எழுத்தாளர்: நா மதுசூதனன்
வீட்டிற்கு வந்துவிட்டு ஒரு நண்பனின் ரகசிய அழைப்பு காரணமாகச் டேபிளில் இருந்த போனை எடுத்துக் கொண்டு அவசரமாகக் கிளம்பினான் மாதவன்.
நண்பர்கள் கூடினால் கேட்கவும் வேண்டுமோ?.ஒன்று இரண்டானது, குவார்ட்டர் புல்லானது.மனைவியின் நினைவு வந்ததும் போதை சற்றே இறங்கியது.
அவளுக்குப் போன் செய்தால் கத்துவாள் கிராதகி என்று மகள் எண்ணுக்கு அழைத்தான்.
எடுத்தது கிராதகி தான், வந்த எடத்துல லேட்டாயிடுச்சும்மா என்று
ஆரம்பிக்கும் முன்னே “வீட்டுக்கு வாங்க இருக்கு” என்று வைத்து விட்டாள்.
வீட்டினுள்ளே நுழையும்போதே மகளின்முகம் ஒரு மாதிரியாக நமட்டுச்
சிரிப்புடன் இருந்தது. “ஏம்பா உன் போனை சார்ஜுல போட்டுட்டு அம்மா போனை எடுத்துட்டுப் போன” என்று கேட்டாள் மகள்.
அதிர்ச்சியில் வெளிறிப்போன முகத்துடன் சார்ஜில் இருந்த தனது போனைத் திரும்பிப் பார்க்கவும், சப்பாத்திக்கு வைக்கப்போன பாத்திரத்துடன் மனைவி வரவும் சரியாக இருந்தது.
முற்றும்.