எழுத்தாளர்: நா மதுசூதனன்
“உங்களுக்கென்று ஏதும் காதல் இருந்ததில்லையா அப்பா இதுவரை நாம் அதைப் பற்றிப் பேசியதில்லயே” என்று கேட்ட ராம் தன் தந்தை மாதவனின் கண்ணில் மறைக்கவியலா ஒரு பிரகாசம் வானில் தோன்றும் எரிகல்லைப் போலத் தெரிந்து மறைந்ததைக் கண்டான்.
“காயத்ரி அழகென்று சொன்னால் மட்டும் போதும் வர்ணனை தேவையில்லை ஏனெனில் அழகை அழகு என்று மட்டும் தான் எனக்குச் சொல்லத் தெரியும்” என்றார் மாதவன்.
“எனது சைக்கிளின் மணியும், அவளது கொலுசின் மணியொலியும்சேர்ந்தே இருக்கும் நாட்கள் தான் அவளைப் போல எவ்வளவு அழகானவை.
ஊருக்கு வெளியே இருந்த அவள் ஊருக்குள் காலடி எடுத்து வைத்த இடத்திலிருந்து சேர்ந்து வருவோம்.
எனது சைக்கிளில் என்றும் அவள் ஏறியதில்லை ஏனென்றால் சைக்கிளில் ஏறத் தாலி ஏற வேண்டும் என்று விநோதமாக நினைப்பவள் அவள்.
வரும் வழியில் உள்ள தோப்புகளில், ஒற்றையடி பாதையில், உடன் வரும் பறவைகள் கீச்சுகளும் மயில்களின் அகவல்களும் தான் எங்கள் காதலின் பின்னணி இசை.
முதன் முதல் பார்த்த இடத்தை நான் மறக்கமாட்டேன் என்றாலும் மறக்கக் கூடாது என்று அதன் நினைவாக ஒரே ஒரு கீச்செயின் அதுவும் பிளாஸ்டிக்கில் வாங்கிக் கொடுத்தாள்.
இரண்டாமாண்டு நினைவுகளைத் தேக்கி அதே இடத்தில் ஒரு புதிய கொலுசுடன் காத்திருந்த என் காதில் விழுந்த தகவல், பாம்பு தீண்டித் தோட்டத்து கிணற்றில் விழுந்து இறந்தவள் பெயர் காயத்ரி.
ஓடிச் சென்று பார்த்தபோது உடல் மூடியிருக்க அவளது அழகான வலது கால் மட்டுமே வெளியில் தெரிய கருத்திருந்தும் மின்னிய அந்தக் கொலுசு என்னைப் பார்த்துச் சோகமாகச் சிரித்தது போலத் தோன்றியது.
கை நடுங்க இது தான் அவள் கொடுத்த பரிசு என்று ஒரு தையல் எந்திரம் தொங்கும் அந்தக் கீச்செயினை ஜிப்பாவினுள் இருந்து எடுத்து ராமின் உள்ளங்கையில் வைத்துவிட்டு காயத்ரியுடன் சேர்ந்தார் மாதவன்.
முற்றும்.