எழுதியவர்: புனிதா பார்த்திபன்
சொல்: சந்தனம்
உறவினரான சந்தன மாமாவை ஒரு வேலையாக சந்திக்கப் புறப்பட்டேன். உண்மையில்
அவர் பெயர் வேலு. மாமா மதுரை தேர்முட்டியருகே சந்தனக்கடை வைத்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே அவரைக் கடையில் சந்தித்ததுண்டு. எவ்வளவு அவசரத்தில் கடந்து செல்லும் ஜனமானாலும் நாசி வழியே உச்சந்தலையை தொட்டுச் செல்லும் அந்த சந்தன மணத்தை ஒரு நொடி நின்று அனுபவித்தே செல்லும். மாமாவை நினைத்தாலே சந்தன மணம் நினைவிற்கு வருவதால், நாங்கள் அறியாமலே எங்களுக்கு சந்தன மாமாவாகிப் போனார்.
காலையில் அழைத்தபோது கடை விடுமுறையென வீட்டிற்கு வர சொல்லியிருந்தார்.
வரவேற்பரையில் என்னோடு பேசிக்கொண்டிருந்த மாமா, மீன் வாங்குவதற்காக பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற அத்தையை சத்தமாய் அரற்றினார். “ஏய் அந்தப் பொம்பளை மேல மீன் நாத்தமடிக்கும். வெளியவே வச்சு வாங்கு. கேட்டுக்குள்ள விடாத” என்றார். எனக்கு சுருக்கென்றிருந்தது.
வாசலிலே நின்று மீனை எடை போட்டுத்தந்த மீன்காரப் பெண்மணி மாமாவின் மகள் நிறைமாத
வயிற்றுடன் கடந்து செல்வதைப் பார்த்து, “வளைகாப்பு போட்டு கூட்டி வந்துட்டிங்களா மகள? இந்தாங்க புள்ளைக்கு நல்லெண்ணெய் ஊத்தி குழம்பு வச்சுக்குடுங்க” என எடை போடாமலே அதிகமாய் மூன்று மீன்களைப் போட்டுக் கொடுத்தார். மனதின் குணம் தானே மணம், இனி மாமாவை நினைக்கையில் நிச்சயமாய் சந்தன மணம் என்னகத்தினுள் வீசப்போவதில்லை என நினைத்தபடியே வெளியேறினேன் வேலு மாமாவின் வீட்டிலிருந்து.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.