10 வரி போட்டிக் கதை: கேட்பாரின்றி 

by admin 1
40 views

சவுதியில் வேலை பார்த்துவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்த ராஜுவை வரவேற்றது அவனது மனைவியும் மகனும். வரவேற்ற மனைவி மகனை கொஞ்சி மகிழ்ந்து தன் தாய் எங்கே என்று மனைவியை கேட்டான். வீட்டில் இருந்தால் தன் குரல் கேட்டும் இன்னும் வெளிவராமல் இருக்க மாட்டாரே என்று நினைப்பில். 

மாமியாரை கேட்டதும் மனைவியின் முகத்தில் தோன்றிய அருவருப்பை கண்டு நெற்றி சுருக்கி “அம்மா எங்கடீ?” என்று அதட்டினான். 

பதில் கூறாமல் அவளின் கண் சென்ற திசையில் இருந்த அறைக்குள் வேகமாக சென்றான். அறையின் ஒரு மூலையில் நார் கட்டிலில் அவனது தாய் படுத்த படுக்கையாக இருந்தார். தாயின் நிலை கண்டதும் கண்களில் கண்ணீர் வடிய அவரின் அருகே “அம்மா” என்று ஓடினான். 

இவ்வளவு நேரம் மகனின் குரல் கேட்டும் எழுந்து அவனைப் பார்க்க முடியவில்லை என்று வாசலையே பார்த்துக் கொண்டு படுத்திருந்த கமலத்தின் கண்களிலும் கண்ணீர் பெருகியது. 

இருள் சூழ்ந்த அறை. அறைக்குள் மருந்து மாத்திரை நெடியுடன் சிறுநீர் நெடியும் வீச, எங்கும் ஒட்டடை அடைந்து கிடந்தது. அறையின் ஒரு மூலையில் அவனை பெற்று வளர்த்த அவனது தாயும், மறுமூலையில் தன்னையும் தன் தங்கையையும் படித்து வளர்க்க உதவிய, அம்மாவின் தையல் இயந்திரமும் கேட்பார் இன்றி இருப்பதுபோல் இருக்க, “என்ன ஆச்சு?” என்று வேதனையுடன் தாயை கேட்டான். 

சென்ற வருடம் பக்கவாதம் வந்து விட்டதாகவும், மருமகள் தான் வைத்தியம் பார்ப்பதாகவும், உன்னுடன் பேசுவதற்காகவே நான் மிகவும் சிரமப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறி முடித்தார். 

வேகமாக வெளியே வந்த ராஜு மனைவியிடம் “எனக்கு ஏன் சொல்லவில்லை?” என்றான் கோபமாக. 

“நீங்க வந்ததும் சொல்லிக்கலாம் என்று தான் இருந்தேன். இனிமேலும் என்னால் அவர்களை பார்க்க முடியாது. உங்க தங்கச்சி வீட்டுக்கு அனுப்பி விடுங்க” என்று எரிச்சலாகவும் அருவருப்புடனும் கூறும் மனைவியை வேதனையாக பார்த்து, “அவர்கள் என் அம்மா, என்னுடன் தான் இருப்பார்கள். உன்னால் பார்க்க முடியாவிட்டால் போ. நான் பார்த்துக் கொள்கிறேன். 

எனக்கு ஐந்து வயதும், தங்கைக்கு இரண்டு வயதும் இருக்கும் பொழுது என் அப்பா இறந்து விட்டார். அன்றிலிருந்து எங்கள் இருவரையும் சாப்பாடு போட்டு படிக்க வைத்து நல்ல துணி எடுத்து கொடுத்து எங்களை நல்லவிதமாக பார்த்துக் கொண்ட என் அம்மாவை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியாதா?” என்று கோபமாக கேட்டுவிட்டு தன் தாயின் அருகில் வந்தான். 

ஐந்து வருடம் உங்களை எல்லாம் பார்க்காமல் அங்கு வேலை பார்த்து பணம் சம்பாதித்தது உங்கள் எல்லோருக்கும் கூடவும் மகிழ்வாக வாழத்தான். 

இங்கு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டுதான் வந்தேன். 

தையல் வேலை செய்து தானே எங்களை வளர்த்தீர்கள். அதையே நானும் என் தொழிலாக்கி கொள்கிறேன் அம்மா” என்று சொன்னது போலவே தன் தாய் கமலத்தின் பெயரில் கமலம் தையலகம் என்ற தையல் கடையை அம்மாவின் ஒரு தையல் இயந்திரம் கொண்டு ஆரம்பித்தான். 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!