எழுத்தாளர்: புனிதா பார்த்திபன்
நீண்ட ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கிராமத்து பூர்வீக வீட்டை விற்பனைக்காக பார்க்க புறப்பட்டேன் மனைவி மற்றும் மகனோடு.
வீட்டுக்குள் கிடந்த பழைய பொருட்களோடு நான் ஏழாம் வகுப்பு படிக்கையில் பயன்படுத்திய செருப்பு பின்பக்கம் குத்திய ஊக்கு துருப்பிடித்திருந்த நிலையில் கிடந்தது. பிய்ந்து போன பிறகும், ஒன்பதாம் வகுப்பு அக்காவின் துப்பட்டா ஊக்கை குத்தி ஓராண்டுக்கும் மேல் அதை பயன்படுத்திய ஞாபகம் வந்து சென்றது.
வெறும் நினைவுகள் மட்டுமல்ல, ஊக்கு ஊடுறுவிச் சென்ற துளை போல், வாழ்வினூடே குத்திய வறுமையின் வலிகளும் வந்து போயின. வறுமையின் நிழலை அடையாளம் காட்டியதில் பெரும்பங்கு இந்த ஊக்கிற்கு உண்டு. இந்நிலை மாற வேண்டும் என்ற வெறியோடு படித்து, உழைத்து இன்று உயரமான ஒரு வாழ்வை எட்டிய எனக்கு, “ஐய, சேப்ட்டி பின்னக் குத்தியா செப்பல போட்டு நடப்பாங்க!” என ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்த என் மகனின் வார்த்தைகள் பயமுறுத்தின.
இரு மாதங்களுக்கு முன் வாங்கிய ஸ்போர்ட்ஸ் ஷூவில் சின்னதாய் கரை பட்டதற்காக இன்று காலை தான் புதிதாய் ஒன்றை அவனுக்கு வாங்கியிருந்தோம். எனக்கு ஊக்கும் ஒரு ஊக்குவிப்பாய் அமைந்தது. ஆனால், வறுமையும் தெரியாமல், வறியவரின் உணர்வுகளும்
புரியாமல் வளர்க்கப்படும் என் மகன், எதை ஊன்றுகோளாய் பற்றுவான் என்ற அழுத்தம் ஊக்கின் முனைபோல் கூர்மையாய் தைக்க ஆரம்பித்திருந்தது என் மனதை.
முற்றும்.
