எழுத்தாளர்: யாழி
ஜன்னல் வழியே திருட்டுத்தனமாக வாசலை எட்டிப்
பார்த்துக்கொண்டிருந்த தாயை என்னவென்று கேட்டாள் சௌமியா.
“அதுவா… நம்ம எதிர்த்த வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்கானே ஒரு
பையன்… அவன தான் பாக்குறேன். வந்த ரெண்டு மாசத்துல
ஒருதடவ கூட அவன் முகத்த பாக்கவே இல்ல. எப்பப்பாரு தொப்பி
போட்டுட்டு முகத்த மறைச்சுட்டே வரான்!!” என்றார் அவளது அம்மா.
“அவங்க முகத்த பாத்து நீ என்னம்மா பண்ண போற??” என
குழப்பமாக கேட்ட மகளை முறைத்தவர்,
“சும்மா இரு டி… நம்ம பக்கத்து வீட்டு பரிமளா அவன் முகம் ரொம்ப
விகாரமா தழும்போட இருக்கதா சொன்னா! வெட்டுக்குத்துனு
அலையுற பையன் போல… நாளபின்ன நம்ம கிட்ட பிரச்சன
பண்ணா என்ன பண்றது? நான் வேற வயசு பொண்ண
வச்சிருக்கேன். அக்கம்பக்கத்துல யார் இருக்கா.. எப்படி இருக்கா…
இதெல்லாம் தெரிஞ்சுக்கணும் டி!!” என கடிந்தார் தாய்.
இதுவெல்லாம் வாசலில் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்த
ஆடவனின் காதில் நன்றாகவே விழுந்தது. அவனது பாதி முகத்தை
மறைத்திருந்த கருமை நிற தொப்பியானது, ஆடவனின் உதட்டோரம்
பூத்த ஏளனச் சிரிப்பை மறைக்கவில்லை.
‘விகாரமான முகம் இருக்கவனெல்லாம் கெட்டவன்னு இவங்களுக்கு
யார் சொன்னது? கெட்டவன்… அந்த ராஸ்கல மாதிரி நல்ல
தோற்றத்தோடயும் இருக்கானுங்களே!!’ என மனதுக்குள்
நினைத்தவனுக்கு சட்டென முகம் இறுகியது.
கருமை நிற தொப்பியானது, மறைத்தது அவனது தழும்பை
மட்டுமல்ல! கருமையான கடந்த காலத்தையும் தான்.
சாதாரண தழும்பா அது! அவனது தங்கையின் மானம் காக்க, தன்
உயிரையும் துச்சமாக கருதாத அண்ணனின் அன்பின் அடையாளம்.
அழகான கெட்டவனிடம் இருந்து கிடைத்த விகாரமான விழுப்புண்.
முற்றும்.