எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: முட்டை
அம்மா , இனிமே நா முட்டை சாப்பிடமாட்டேன், உறுதியாகச் சொன்ன மகன் முகுந்தனைச் சற்றே விநோதமாகப் பார்த்தாள் சுகன்யா .
தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் முகுந்தன் சரியான சுட்டிப்பையன். தினமும் உணவில் ஒரு முட்டையாவது இல்லையென்றால் அதைச் சீந்தவே மாட்டான் .
அப்படிப்பட்டவனா இப்படிச் சொல்கிறான் ?
ஏண்டா கண்ணா , நீதான் முட்டையில்லாட்டா சாப்பிடவே மாட்டியே?
அது நேத்தைக்கோட ஓவர். இன்னைக்கு எங்க மிஸ் மஞ்சள் கரு பத்தியும் அதனோட பயன்கள் பற்றியும் சொன்னாங்க .
மஞ்சள் கரு ஆரோக்கியம்தானே கண்ணா?
கேட்ட தாயைக் கட்டியனைத்தவாறே தேம்பலுடன் தொடர்ந்தான் முகுந்தன் .
‘கரு’ன்னா என்னா மிஸ்னு என் பிரென்ட் கேட்டான். ‘கரு’ன்னாஉயிர் உற்பத்தியாகிற இடம். கருப்பையில்தான் உயிர் வளர்ந்து உரிய காலகட்டத்தில் உருவமா வெளிவரும் ….விளக்கம் சொன்னாங்க மிஸ்.
அப்படின்னா நாம ஒரு உசிர தினமும் கொன்னு சாப்பிடறோமாம்மா?
இனிமே எனக்கு முட்டை வேண்டவே வேண்டாம்.
தன் விழிகளும் கலங்க, தேம்பும் மகனைச் சமாதானப்படுத்துகிறாள் சுகன்யா.
முற்றும்.
