எழுதியவர்: தி.அறிவழகன்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு !!
வேறெதுவும் வேணுமா சார் … என்றவாறு சப்ளையர் பையன் அந்த மேஜைக்கு அருகே வந்து நின்றான்.
, உனக்கு வேறெதுவும் வேணுமா ராமசாமி… போதும்னா இதோட முடிச்சிட்டு கிளம்புவோம் என்றான் அருண். கையில் வைத்திருந்த கண்ணாடி டம்ளரில் இருந்த மிச்சத்தை ஒரே மடக்கில் விழுங்கிய
பின் , ணங் என்ற சத்தத்துடன் டம்ளரை மேஜை மீது வைத்த ராமசாமி, வாயைத் கோனி,
குறுஞ்சிரிப்பை உதிர்த்தவாறு போதும் சார்… இது ரொம்ப அதிகம் சார் … தம்பி இத்தோட கணக்கை முடிச்சி பில்லை கொண்டு வா ..
சரிங்கண்ணா, ரெண்டு நிமிஷத்துல பில்லோடு வர்றேன், என்றவனின் தலை அவர்களின் பார்வையில் இருந்து மறைந்தது. ரொம்ப நன்றி ராமசாமி… ஒருவழியா இன்னைக்கு ஒரு ரூமை பார்த்து பேசி முடிச்சிட்ட.. இன்னியோட அந்த லாட்ஜ்ல தங்குற வேலையும் , காசும் மிச்சம் … நாம சீக்கிரம்
கிளம்பலாம், பத்துமணிக்கு மேலே லிப்ட்டை வேற நிறுத்திடுறானுங்க…
எனக்கெதுக்கு சார் நன்றியெல்லாம்… அது என்னோட கடமை சார்… உங்களை மாதிரி வெளியூர்ல இருந்து, நம்ம திண்டுக்கல் ஆபிஸீக்கு மாறுதலாகி வர்ற, மேலதிகாரிங்களுக்கு வேலை செய்யிறதை என்னோட பாக்கியமாக நினைக்கிறேன் சார்…. இந்த தடவை உங்களுக்கு ஒரு ரூம் பார்க்கத்தான் ஒரு மாசத்துக்கு மேலாகிப்போச்சு…
மொத்தம் ஆயிரத்து நூத்தி இருபது ரூபாய் சார், என்றவாறு சப்ளையர் பையன் வந்து நின்றான்..
என்னது , ஆயிரத்து நூத்தி இருபதா… சரியா கணக்கு பாருங்க சார்..
சரியாத்தான் இருக்கு ராமசாமி , இந்த மாதிரி பாருக்கு வந்தால் கொஞ்சம் முன்னபின்னதான் இருக்கும் என்றவாறு, கூடுதலாக இருபது ரூபாயை for பையனின் கையில் தந்துவிட்டு, நாம் கிளம்பலாம் என்றவாறு எழுந்தான் அருண். இருந்தாலும் இது ரொம்ப அதிகம் சார்..
பரவாயில்லை, நீ தானே… நல்லதா ரூம் அமைச்சுக்குடுத்துட்டா , பெரிய பார்ட்டி குடுங்க சார்னு , ஒரு நாள் சொன்ன … நீ பாத்து வண்டியை ஓட்டி கிட்டு வீட்டுக்குப்போ ராமசாமி, நான் மெதுவா நடந்தே லாட்ஜுக்கு போறேன். வரவேற்பரையில் இருந்த மேனேஜர், அருணை பார்த்ததும் புன்முறுவல் ஒன்றைப்
பதித்தவாறு, சுவரில் தொங்கிக்கொண்டிருந்த சாவிகளில் இருந்து ஒன்றை எடுத்து நீட்டிய பின், லிப்டை ஆன் செய்யட்டுமா சார் என்றான். நோ தாங்க்ஸ்.. நான் மெதுவா நடந்தே போய்க்கிறேன்..
நேத்து நைட்டு, என்கொய்ரிக்கு வந்த போலீஸ் ரொம்ப தொந்தரவு செஞ்சிட்டாங்களா சார்..
