எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
காதலித்து மணமுடித்த கணவனை இழந்து பஞ்சு மில்லில் வார சம்பளத்திற்கு
வேலை செய்து வரும் செல்விக்கு ஒரே மகன் ஆதவன் பத்தாவது தேர்வில்
மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தபோது அவனை பெரிய ஆள் ஆக்க
வேண்டும் என்ற கனவு பலிக்கும் நாள் கண்ணில் மின்னியது.வேலை முடித்து
தலை முழுவதும் பஞ்சாக வருபவளை “எங்கம்மா அமெரிக்கால இருந்து
வரியா? தலையெல்லாம் பனியா இருக்கு” என்று கேலி செய்வான். கல்லூரி
படிப்பு முடிக்கும் முன்னரே செல்விக்கு பஞ்சு மில்லில் வேலை செய்தது
ஆஸ்துமாவாக நெஞ்சை உருக்கி உயிரை குடித்தது. கல்லூரியில் முதல்
மாணவனாக வந்து வளாக நேர்காணலில் வென்று அமெரிக்காவில் வேலை
கிடைத்தது. உடன் அழைத்து செல்ல தாய் இல்லை. அவன் அங்கு போய்
இறங்கியதும் அவன் மேல் விழுந்த பனித்துளி அம்மாவின் தலையில் இருந்த
பஞ்சுகளே ஆசிர்வாதமாய் விழுவதாய் உணர்ந்தான்.
முற்றும்.