எழுத்தாளர்: ராஜேஸ்வரி
அரவிந்த் சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்ததை கண்டதும்
முகம் சிவந்து எரிச்சலாகி பைக்கை இரண்டு கார்களுக்கு
இடையே நிறுத்தினான்.
பின்னாடி அமர்ந்திருந்த அரவிந்த்தின் ஏழு வயது மகன் தருண்
சுற்றும் முற்றும் பார்த்தான்.
வலது பக்கம் நின்றிருந்த காருக்கு வெளியே இருந்த கையேந்தும்
சிறுவனை பார்த்ததும் ” அப்பா, காசு கொடுங்க, அந்த
அண்ணாவுக்கு கொடுக்கணும்”என்றான்.
“அவன் நம்மகிட்ட வருவதற்குள்ள பச்சை சிக்னல் விழுந்திரும்”
என்றான் அரவிந்த்.
திடீரென தருண்,”அண்ணா, இங்க வாங்க” என்று கத்தினான்.
திடுக்கிட்ட அரவிந்த்தின் திரும்பிய முகத்தில் சூரியன் தன் அந்தி
வான மஞ்சள் கதிர்களை வீசும் சமயம் சமிக்ஞை மஞ்சளாக மாறியது.
அருகில் வந்த அழுக்கேறிய சிறுவனிடம் அவசரமாக காசை எடுத்து
கையில் போட்டான் அரவிந்த்.
வாங்கியவன் வேகமாக ஓடி நடைபாதையில் ஏறினான்.
“நல்லவேளை சிக்னல் மாறுவதற்குள் கொடுத்தாச்சு”
என கூறிய மகனின் குணம் கண்டு மனம் நெகிழ்ந்தான் அரவிந்த்.
பச்சை சமிக்ஞை மாறியது.
முற்றும்.