எழுதியவர்: புனிதா பார்த்திபன்
சொல்: விரல்
தோழியைப் பற்றிய அச்செய்தியைக் கேட்டதும் மனம் நொறுங்கிப்போனது. மிக அழகாக
கவிதைகள் படைப்பவள் அவள். பாடலாசிரியராக வேண்டுமென்பது அவள் தீரா விருப்பம். “ஏய்,
என் அம்மாக்கு ஒரு கவிதை எழுதிக்குடுடி, என் ஆளுக்கு ஒண்ணு, என் கணவருக்கு ஒண்ணு”
எனத் தன் கவிதைகளால் அடுத்தவரின் அன்பைக் கோர்த்தவளுக்கு நேர்ந்த கோர விபத்தில் இரு
கைகளின் விரல்களும் முழுதாய் நசுங்கியதைக் கேள்வியுற்றபோது, “ஐயோ இனி எப்படி
எழுதுவாள்?” என்ற பதற்றமே முந்தி அழுதது.
சிலர் காலால் எழுதுவதைக் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால், அதற்கு எத்தனை பயிற்சி
வேண்டும். அவளைப் பார்த்தவுடன் வெடித்து அழுதுவிடுவேனோ என பயந்தபடியே செல்ல
என்னைப் புன்முறுவலோடே வரவேற்றாள்.
என் விழிகளைக் கொண்டே மனதைப் படித்தவள், “ஏய், விரல் போனா என்னடி? இப்போ
எவ்வளவு டெக்னாலஜி இருக்குன்னு உனக்கே தெரியுமே” என்றபடி, அருகிலிருந்த
கைப்பேசியைப் பார்த்து, “ஹாய் கூகுள் அசிஸ்டெண்ட், என்னுடைய டைரி அப்ளிக்கேஷனைத்
திறந்து இன்றைய பதிவைக் காட்டு” என்றாள். வளர்ந்த தொழில்நுட்பம் அவள் சொன்னதைச்
செய்தது. “இன்னைக்கு காலையில எழுதுன கவிதை இது. ஒரு பேச்சரங்கத்துக்கு கேட்ருந்தாங்க.
படிச்சுப் பாரு, விரல்தான் போச்சுடி, எழுத்து போகல” எனப் புன்னகைத்தாள். அவளின்
அத்தன்னம்பிக்கை நான் கொண்டு சென்ற பாரத்தை எங்கோ விசிறி எறிந்திருந்து.
முற்றும்.
