எழுதியவர்: புனிதா பார்த்திபன்
சொல்: பீரங்கி
“ஹா! எங்கிட்ட இருந்து போன அந்த ரெண்டாவது குண்டுல ஐந்நூறு பேராவது தெறிச்சுருக்க
மாட்டான்!” சொல்லியபடி சத்தமாய் சிரித்தது பீரங்கிக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பீரங்கி.
“ஆமா…தரமான வெற்றியில இது. வீரர்கள் கூச்சலக் கேட்டியா?” என்றது அருகிலிருந்த மற்றொரு
ராட்சச உயர பீரங்கி. “ஆமா, நாளைக்கு பூஜையில நமக்கு ராஜ மரியாதை தான். பூ, பொட்டு,
தீபாராதனைன்னு” என முதல் பீரங்கி சொல்லிக்கொண்டிருக்க, கூட்டமாய் வீரர்கள் மற்றுமொரு
யானை உயர பீரங்கியை கிடங்கில் வைத்துச் சென்றனர்.
“வந்துட்டியா, இவ்வளவு நேரமாவா உன்ன சுத்தப்படுத்தினாங்க? நீ தான் ஆட்ட நாயகன்
தெரியுமா?” என மகிழ்வாய் ராட்சத பீரங்கி கேட்க, மெளனமாய் இருந்தது புதிதாய் வந்த பீரங்கி.
“என்னாச்சு, உன் உடம்புல எதுவும் பழுதாயிடுச்சா?” என முதல் பீரங்கி கேட்க,
“இல்ல, போர் முக்கியமானது, நாட்டு நலனுக்கானதுன்னு தெரிஞ்சாலும் ஏதோ வலிக்குது.
களத்துல என்னைய இயக்குன வீரன்கள்ல ஒருத்தன் பேசிக்கிட்டுருந்தான், அவன் மனைவிக்கு
குழந்தை பிறக்காதுன்னு வைத்தியர் சொல்லிட்டாராம். இந்தப் போரை முடிச்சிட்டு போய்
அவளுக்குத் துணையா இருக்கணும்னு சொன்னான். அடுத்த அரை மணி நேரத்துல வெடிச்சு சிதறி
என் மேலயே விழுந்தான். அவன் இதயம் நசுங்கி விழுந்த என் தலையில எப்படி குங்குமம் வச்சு
பூஜ பண்ணிக்க முடியும்” என தழுதழுத்த அதன் வார்த்தையைக் கேட்ட மற்ற இரண்டும்
மெளனமாகின. உருவமற்ற கண்ணீர் ஏதோவொரு மூலையில் அவைகளிடமிருந்து கசிந்து
கொண்டிருந்தது.
முற்றும்.
