பார்த்தெடுத்த நித்திலங்கள்
வார்த்தெடுத்தேன் மாலைகளாய்!
சேர்த்தெடுத்துப் பார்க்கையிலே
சோர்வெல்லாம் போனதம்மா!
பார்த்துப்பார்த்துக் காத்திருந்தேன்
என் ஆசைக் கணவனையே!
கோர்த்தெடுத்த மாலைகளை
கொண்டு சென்று விற்று வர!
காற்றடித்துக் கடலலைகள்
ஆர்ப்பரிக்கும்வேளையிலே!
பார்ப்பதெல்லாம் உண்மைதானா?!
கடலோடு போன என் கணவன்..
வெறும் உடலாகத் திரும்ப வந்தான்.
ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கப்
போனவனை…….
பாழ்பட்ட விஷப்பாம்பு பட்டென்று
தீண்டிடவே,
மூச்சடக்கி இருந்தவன்தான்
மூச்சடச்சுப் போனானே….நானும்
இப்போ பேச்சிழந்து போனேனே!
சிப்பிகளைக் கொன்று வாழ்ந்த
கொடுமைதனைச் செய்ததனால்
பாவத்தின் சம்பளம் மரணமோ!.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
