே வந்துட்டேன்” என்று கூறி வேகமாக நண்டு பிடிக்கும் வேலையில் மூழ்க ஆரம்பித்தாள்.
“ரொம்ப ஆழமா போகாதடி” என்று தோழிகள் கூறவதையும் கேட்காமல் கொழுத்த நண்டு வேண்டுமே என்று, கழுத்தளவு இருக்கும் தண்ணீரில் இறங்கி மூழ்கி மூழ்கி நண்டுகளை பிடிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்கு போதுமென தோன்றியதும் வெளியேறி, அவளே நேராக மீன் மார்க்கெட்டுக்கும் சென்று கூவி கூவி விற்க ஆரம்பித்தாள் “பழவேற்காடு நண்டு.. பழவேற்காடு நண்டு.. சுவையான நண்டு சீக்கிரம் வாங்க.. வந்து வாங்கிட்டு போங்க..” என்று கூவ ஆரம்பித்தாள்.
பழவேற்காடு நண்டிற்கு ஒரு மவுஸ் இருக்க, விவரம் தெரிந்தவர்கள் வேகமாக வந்து விலை கேட்க கிலோ ஆயிரம் ரூபாய் என்றாள் அசராமல்.
சொன்ன விலைக்கு அப்படியே வாங்கி செல்லும் மக்களா என்ன நாம். ஆயிரம் என்றதை கொஞ்சம் கொஞ்சம் குறைத்து கேட்க, ரூபாய் எட்நூறுக்கு குறையாது என்று முடிவாக கூறி விற்றும் விட்டாள்.
விற்ற பணத்தில் அம்மாவின் மருத்துவ செலவுக்கு தனியாக எடுத்து வைத்து விட்டு, இருவருக்கும் சமையல் செய்வதற்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள் மகிழ்ச்சியாக.
முற்றும்.