எழுத்தாளர்: ஜாஸ்கொன்ஸி
1. கல்லூரி வாழ்வின் கடைசி நாள் பயணம் ,என்றும்போல் கல்லூரி பேருந்தின் ஜன்னலோரத்தில் என்னிருக்கை.
2. நான் தினமும் எதிர்ப்பார்க்கும், காலை 8 மணி போக்குவரத்து நேரிசலில் சிவப்பில் இருந்து பச்சைக்கு மாறும் சமிக்ஞை விளக்கின் 38 வினாடிகள்.
3. எப்போழுதும் பயணிகளுக்கு எரிச்சலூட்டும் அந்த காலை பொழுதின் 38 வினாடிகள், ஏனோ எனக்கு மட்டும் 19 வினாடிகள் சுவாரசியமும், 19 வினாடிகள் வருத்தமுமான கலவையாகின்றது.
4. கடந்த மூன்று மாதங்களாக அக்காலை பொழுதில், என் கல்லூரி பேருந்தின் பக்கத்தில் நிற்கும் இருசக்கர வாகனத்தில் உள்ள பெயர்தெரியா அவனின் மின்னிடும் புன்னகையில் ரசிகையானேன்.
5. தினமும் எனைமறந்து அவன் புன்னகையில் ஒரு வினாடி, நேரம் முடிகிறதோ என்று சமிக்ஞை விளக்கில் மறுவினாடி என தொடர்ச்சியில்லாமல் 19 வினாடிகள் அவனை தொடர்கிறது என் பார்வை ரசிப்பதற்காக.
6. இன்றோடு என் பயணம் முடிகிறதென்று, சமிக்ஞை விளக்கை விடுத்து இறுதி நான்கு வினாடிகளும் தொடர்ச்சியாய் அவன் முகம் நோக்கியத்தில், உணர்வோடு உறைந்துப்போனேன்….
7. ஆம், என்றும் நான் ரசிக்கும் அவனின் புன்னகை இன்று எதிர்பார்க்காத நேரத்தில், என்னை நோக்கி, எனக்காக.
8. அவன் கைகடிகாரம் காட்டி, தினமும் ரசிக்கும் நேரம் சரிதானா என கேட்டான் இதழ் அசைவில் புன்னகை மாறாமல், என்னை பார்த்து ஒற்றை கண் சிமிட்டலுடன்.
9. அச்சிமிட்டலில் புரிந்து கொண்டேன்,நான் ரசிகையாய் சமிக்ஞை விளக்கில் தொலைத்த 19 வினாடிகளும் அவனால் ரசிக்கப் பட்டிருக்கிறேனென்று.
10. “நாளை எப்படி பூக்கும் கன்னக்குழியோடு இப்புன்னகை, இந்த ரசிகை இல்லாமல்??” எனும் சிந்தனையோடு சமிக்ஞை விளக்கின் பச்சை வண்ணத்தில் தொடர்ந்து நிறைவடைகின்றது என் கற்பனை பயணம்.
முற்றும்.