எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
வீட்டின் வறுமையின் காரணமாக தன் கல்லூரி படிப்பு முடித்து வெளிநாடு
செல்வதுதான் அதற்கு தீர்வு என்று அதற்கான வேலையில் இறங்கினான் குமார்.
அவன் கனவு தேசமான துபாயில் வேலைகிடைத்தது. நண்பர்கள், உறவினர்களை
பிரிந்து வந்த ஐந்து வருடத்தில் தங்கைக்கு படிப்பு செலவு, கல்யாண செலவு, வீடு,
வாகனம் என்று தன் வீட்டாரின் கனவு அத்தனையும் முடித்தான். ஊர்க்கு சென்று
தொழில் தொடங்கி நண்பர்கள், உறவினர்களுடன் வாழ்வோம் என்று முடிவு
செய்து ஊருக்கு போகும்போது அந்நாட்டின் நினைவாக அந்நாட்டுடைய தேசிய
பறவை கழுகை கையில் பச்சை குத்திக்கொண்டான். தன்னுடைய திருமணம்,
பெற்றோர்களின் மருத்துவ செலவு என்று பணம் முடிந்ததும், நண்பர்களும்,
உறவுகளும் விலகவும் வெறும் கையோடு மீண்டும் பாலைவன தேசம் நோக்கி
சென்றான் குமார் அந்த பச்சையை தடவிக்கொண்டே “இது மட்டும்தான்
கடைசிவரை கூட வரும்” என்று நினைத்துக்கொண்டான்
முற்றும்.
