எழுதியவர்: புனிதா பார்த்திபன்
சொல்: துடைப்பம்
ஒரு வாரமாகவே ஜனனி உடைந்து போய் கிடந்தாள். யாருக்கும் தெரியாமல், அறைக்குள்
சென்று அழுவதும், வெளியில் வரும்போது இயல்பாகவும் இருந்தவள் வீட்டில் யாருக்கும்
தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வரவேற்பரையில் வந்தமர்ந்தாள். அவள் வந்து உட்கார்ந்தது
தான் தாமதம், சமையலறையிலிருந்து வேகமாய் வெளியில் வந்த அம்மா, “ஏன்டி, வீடு எப்படிக்
குப்பையா கிடக்கு. அந்த வெளக்கமாறை எடுத்து கூட்டித் தள்ளுனா என்ன?” என சத்தமிட்டார்.
நிமிர்ந்து பார்த்த ஜனனி, “அப்புறம் பெருக்குறேன்மா” என்றாள்.
“செய்ய வேண்டியத அப்ப அப்ப செஞ்சிடணும். இப்படி குப்பைய சேர விட்டா வீடு
அசிங்கமாத்தான் இருக்கும். குப்பன்னு தெரிஞ்சுருச்சு. இன்னும் அதப் பாத்துக்கிட்டே
உட்கார்ந்துருப்பியா. மொதல்ல அதத் தள்ளி வெளில எறி” என்றார்.
“அடடடா, ஏன்டி ஒரு வீடு பெருக்குறதுக்கு இத்தனை பேச்சா?” எனக் கேட்டார் கணவர்.
“ஆமாங்க. பாத்து பாத்து ஒத்த வீடு கட்டிருக்கோம். சந்தோஷமா இருக்கத்தான. கண்ட குப்பைய
சுமக்கவா? போ ஜனனி முதல்ல குப்பைய கூட்டித்தள்ளிட்டு முகம், கால் கழுவிட்டு வா” என்ற
அம்மா எப்படித் தன் காதல் தோல்வியை அறிந்தாள் என்பது புரியாமல் போனாலும், அம்மாவின்
வார்த்தைகள் ஜனனிக்கு புதுத் தெம்பு தந்தன. தீர்க்கமாய் எழுந்தவள் அண்டிக் கிடந்த குப்பையை
அகற்ற விரைந்தாள்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.