எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
பழமொழி: குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுனு
‘பூனை வலம் போனா என்ன இல்லை இடம் போனா என்ன மேலே விழுந்து கடிக்காம போனா சரி’.
அர்த்தம்:
தப்பு செய்தா மனசு அதை சொல்ல முடியாம தவிக்கும்.
யாரோ எப்படியோ போகட்டும். நம்மை தொந்தரவு செய்யாம இருந்தா சரி.
“ராகவி…..! இங்கே வா..!”
“என்னங்க அம்மா…? ஏதாவது வேணுமா?”
“எனக்கு நிறைய வேலை வெளியே. நீ பசங்களை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிட்டு வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டில கொடுத்துட்டு போ.” கூறிவிட்டு அவசரமாக வெளியே சென்றார் எஜமானி.
எஜமானி எப்பொழுதும் எள் என்றால் எண்ணையாக நிற்பவள் ராகவி. பல வருடங்களாக அந்த வீட்டில் வேலை செய்பவர். எஜமானி ராணியும் ராகவிக்கு அனைத்து உதவிகளையும் செய்வார்.
வேலை முடித்து விட்டு புறப்படும் நேரம் “இன்னுமா நீ புறப்படலை?” என்று கேட்டுக் கொண்டே ஒரு பையனுடன் வீட்டிற்கு வந்தார் ராணி.
“சரி..கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன் என்று ராகவியைத் துரத்தாத குறையாகத் துரத்தினார்.
ராகவிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நமக்கென்ன? ‘என்று மனதில் நினைத்துக் கொண்டே வெளியே கிளம்பி விட்டாள்.
மறு நாள் ராணிமா வீட்டிற்கு வந்த ராகவி வெளியிலேயே நின்று விட்டாள். ராணிக்கும் அவர் கணவர் ராஜாவிற்கு ம் இடையே கடுமையான வாக்குவாதம்.
“இங்கே வச்ச பணம் எப்படி காணாமல் போகும்? பணத்தை என்ன செய்த?”
“பணத்தை எடுத்து நகை வாங்கிட்டேன். இருங்க அந்த நகையை கொண்டு வந்து தரேன்.”
“என்னைக் கேட்காம நீ பணத்தை எடுத்தது தப்பு. சம்பாதிக்கிறது நான். நீயா எடுத்து எப்படி செலவு செய்யலாம்?”என்று கத்தினார்.
“எந்த உறவு வேண்டாம்னு நான் ஒதுக்கினேனோ அவங்களோட நீ தொடர்பு வச்சு கிட்டு இருக்க”
“அவங்க வேறு யாரும் இல்லை. உங்க சொந்த தங்கை.”
” யாராவது நேற்றைக்கு வீட்டுக்கு கூட்டி வந்தையா?”
“இல்லைங்க..” இது ராணி.
அதற்குள் ராகவி யைப் பார்த்த ராணி “இவளை வேணா கேட்டுப் பாருங்கள்.’
“ராகவி..! நேத்தைக்கு இங்கு யாராவது வந்தார்களா?”
“இல்லைங்க. நான் நேத்து 1 மணி வரை இங்க தான் இருந்தேன். யாரும் வரவில்லை”
“ஐயா.. என்ன காணாமல் போச்சு.. “
“ஒன்னும் இல்லை. என் மேல் சட்டையைத் தான் தேடினேன். சரி..நீ வேலையைப் பாரு.” என்று கூறிவிட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.
ராகவிக்கு மனசில பயம். ‘நேற்றைக்கு ஒரு படிக்கிற பையனோட அம்மா வந்தாங்க. அவனுக்கு கொடுத்து இருப்பார்களோ..? ஆனால் தான் நகை வாங்கி விட்டதாக இல்லை சொன்னாங்க..’ மனதில் குழம்பினாள்.
குற்றமே நாம செய்யலை. எதற்கு இந்த குழப்பம். ‘குற்றம் செஞ்ச எஜமானி அம்மா மனசு எப்படி இருக்கும் ‘
‘குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுனு’ இருக்கும் இல்ல. நேற்றைக்கு என்னை வேலையை முடித்து விட்டு சாவியை பக்கத்து வீட்டில கொடுக்கச் சொன்ங்க. சீக்கிரமே வந்துட்டு”இன்னுமா நீ போகலை” கேட்டாங்க.
யோசிக்க யோசிக்க குழப்பம் தான். நமக்கென்ன ‘பூனை இடம் போனா என்ன வலம் போனா என்ன? மேல விழுந்து கடிக்காமல் போனா சரி’ என்று வாய் விட்டு சொல்லிவிட்டாள்.
“என்ன பழமொழி பலமா இருக்கு.
ஆமாம் உன்னளவில் பழமொழி சரி. பூனை எப்படி போனா என்ன? இடமோ வலமோ போகட்டும். உன்னை அவர் ரொம்ப கேள்வி கேட்காதது உனக்கு சந்தோஷம். எனக்கும் தான் ” என்றார் எஜமானி.
“ஆமாம் மா. இன்னும் இரண்டு தடவை கேட்டு இருந்தா நான் உங்களோட வந்த பையனைப் பற்றி சொல்லி இருப்பேன் “
“அவன் அவருடைய சொந்த தங்கை பையன். தங்கச்சி தானே விரும்பி ஒருத்தனை கல்யாணம் செய்து கிட்டு போனதால அவளை வீட்டில சேர்க்கை. பாவம் அவ நேரம் அவன் ஆக்ஸிடென்ட்ல போயிட்டான். அந்த பையன் கடைசி டிகிரி வருஷம். பரிட்சைக்கு கட்ட பணம் இல்லை. அதனால் இவருக்கு தெரியாம பணத்தை பரிட்சைக்கும் வீட்டு செலவுக்கும் கொடுத்து விட்டேன் “என்றார்.
“உங்களுக்கு நல்ல மனசு மா. என் பொண்ணுக்கும் நேத்து பீஸ் கட்ட பணம் கொடுத்தீங்க. நீங்க நல்லா இருக்கணும். நீங்க ஆயிரத்தில் ஒருவர் மா..” என்ற கண்கள் கண்ணீருடன் கூறினாள்
முற்றும்.
பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.