எழுத்தாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி
என் தந்தை அந்தக் காலத்து மனிதர். எனக்கு வேலைக்கு ஆர்டர் வந்தவுடன் வீட்டு பெண்கள் வெளியில் வேலைக்குப் போகக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி விட, பிறகு அதே காரியாலத்தில் வேலை செய்த என் தந்தையின் நண்பர் சுப்ரமணியம் சிபாரிசு செய்ததால் என்னை அரை மனதுடன் அனுப்பி வைத்தார்.
வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே என் தந்தை பயந்தபடி, எங்கள் காரியாலயத்திலேயே வேலை செய்த கிருஷ்ணமூர்த்தி என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பி என்னிடம் தெரிவித்தார். எனக்கும் அவர்மேல் விருப்பம் இருந்தாலும், என் தந்தை நிச்சயம் அனுமதி கொடுக்க மாட்டார் என்று அவரிடம் கூறி, அதனால் என்னால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டேன்.
என் தந்தை இந்த விவரம் அறிந்தால், என்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறி விடுவார் என்ற பயத்தில் நான் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசுவதைக் கூட நிறுத்தி விட்டேன். ஆனாலும் அவர் தன் முடிவில் தீர்மானமாக இருந்தார். என்னிடம் பேச முடியாமல், என் தந்தையின் நண்பர் சுப்ரமணியத்திடம் விவரம் கூறி, அவர் உதவியை நாடினார்.
அவர் சொன்னபடி, சுப்ரமணியம் என் வீட்டிற்கு வந்து என் தந்தையிடம், காலம் கெட்டுக் கிடப்பதால், சீக்கிரமே எனக்கு திருமணம் செய்து விடுவது நல்லது என்று கூறி, ஒரு நல்ல வரன் இருப்பதாகக சொன்னார். கிருஷ்ணமூர்த்தி பற்றி சொல்லி, தன் கீழே வேலை செய்யும் நல்ல பிள்ளை என்று கூறி அவர் குடும்பத்தைப் பற்றியும் கூறினார். நல்ல குடும்பம், ஒரே பிள்ளை, நல்ல வேலை என்று கூறியதால், என் தந்தையும் எனக்குத் சீக்கிரம் திருமணம் செய்யும் எண்ணத்திலேயே இருந்ததால், சம்மதம் தெரிவித்து விட்டார்.
பிறகு என்ன – பெண் பார்க்க அவர் குடும்பத்தினர் வர, இவரும் நல்ல பிள்ளை போல் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு சென்றார். அதன் பிறகு டும் டும் தான். அதன் பிறகு ரொம்ப நாள் பொறுத்துதான் இந்த சொல்லாமல் மறைத்த விவரத்தை என் தந்தையிடம் நாங்கள் இருவரும் கூறினோம்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!