எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
இரவு 11:30 மணிக்கு உறக்கம் வராமல் படுத்துக் கொண்டிருந்த ரதியின் காதுகளில் மணியோசை கேட்டு கண்கள் பளிச்சன ஒளிர்ந்தது.
பக்கத்தில் படுத்திருந்த கணவரின் தோளை சுரண்டினாள் ரதி.
எதற்கு என்று தெரிந்திருந்தும் உறங்குவது போல் படுதிருந்தான் ரகு.
விடாமல் அவனை எழுப்ப, “என்ன?” என்று கண் திறக்காமலேயே கேட்டான்.
“என்னங்க குல்ஃபி சத்தம் கேட்குது” என்றாள் அவனை ஏக்கமாக பார்த்து.
தலையில் அடித்துக் கொண்ட ரகு “நேத்து தானடி வாங்கி கொடுத்தேன்” என்றான் மெதுவாக.
“ஏன் இன்று வாங்கி தர மாட்டீங்களா?” என்று கோபித்துக் கொள்ள,
“அம்மா திட்டுவாங்கடி!” என்றான்.
நேற்று இரவு திடீரென்று தூக்கத்திலிருந்த ரகுவை எழுப்பிய ரதி “எனக்கு குல்பி சாப்பிடணும் போல இருக்கு” என்றாள் அவளது 7 மாத வயிற்றை தடவியபடி.
ஏற்கனவே அவள் கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று, அவனது அம்மா சொல்லி இருக்க, இவள் வேறு நேரம் காலம் தெரியாமல் நடு ராத்திரியில் குல்ஃபி கேட்கிறாளே என்று “நாளைக்கு வாங்கி தரேன் டி” என்று உறங்க முயன்றான்.
“எனக்கு இப்போ வேண்டும்” என்று அடம் பிடித்ததும், சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு தெருத்தெருவாக அடைந்து ஒரு வழியாக வாங்கிக் வந்து கொடுத்தான்.
ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மனைவியை ரசனையாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது,
ஹாலில் வெளிச்சம் கண்டு எழுந்து வந்த ரகுவின் அம்மா, “ஏன்டா? நடு ராத்திரி நேரத்தில் ரோட்ல போற குல்ஃபி வாங்கி கொடுத்திருக்கியே! கொஞ்சமாவது அறிவு இருக்கா? பகல்ல சாப்பிட்டா என்ன?” என்று இருவரையும் திட்டினார்.
இன்றும் மனைவி கேட்க, தாயை காரணம் காட்டி தவிர்த்து விடலாம் என்று நினைத்தான் ரகு.
ஆனால் மனைவியின் பிடிவாதம் அதிகரிக்க,
“சரி சரி கத்தாதே. நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று மெதுவாய் கதவைத் திறந்து வெளியே சென்றான்.
மனைவிக்கு பிடித்த ஃபேளேவர்ல குல்ஃபி வாங்கிக் கொண்டு, வெளியே சென்றது போலவே நைசாக வீட்டிற்குள் வர, ஹாலில் நிற்கும் தன் தாயை கண்டு அதிர்ந்து, கையை பின்னால் மறைத்துக் கொண்டான் ரகு.
“என்னடா கையில்?” என்று மிரட்ட,
“ஒன்னும் இல்லைம்மா” என்று சொல்லி உதவிக்கு மனைவியை அழைக்கலாம் என்று திரும்ப,
ஷோஃபாவில் வாட்டமாக உட்கார்ந்து குல்ஃபியை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ரதி.
ரகுவோ அதிர்ந்து இருவரையும் மாறி மாறி பார்க்க,
“எப்படியும் நான் சொன்னா ரெண்டு பேரும் கேட்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். கடையில் வாங்கி சாப்பிட கூடாது என்று நான் மதியமே செய்து ஃபிரிஜ்ல வச்சிட்டேன்.
நீ வாங்கி வந்த குல்ஃபிய நீயே சாப்பிடு. அவள் வீட்டில் செய்த குல்ஃபிய சாப்பிடட்டும்.
சாப்பிட்டதும் உடனே படுக்காதீங்க. சளி பிடிக்காமல் பாத்துக்கோ!” என்று சொல்லிவிட்டு உறங்கச் சென்றார் ரகுவின் அன்புத் தாய்.
முற்றும்.
