எழுதியவர்: புனிதா பார்த்திபன்
சொல்: குடை
கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் தடமிட்டு காய்ந்திருக்க, விம்மியபடியே
உறங்கிக்கொண்டிருந்த மகனைப் பார்க்க வருத்தமாக இருந்தது. எப்போதும் அவனை நான்
இப்படி அடித்ததில்லை. “அப்பா, இன்னைக்கு பேனா காணாமப்போயிருச்சுப்பா, பென்சிலைக்
காணோம்” என்றபடி அவன் வந்தபோதேல்லாம் அமைதி காத்து அடக்கி வைத்த கோபம் இன்று
“குடையைக் காணோம்ப்பா” என தொப்பலாய் நனைந்தபடி நின்ற போது எனையும் அறியாது
கொப்பளித்து விட்டது.
போன வாரம்தான் வாங்கிய புதிய குடை எனும் எண்ணத்தில் நொடியும் கோபத்தைக் கட்டி
நிறுத்தாது கொட்டிய மழைக்கு துணையாய் நானும் பாலகனவன் மீது பொழிந்து போனேன்.
“நாளைக்கு எப்படியாவது பள்ளிக்கூடத்துல தேடி எடுத்துட்டு வந்துடறேன்ப்பா” என்ற
வார்த்தையே அடிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மறுநாள் காலையில் மழை நீரை உறிஞ்சி கனத்துப்போன மண் போல் என் மனமும்
கனத்திருந்தது. நடந்துவிட்டு வரலாம் என மெல்ல நடந்தேன். தெரு முனையில் தாழ்வானதொரு
சிறிய மரத்திற்கு அடியே நேற்று மகன் கொண்டு சென்ற குடை கிடந்தது. விரைந்து சென்று
கையிலெடுத்தேன். குடைக்குள் இரண்டு பச்சிளம் நாய்க்குட்டிகள் குடையை எடுத்ததும்
மரக்கிளையிலிருந்து சொட்டிட்ட நீரால் உடல் நடுங்கின. என் மனம் மெல்ல தலைசாய்ந்தது,
மகனை அடித்ததை நினைத்து அல்ல, அத்தனை அடி தாங்கியும் அவன் அறத்தைக் காத்ததை
நினைத்து.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.