எழுத்தாளர்: ஜே ஜெய பிரபா
வரப்பிலே கீரை பறித்து கொண்டிருந்த பாட்டியின் கையருகே ஓடிய வயல் நண்டை பார்த்ததும் பேரனின் நினைவு வந்தது தமயந்தி அம்மாவுக்குஅம்மா எனக்கு நண்டு கறி சாப்பிடணும்னு ஆசையா இருக்கு என்று ஒரு வாரம் முன்னதாக அவன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தான்.
இந்த நண்ட எப்படியாவது புடிச்சி இன்று என் பேரனுக்கு சமைக்கணும் என்று எண்ணி அதை லாவகமாக பிடித்தாள்.
நீராகாரம் கொண்டு சென்ற போணியுள் போட்டு மூடினாள்.
விறு விறுவென வீடு நோக்கி வந்தவள் பேரனிடம் ஆவலாய் திறந்து காட்டியதும் ஐ எனக்கா பாட்டி என்றான் பேரன் நாக்கில் ஊறிய எச்சிலை உறிஞ்சியவாறேஆமாம் என்ற தமயந்தியம்மா நண்டை தூக்கிப் பேரனிடம் இது காலு இது கொடுக்கு இது வயிறு என்று ஒவ்வொன்றாக காட்டினாள்.
பார்த்துக் கொண்டிருந்த பேரனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரியவே குட்டியா பாட்டி இது என்றான் வயிற்றின் விளிம்பில் ஊர்ந்த குட்டி நண்டை காட்டி ம்ம் பார்த்தியா குட்டி இன்னும் நிறைய இருக்கு பாரென வயிற்றைத்திறந்து குறுகுறுவென ஊர்ந்த குட்டியை காட்டினாள் பேரனுக்கு.
கொஞ்சம் இரு இப்ப சமச்சி கொடுக்கிறேன் என்றாள்.
இல்ல பாட்டி பாவம் குட்டி எல்லாம் இறந்துடும்ல குளத்துல விட்ருவோம் என்றவன் பாட்டியின் பதிலை கேளாமலே கொண்டு போய் குளத்து நீரில் நீந்தவிட்டான்.
முற்றும்.