எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
அம்மா என்று கழிவறையில் இருந்து அலறினான் ராஜா.
சமையல் செய்துகொண்டிருந்த தாயோ, மகனின் அலறல் சத்தத்தில், அடுப்பை அணைத்துவிட்டு, கையில் இருந்த கரண்டியுடனே ஓடிவந்து “என்னடா?” என்றாள் வாசலில் இருந்தே.
கதவுக்கு உள்ளிருந்த ராஜா “ரொம்ப வலிக்குதும்மா. ஆனால் வரவே மாட்டுது” என்றான் அழும் குரலில்.
“நல்லா முக்குடா” என்று தாய் ஆலோசனை வழங்கினார் கவலையாக.
சற்று நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க சோர்ந்து வெளியே வந்தான் அவரின் ஆசை மகன்.
ஓகேயா என்று தம்ஸ் அப் காண்பித்து கேட்க, இல்லை என்று உதடு பிதுக்கி தலையாட்டினான்.
“எப்ப பாரு சிப்சு, கூல் ட்ரிங்ஸ், பரோடா, பீசா, பர்கர் என்று கண்டதையும் அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கி சாப்பிட வேண்டியது. உடம்பை கெடுத்து வைக்க வேண்டியது. அப்புறம் முக்கினா வரலை, முணங்கினால் வரலைனு புலம்ப வேண்டியது” என்று திட்டிக் கொண்டே உணவு மேஜையில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
வாழைப்பழத்தை வாங்கிய மகன் பாவமாக தாயை பார்க்க, “சும்மா பார்க்காமல் ஒழுங்கா சாப்பிடு. இனிமேல் ஹோட்டலில் இருந்து எதுவும் கிடையாது. வீட்டு சாப்பாடு மட்டும் தான். இரவு இரண்டு வாழைப்பழம் கண்டிப்பாக சாப்பிடனும். அம்மா சொல்றபடி கேட்டால் காலையில் நீ கஷ்டபடவே வேண்டாம். சும்மா ஃபிரீயா போகும் பாரு” என்றாள்.
கடை உணவு இனி கிடையாது என்பது வருத்தமாக இருந்தாலும் தினமும் கழிவறையில் படும் அவஸ்தையில் இருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்து, அம்மா கொடுத்த வாழைப்பழத்தை ரசித்து சாப்பிட ஆரம்பித்தான் அருமை மகன் ராஜா.
முற்றும்.