எழுத்தாளர்: புனிதா பார்த்திபன்
என் ஏழாம் வயதில் இறைவாசம் சென்ற தந்தையால், மூன்று பிள்ளைகளை ஒற்றைத் தூணாய் என் தாய் தாங்க வேண்டியிருந்தது.
படிக்காதவளவள், பாதி விலைக்கு கிடைத்த தையல் இயந்திரத்தோடு போராடியே எங்கள் வயிற்றை நிரப்பினாள்.
இன்று போல் பல நூறுகள் அல்ல, ஒற்றை இலக்கத்திலே அவளுக்கான கூலி கிட்டும்.
தினமும் இரவில் ஒருதுளி தேங்காய் எண்ணெய்யால் காலைத் தேய்த்தபடி வெகுநேரம் அமர்ந்திருப்பாள்.
ஒருநாள் என்னை நீவிவிடச் சொன்ன போது, “முடியாது” என நான் ஓடிய நினைவு இப்போது கூர் கத்தியால் என் இதயத்தைக் கூறு போடுகிறது. உழைத்தே தேய்ந்தவள், எம்மூவரையும் கரைசேர்த்தாள்.
ஆனால், எங்கள் கரம் பற்றி நிம்மதியாய் உட்காரும் முன்னமே முழுதாய் கசங்கிப் போனாள்.
அவள் உழைத்துத் தேய்ந்த நினைவுகள் உள்ளத்தை அழுத்தும் போதெல்லாம், எனது இரண்டு மூன்று சட்டைகளின் பொத்தான்களை வேண்டுமென்றே பிய்த்து எடுத்துக்கொண்டு, எங்கோ ஓரிடத்தில் பெயர்
பலகை இல்லாமல், தடதட சத்தத்தோடு தையல் இயந்திரம் ஓடும் குட்டிக் கடைகளைத் தேடி ஓடுகிறேன்.
கூலியைக் கொடுத்து திரும்புகையில் அழுந்திக் கிடந்த மனம் ஏனோ இலகுவாகிறது.
முற்றும்.