ஆமாம்… ரொம்ப நேரமா விசாரணை, அதுல என்னோட தப்பும் இருக்கு… நேத்துனு பாத்து என்னோட ஐடி கார்டை ஆபிஸ்லயே வச்சிட்டு வந்துட்டேன்… டக்குனு நான் யாருங்கிறதுக்கு, எந்த எவிடன்சும் காட்ட முடியல. ஸாரி சார்… இதுதான் சார் நேரம்னு சொல்றது … நானும் உங்களை பத்தியும், உங்கள்
ஆபிஸ் பத்தியும் சொல்லி, நீங்க காரைக்குடியில் இருந்து ட்ரான்ஸ்பராகி வந்து, இங்கே ஒரு மாசமா தங்கி யிருக்கீங்கறதையும் சொன்னேன் இருந்தும் அவுங்க…
பரவாயில்லை… போலீஸ் அவுங்க கடமையை தானே செஞ்சாங்க… என்னத்த பெருசா கடமையை செய்றாங்க… எவனை பிடிச்சு விசாரிக்கனுமோ… அவனை பிடிச்சு விசாரிக்கிறது இல்லை.. எவனோ ஒருத்தன் எங்கேயோ இருந்துகிட்டு ஒரு மாசத்துக்குள்ள நாலு கொலையை பண்ணிட்டான்… செத்துப்போன நாலு பேருக்கும் இடையில் ஒரு சம்பந்தமும் இல்லை… ஆனால் நாலு பேரும் ஒரே மாதிரிதான் கொலை செய்ப்பட்டிருக்காங்கனு, சொல்லி கிட்டுருக்காங்களே தவிர, கொலையாளியை பத்தி, இதுவரைக்கும் ஒரு தகவல் கூட இல்லை… ஆனா விசாரணைங்கிற பேர்ல, லாட்ஜ் லாட்ஜா ஏறி இறங்கி கஸ்டமரை இம்ஸை பண்ணிகிட்டிருக்காங்க…
மேனேஜரின் பேச்சுக்கு சிரித்தவாறு… எங்க ஆபிஸ்லயும், தினமும் இந்த கொலைகளை பத்திதான் பேசிகிட்டுருக்காங்க , என்றவாறு மாடிப்படிகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அருண்.
ராமசாமியுடன் சேர்ந்து, இவனும் கொஞ்சம் குடித்திருந்ததால், லேசாக தலை கிறுகிறுத்து, நடை தடுமாறியது. இன்னியோட இந்தப் படிகளை ஏறுவதற்கு விடை கொடுக்கப்பொவதை நினைத்த போது, நேற்று காரைக்குடியில் இருந்து நண்பன் பேசியது நினைவுக்கு வந்தது….
டேய் அருண், இன்னுமாடா உனக்கு ஒரு ரூம் கிடைக்கல… ஐஸ்வர்யா லாட்ஜ்ல ரூம் போடுறது பெரிசில்லைடா…. ஐஸ்வர்யாவை ரூம்ல… அவன் எப்பவும் இப்படித்தான், என்ன பேசினாலும் அதில் வில்லங்கம் இருக்கும், என்று நினைத்தபடியே, தன்னிலை மறந்து சிரிக்கும் போது நிலை தடுமாறி, பின்னால் வந்தவரின் மேல் மோதிவிட்டு, சாரி சார் என்று குளறினான்.
இட்ஸ் ஓகே… என்றவாறு மேல்நோக்கி நடந்தவனின் மொபைல் போன் சினுங்க , தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுக்கும் போது, அதோடு சேர்ந்து வந்த பர்ஸ் கீழே விழுந்தது தெரியாமல் மேலேறினான்.
பர்ஸ் விழுந்ததை பார்த்த அருண், கையை நீட்டி எக்ஸ்க்யூஸ்மீ …. என்று குளறலாக கூறுவதற்குள் , மூன்றாவது மாடிக்கான படிகளை கடந்து வராண்டாவில் போய்க் கொண்டிருந்தான்.
பர்ஸில் இருந்து விசிட்டிங் கார்டுகள் மட்டும் வெளியே சிதறி இருக்க, பர்சையும் கார்டையும் பொறுக்கி எடுத்தவன்… எக்ஸ்க்யூஸ்மீ, என்று அழைத்தவாறு மூன்றாவது மாடியின் வராந்தாவிற்கு வர ,அவனோ அருணின் அறைக்கு இ ரண்டு அறை தள்ளியிருந்த அறையை திறந்துகொண்டு, போன் பேசிய வாறே உள்ளே சென்றான்.
