எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
ஒரு வாரமாக மகள் வீட்டில் இருந்துவிட்டு இன்று தான் தனது வீட்டிற்கு வந்தார். வேலை பளுவின் காரணமாக சரியாக செய்ய மாட்டார்கள் என்று தெரிந்தும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தார்.ஒரு வாரமாக மகளையும் அவள் பிள்ளையையும் நன்கு கவனித்தாலும் தன் பிள்ளைகள் போல் வளர்க்கும் செடிகள் அங்கே எப்படி இருக்குமா என்ற நினைப்பு அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது. கணவனை இழந்த பிறகு தனி மனிஷியாக மகளை திருமணம் செய்து கொடுத்து, பணி ஓய்வு பெற்று தனியாக இருப்பவருக்கு துணையே அந்த செடி கொடிகள் தானே. வீட்டிற்கு வருவதற்கு இரவு ஆகிவிட்டதால் நாளை காலையில் தோட்டத்தை பார்க்கலாம் என்று நினைத்து, பயணம் செய்த களைப்பாலும் ஒரு வாரமாக மகளின் மகளையும் கவனித்துக் கொண்டதால் வந்த உடல் அலுப்பாலும் படுப்பதும் நன்றாக உறங்கி விட்டார். வழக்கம்போல் காலை எழுந்ததும் தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு தோட்டத்தை பார்க்க வீட்டின் பின் கதவை திறந்தார். இரவெல்லாம் பலத்த மழை. விடியலில் வானம் வெறித்து வெயிலை பரப்பிக் கொண்டிருக்க, மழையில் குளித்த மகிழ்ச்சியிலும், தங்கள் எஜமானியை பார்த்த சந்தோஷத்தினாலும் மல்லிகையும் ரோஜாவும் பூத்துக் குலுங்கி சிரித்துக் கொண்டிருக்கும் பூச் செடிகளையும், காய்கறி தோட்டத்தையும் கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டே, தோட்டம் முழுவதையும் சுற்றிப் பெருக்கி முடித்து அமைதியாய் படியில் அமர்ந்து பார்க்க, மழையின் புண்ணியத்தினால் தண்ணீர் ஊற்ற தேவையில்லாமல் ஈரமாக இருந்தது தோட்டம். பூக்களை பறிக்கலாம் என்று ரோஜாவின் அருகில் செல்ல தொட்டியில் புதிதாய் முளைத்திருந்தது காளான் இரண்டு குட்டியாக.ரோஜாவின் அழகிற்கு சற்றும் குறைவில்லாமல் புதிதாய் முளைத்திருந்த அழையா விருந்தாளியை கண்ணார ரசித்து மகிழ்ந்தார். வெயில் அதிகம் வந்தால் தானாகவே மடிந்து போகும் குறைந்த ஆயுள் கொண்ட அழையா விருந்தாளியை அழகாய் தன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் மகிழ்ச்சியாக.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
