எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
காலையிலேயே பரபரப்பாக சமையல் அறையில் வேலை செய்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை.
மதிய உணவை நால்வருக்கும் டிஃபன் பாக்ஸ்சில் எடுத்து வைத்துவிட்டு, தானும் வேலைக்குச் செல்ல தயாராகினாள்.
“மணி சாப்பாடு ரெடியா?” என்று கணவன் குரல் கொடுக்க, “என்னோட பெல்ட்ட காணும்மா” என்று மகள் அழைத்தாள்.
மகனோ இன்னும் குளியலறையில் இருந்து வரவில்லை.
“எல்லாம் ரெடிங்க. தோசை மட்டும் தான் ஊத்தனும் கொஞ்சம் பொறுங்க” என்று கணவனுக்கு பதில் சொல்லிவிட்டு, “ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு இடமா வைக்கனும் என்று எத்தனை தடவை சொல்றேன்” என்று திட்டிக் கொண்டே எடுத்து கொடுத்து, மகனை “சீக்கிரம் வெளியே வாடா” என்று சத்தம் கொடுத்தாள்.
எல்லோரும் தயாராகிவர தோசை சுட ஆரம்பித்தாள். தோசையோ கல்லை விட்டு வருவேனா என்றது. பிள்ளைகளோ “என்னம்மா தோசை மொறுமொறுன்னே இல்லை. பிச்சி பிச்சி வேற தருகிறீங்க” என்று குறைப்பட்டுக் கொண்டனர்.
காலை பரபரப்பில் கோவம் தான் வந்தது அவளுக்கு. “எத்தனை தடவை சொல்றேன். ஒரு நான்ஸ்டிக் பேன் வாங்கி தாங்க என்று. கேக்குறீங்களா? எனக்கு நான்ஸ்டிக் பேன் வேண்டும்.
என்ன செய்வீங்களோ? ஏது செய்வீங்களோ? தெரியாது. இன்றைக்கு வரும் போது ஒரு நான்ஸ்டிக் பேன் வாங்கிட்டு வாரீங்க, அவ்வளவு தான்” என்று ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, மறுகையில் தோசை பிரட்டியை வைத்து மிரட்டினாள்.
அவள் நின்ற கோலம் கண்டபின் இன்று வாங்கி வராமல் இருக்க அவன் என்ன முட்டாளா?..
முற்றும்.