ச்சே …. என்று சலித்துக்கொண்ட அருண் … நல்லவேளை ரூமுக்குள்ள போவதற்கு முன்னாடியாவது வந்தோமே … என்ற ஆறுதலோடு, மூடியிருந்த கதவுக்கு அருகில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான். கதவை திறந்து ,,வெளியே நின்றிருந்த அருணை பார்த்ததும் புன்னகை பூத்தவன்…
வணக்கம் சார்… தடுமாற்றத்துல ரூம் மாறி வந்துட்டீங்களா…
ம்ஹூம் என்று தலை ஆட்டியவன் அது இல்லை… இது என்றவாறு தன் கையில் இருந்த பர்ஸை காட்டினான். இது என்னோட பர்ஸ் தான்…. இது எப்படி என்று தன் பேண்ட் பாக்கெட்டில் கையை
விட்டு துலாவினான். நீங்க பாக்கெட்ல இருந்து போன் எடுக்கும் போது , விழுந்திருக்கும் போல… ரொம்ப
முக்கியமான போன் காலா இருந்திருக்கும் அதுதான் கவனிக்காம விட்டிருப்பீங்க…
ஆமாம் சார் … ரொம்ப முக்கியமான கால்தான் தான் சார்… உள்ளே வாங்க கொஞ்சம் நேரம் பேசிட்டு போலாம். பரவாயில்லை சார் இன்னொரு நாள் பேசலாம் என்று சொல்ல வாயெடுத்தவன், நாளைக்குத்தான் நாம் வேற ரூம் போய்டுவமே என்று மனதுக்குள் யோசிக்க ஆரம்பித்தான்.
என்ன சார் யோசனை… ஒன்னும் இல்லை என்றவாறு, உள்ளே வந்து கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன்.. அந்த இளைஞனை உற்றுப் பார்த்தான்.
திடகாத்திரமான மாநிற இளைஞன் , வயது இருபத்தி ஏழுக்குள் தான் இருக்க வாய்ப்பு உண்டு, கண்களில் கவர்ச்சி தெரிந்தாலும் ,மெலிதான சோகம் படர்ந்திருந்தது. நேத்து ராத்திரி, உங்களையும் போலீஸ் என்கொய்ரி செஞ்சாங்களா.. நான் இன்னிக்கு மதியம் தான் ரூம் போட்டேன் சார்… எதுக்காக உங்களை போலீஸ் என்கொய்ரி செஞ்சாங்க…
உங்களுக்கு விசயம் தெரியாதா, சிட்டில இந்த ஒரு மாசத்துக்குள்ள அடுத்தடுத்து நாலு கொலை நடந்திருக்காம்.. கொலையான நாலுபேருக்கும் இடையே எந்த ஒரு சம்பந்தம் இல்லைன்னாலும், நாலு பேரும் ஒரே மாதிரியே கொலை செய்யப்பட்டிருப்பதால, அந்த கொலைகாரன், ஒருத்தரோ, இல்லை ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்களாகவோ இருக்கும்னு நினைச்சு, திண்டுக்கல் மாநகரத்தையே போலிஸ் சலிச்சி கிட்டு இருக்காங்களாம்…
அதெப்படி சார்… ஒருத்தருக்கு ஒருத்தர் எந்தவித சம்பந்தமும் இல்லேன்னா… .கொலை செய்யப்பட்ட முறை மட்டும் ஒரே மாதிரியா இருக்கும்.
அது தான் ஒன்னும் புரியலை , எங்க ஆஃபீஸ்ல கூட இதைப்பத்தி தான் எப்பவும் பேசிக்கிட்டு இருக்காங்க … இந்த கொலையான நாலு பேருக்கும் இடையில், எந்த ஒரு தொடர்பு இருந்ததுக்கும் ஆதாரம், இதுவரைக்கும் கிடைக்கலைன்னு போலீஸ்காரர்கள் மண்டய பிச்சிகிட்டு இருக்காங்களாம்… யார் அந்த நாலூ பேர்ங்கிற விவரம் கூட எனக்கு சரியா தெரியலை.
அப்புறம் எப்படி சார் …. நாலு கொலையிலயும், ஒருத்தரோ இல்லைன்னா ஒரு கூட்டமோ சம்பந்தப்பட்டிருப்பாங்கனு போலீஸ் சொல்லுது… ராமசாமியோடு குடித்தது லேசாக தள்ளாட வைத்திருந்ததால், சரியாக பேசிக்கொண்டிருக்கிறோமா என்ற உள்ளுணர்வு அருணை உறுத்திக்கொண்டிருந்தது..
உட்கார்ந்து இருக்க கஷ்டமா இருந்தால், பெட்ல சாஞ்சி கால் நீட்டிக்கங்க சார்… அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, என்றவாறே படுக்கையில் உட்கார்ந்தவாறு கால்களை நீட்டிக் கொண்டான் அருண்.
சொல்லுங்க சார் … அந்த தொடர் கொலைகளை பற்றி ஏதோ சொல்ல வந்தீங்களே… அதெல்லாம் ஒன்னும் இல்லை.. போலீஸ்காரங்க அவுங்க கடமையை செய்றாங்க அவ்ளோதான்… உங்களுக்கு சொந்த ஊரு… மதுரை சார்…
ஓ..மதுரையா… நான் காரைக்குடி.. ட்ரான்ஷ்பர்ல இங்கே வந்திருக்கேன்.. நீங்க என்ன வேலையா வந்திருக்கீங்க… நான் வேலையா வரலை சார்… என் தங்கச்சி இங்கே லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கி வேலை
பார்க்குறாங்க.. தங்கச்சியை பார்க்க வந்த இடத்துலே, வேலை முடியாததால ரூம் போட்டுட்டீங்க..
