எழுத்தாளர்: அமுதாராம்
பாதி கடித்தது உள்ளே இறங்க மறுத்தது. தொலைவில் குப்பத்து
சிறுவர்கள் மணல் வீடு கட்டுவதும் எங்கிருந்தோ வரும் அலை அரக்கன் அதை அழிக்க முயற்சிப்பதுமாக அந்த அந்திப்பொழுது கழிந்து கொண்டிருந்தது.
கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் எங்கெங்கு இருந்தோ வந்திருந்தனர்.
கண்கள் கடலையே வெறித்துக் கிடந்தன. காக்காக்கடி கடித்துத் தின்ன இனிய பொழுதுகள் நினைவில் நிழலாடி இமைகளை நமைத்தன. சாதிக் கயிற்றில் கடைசி மூச்சுக்காகத் தொங்கிக் கொண்டிருந்தது காதல்.
உச்சி வகிட்டில் சாக்லேட் வாசனை கமழ அன்று பெற்ற முத்த வடுவின் இளஞ்சூட்டில் பகட்டான வாழ்க்கை குறித்த மதிப்புகள் பொசுங்க ஆரம்பித்தன.
கிளிப்பிள்ளையாய் எல்லோருக்கும் இருந்தது போதும்! இது முடிவெடுக்க
வேண்டிய நேரம். மீதியைப் பத்திரப்படுத்திக்கொண்டு தர புறப்பட அதுவரைதொண்டையை அடைத்தது மெல்ல கரைந்து இனித்தது.
முற்றும்.