எழுத்தாளர்: அ. கௌரி சங்கர்
விசாலமான மாளிகைக்குள் நுழைந்தான் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சார்ந்த ஜீவா. பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத மாளிகையில் ஒரு தோட்டக்காரன் மட்டும் மாளிகையை சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தான். உரிமையாளர் செல்வேந்திரன் கனடாவில் வசித்து வந்தார்.
காவல் துறை கமிஷனர் கணேஷ் ஜீவாவுக்கு சொன்ன செய்தி. ஒரு வாரத்திற்கு முன்பாக சிங்கப்பூரில் இருந்து கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்திருந்தது. மாளிகையின் அருகில் வசித்து வந்த ஒருவர், கடந்த ஒரு வாரமாக இரவில் மாளிகையையொட்டி சிலர் நடமாடியதாக காவல் துறையிடம் சொல்லியிருந்தார். ஜீவாவுக்கு கிடைத்த துப்பு இது ஒன்று தான். மாளிகை சல்லடையாக அலசப்பட்டு விட்டது.
விடிகாலை ஏழு மணியளவில் மாளிகையை சுற்றி பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் மலர்ந்திருக்க, அவற்றால் கவரப்பட்டு நடந்து சென்ற ஜீவாவின் கண்களில் நூற்றுக்கணக்கான மூங்கில் வேங்கைகள் பல தொட்டிகளில் வைக்கப்பட்டு இருக்க,. அருகில் சென்றவன் உன்னிப்பாக பார்த்துக்கொண்டு வர பல வேங்கைகள் ஈரப்பதத்துடன் இருக்க, ஒன்று மட்டும் கம்பீரமாக காட்சியளிக்க, கையில் கிடைத்த சிறிய கல் மூலம் தட்டி பார்த்தவனுக்கு வேங்கை பொருத்தமில்லாத ஓசையை தரவும், அவனுடைய கைசைப்பின் பெயரில், அதை உடைத்து பார்த்த காவலர்களுக்கு, உள்ளே நீளவாட்டில் தங்கம் பதுங்கி இருந்து தன்னை காட்டிக்கொடுத்தது.
முற்றும்.