எழுத்தாளர்: நா மதுசூதனன்
வாய் ஓயாமல் குறை சொல்லும் அம்மா சாந்தாவும் மனைவி கீதாவும்
புதிது புதிதாக நச்சரிக்கும் குழந்தைகள்.
எவ்வளவு செய்தாலும் போதாப் பாட்டு பாடும் மேனேஜர் சுந்தரம்
என்ன இங்கிரிமெண்ட் கொடுத்தாலும் திருப்தியே இல்லாத டீம்.
பூனை அளவு பட்ஜெட் கொடுத்து விட்டு யானை அளவு எதிர்பார்க்கும் கிளையண்ட் ஜேம்ஸ்…
ஃபோன் அடித்து எடுத்தால் கடன் காரனாக்க அலையும் கடனட்டைகள்.
வாங்கிய கழுத்தில் துண்டு போடாத குறையாகப் பின் துரத்தும் வங்கிகள்.
ஆசைகள், எதிர்பார்ப்புகள், பொறாமைகள், சுயநலங்கள், இவற்றை எல்லாம் மறைக்கும் ஒரு மாயக் கவசமோ தொப்பியோ கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தான் மாதவன்.
அவனை மோதிய லாரி டிரைவரும் இதே போல் நினைப்பில் இருந்திருக்க வேண்டும்…
வண்டிக்கு என்ன செலவாகும் என்பது பற்றிய கவலை தான் உயிர் போகும் முன் அவனது கடைசி சிந்தனை.
முற்றும்.
