10 வரி போட்டிக் கதை: வேரூன்றிய பல்

by admin 2
54 views

பள்ளியில் இருந்து அழுது கொண்டே வந்த மகனைக் கண்டு பதறிய தாய், “என்ன ஆச்சு கண்ணா? ஏன் அழுற?” என்று அவன் கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டாள்.

அண்ணன் பள்ளியிலிருந்து வந்ததும் விளையாடலாம் என்று நினைத்திருந்த தங்கையும், அண்ணனின் அழுகையைக் கண்டு அழ ஆரம்பித்தாள்.

மகளின் அழுகையை கண்ட தாய் “பாரு கண்ணா. நீ அழுததும் தங்கையும் அழுகின்றாள். ஏன் அழுற?” என்று கண்களை துடைத்தாள்.

அவனும் வாய் திறந்து எதுவும் சொல்லாமல், தன் சட்டை பையில் இதுவரை பத்திரமாக எடுத்து வந்திருந்ததை  தன் தாயிடம் காண்பித்தான்.

அவன் கைகளைத் திறந்து பார்த்ததும், புன் சிரிப்புடன் “என்ன கண்ணா? பல் விழுந்து விட்டதா? இதற்கு தான் அழுகின்றாயா?” என்று வடியும் அவன் கண்ணீரை தன் முந்தானையால் துடைத்துவிட்டு, “பல் விழுவதெல்லாம் சாதாரணமாக நடக்கும் செயல்தான்” என்று மகனை ஆசுவாசப்படுத்தினார்.

“சரி சரி அதை தூக்கி போட்டுட்டு வா. அம்மா உனக்கு பிடித்த கொழுக்கட்டை செய்து வைத்திருக்கிறேன். சாப்பிடலாம்” என்று அவனை கை கால் முகம் கழுவி வர சொல்லி அனுப்பினார்.

“என் ஃப்ரெண்டு முத்து சொன்னான். பல்லை தென்னை மரத்துக்கு அடியில புதைத்து வைக்கணுமாம். அப்பதான் சீக்கிரமா பல் முளைக்குமாம்” என்று சொல்லி விட்டு,  கிணத்தடியின் அருகில் இருந்த தென்னை மரத்தை நோக்கி ஓடினான் கண்ணன்.

மகனின் செயலில் புன்னகைத்தத்தாய் அவனுக்கு பிடித்த கொழுக்கட்டையை தட்டில் எடுத்து வைத்து மகளையும் மடியில் வைத்து “அண்ணனுக்கு ஒன்றும் இல்லை. அவன் அழ மாட்டான்” என்று மகளின் கண்ணீரையும் துடைத்து விட்டார்.

தென்னை மரத்தில் பல்லை புதைத்து வைத்துவிட்டு தாயின் அருகில் வந்து உட்கார்ந்த கண்ணன், அம்மாவை பார்த்து “பள்ளிக்கூடத்தில் எல்லோரும் என்னை ஓட்ட பல்லு சிங்காரா என்று கிண்டல் பண்ணுகிறார்கள் அம்மா” என்றான். அதை சொல்லும் பொழுதே அவனுக்கு அழுகை வந்தது.

“கிண்டல் பண்ணினால் பண்ணிட்டு போகட்டும் கண்ணா. இன்னைக்கு உனக்கு விழுந்துச்சுன்னா, நாளைக்கு அவனுக்கு பல்லு விழ போகுது. எல்லோருக்கும் பல்லு விழுந்து தான் முளைக்கும். அப்படி என்றால்தான் அழகான முத்துப் போல் பல்வரிசை வரும். என் செல்லத்துக்கும் எல்லா பல்லும் முளைச்சதும் பாரு, எவ்ளோ அழகா இருக்கும் என்று” என்று மகனை உச்சி முகந்தார்.

கொழுக்கட்டை சாப்பிட்டதும் வேகமாக தென்னை மரத்திற்கு அடியில் சென்று, புதைத்து வைத்த பல்லை எடுத்துப் பார்த்தான். அவனை பின்னாடியே வந்தவனது தாய்,

“என்ன கண்ணா? எதுக்கு இப்ப அதை எடுத்து பாக்குற?”

“பல்லுக்கு வேர் வந்திருச்சான்னு பார்க்கிறேன் அம்மா” என்றான். “பல்லு வேர் விட்டாதான், எனக்கு பல்லு முளைக்குமாம்” என்றான் கவலையாக.

அவனின் தலையை செல்லமாக கோதிய தாய், “எல்லோருக்கும் இந்த வயதில் பல் விழுந்து தான் கண்ணா முளைக்கும்”

“உனக்கும் விழுந்துச்சாம்மா”
“ஆமாண்டா கண்ணா”
“அப்பாவும் விழுந்துச்சாம்மா”
“ஆமாண்டா செல்லம்”
“அப்ப தங்கச்சி பாப்பாக்கு?”

“அவளுக்கும் வளர்ந்து ஸ்கூலுக்கு போகும்போது இந்த வயசுல விழத்தான் செய்யும். அது மட்டும் இல்ல உன் வகுப்பில் இருக்கிற எல்லோருக்குமே இந்த வருஷத்துக்குள்ள முன் பற்கள் விழுந்து தான் முளைக்கும். அதனால கவலைப்படாமல் உன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வா. வீட்டுப்பாடம் செய்யனும் இல்லையா?” என்று சொல்லி அவனை விளையாட அனுப்பினாள்.

அம்மா சொன்னதும் பல்லைப் பற்றிய கவலையை விடுத்து, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடச் சென்றான் கண்ணன்.

 நன்றி    

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16643-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!