100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: மடி

by admin 2
48 views

எழுதியவர்: புனிதா பார்த்திபன்

சொல்: முட்டை

“டேய், ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணு குடுடா. ஆசையா இருக்குடா” எனக் கெஞ்சிக் கேட்டு,
நண்பன் வீட்டில் அடையில் இருந்த வாத்து முட்டை ஒன்றை வாங்கி வந்து தங்கள் வீட்டில்
அடைக்காக்கும் கோழியின் முட்டைகளோடு வைத்திருந்தான் நவீன். எப்போது பொறிக்கும் என
தினமும் பார்த்துக்கொண்டேயிருப்பான். 
அன்று அவனுடைய அம்மா வெளியூருக்குச் செல்ல நேர்ந்ததால் அவனைத் தனது அக்காவின்
வீட்டில் விட்டுவிட்டுச் சென்றாள். முதல் நாளில் பெரியம்மா மிக அக்கறையாக பார்த்துக்
கொண்டார். பிடித்த உணவைக் கேட்டு செய்தார். மறுநாள், “இத நான் சாப்பிட மாட்டேன்
பெரியம்மா” என்று அவன் சொன்ன போது, “தினமும் உனக்கு பிடிச்சதவே வைக்க முடியாதுல.
இன்னைக்கு இதுதான் சாப்பிடு” என்றார். “இவ்வளவு நேரம்லாம் டிவி பார்க்கக்கூடாது, தண்ணிய
என்ன இப்படித் திறந்துவிடற?” போன்ற பெரியம்மாவின் தொடர் கண்டிப்பு இரண்டே நாட்களில்
அம்மாவின் ஏக்கத்தை அவனிடம் விதைத்தது.
“அம்மா எப்ப வருவாங்க பெரியம்மா?” எனக் கேட்டான். “ஏன் ஒரு ரெண்டு நாள் உங்கம்மா
இல்லாம இருக்க மாட்டியா?” என அவள் கடினமாய் கேட்டபோது அவன் தொண்டை விம்மியது.
ஒரு யுகம் கழிந்தது போல், நான்கு நாட்களில் அம்மா வந்தாள். ஓடிப்போய் கட்டிக் கொண்டவன்,
வீட்டிற்கு சென்றவுடன் முதல் வேலையாய் தங்கள் வீட்டு அடைக்கோழிக்கு அடியிலிருந்த வாத்து
முட்டையை மிக பத்திரமாக எடுத்து மீண்டும் தனது நண்பனிடமே கொடுத்துவிட்டு வந்தான்.

முற்றும்.

📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!