அப்படியும வச்சுக்கலாம் சார், வேலை ஒன்னு … எப்போ முடியும்னு தெரியலை, முடிஞ்சதுன்னா கிளம்பிடுவேன்..
நானும் நாளைக்கு புதுசா பாத்துருக்குற ரூமுக்கு கிளம்பிடுவேன்.. உங்க தங்கச்சி எந்த ஆபிஸ்ல வேலை பார்க்குறாங்க.. இப்போ மெடிக்கல் லீவ்ல இருக்காங்க…
அப்புறம் எதுக்கு இங்கே…. என் தங்கச்சியோட ப்ரெண்ட் ரேவதி …
அவுங்களை பார்க்க வந்தீங்களா.. ஆமாம்… அவுங்க ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டு இருக்காங்க..
ஐம் ஸாரி…என்னாச்சி…
கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்காங்க. பலத்த காயத்தோட தப்பிச்சிட்டா, இன்னும் சுய நினைவு வரல… ஐயையோ… கொலை முயற்சியா… செஞ்சது யாருன்னு தெரிஞ்சதா…
அதுமட்டும் தான் யாருன்னு தெரியாம ஒரு மாசமா இருந்தோம் .. இப்போ தெரிஞ்சிருச்சி… காரணம் என்னனு முன்னாடியே தெரியும். எனக்கு நீங்க சொல்றது ஒன்னும் புரியலை, கொஞ்சம் சரக்கு வேற உள்ள போயிடுச்சா… விளக்கமா சொல்ல முடியுமா…
இப்பொழுது அவனது கண்கள் கலக்கம் கொண்டு, அதிலிருந்து கண்ணீர் வடிவது போல் தெரிந்தது.. வலக்கையால் கண்ணீர் துடைத்தவன்..பேச்சை தொடர்ந்தான்…
ரேவதி வேலை பார்க்குற ஸ்கூல்ல, ஒரு டீச்சர், முன்னாள் கவுன்சிலரோட மகனின் காமப் பசிக்கு தீனி போடுற ப்ரோக்கரோட பொண்டாட்டி.. அவ விரிச்ச வலையில் விழுந்த ரேவதியை, மயக்கமாக்கி, கசக்கி பிழிஞ்சிட்ட கவுன்சிலர் பையன், அவளை மிரட்டுவதற்காக மொபைலில் வீடியோவையும் எடுத்துட்டான். மயக்கம் தெளிந்த ரேவதி சூழ்நிலையை டக்குனு உணர்ந்து அவனோட மொபைல்போனையும் எடுத்துக்கிட்டு தப்பிச்சி வந்து, ஒரு பத்திரிகை நிருபர்கிட்ட போய் பேசியிருக்கா, எனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை அவன் என்னை மாதிரி பலபேரோட வாழ்க்கையை சீரழிச்சதுக்கான ஆதாரம் இந்த போன்ல இருக்கு, நீங்க மீடியாவுல போட்டு அந்த கிருமியை நாறடிங்கனு சொல்லியிருக்கா…
அந்த நிருபரோ, ஒரு நல்ல வக்கீலை பார்த்து, ஒரு கேஸை பைல் செஞ்ச பின்னாடி , பேப்பர்ல போட்டா… கேஸ் இன்னும் பலமாயிருக்கும்னு சொல்லி அவன் ப்ரெண்டான இன்னொரு ரிப்போர்ட்டர் கிட்ட அனுப்பறான் .. அந்த ப்ரெண்டோ காசுக்கு ஆசைப்பட்டு கவுன்சிலர் பையனோட குடும்ப வக்கீல்கிட்ட அனுப்பிட்டான். ஐயையோ என்று நெஞ்சில் கை வைத்து பதறினான் அருண்..
வக்கீல் கிட்ட போறதுக்காக ஆட்டோவுல ஏறுன ரேவதி , ஆட்டோக்காரர்கிட்ட பேச்சுவாக்குல அந்த வக்கீலைப்பற்றிய விவரம் கேட்க… அந்த ஆட்டோ ட்ரைவரு, அந்த வக்கீல் கவுன்சிலரோட பினாமின்னு சொல்லவும் , பாதி வழியில இறங்கி ரூமுக்கு வந்துட்டா..
வக்கீல் கிட்ட, ரேவதி வராததை தெரிஞ்சி கிட்ட கவுன்சிலர் மகன், அவளை தீர்த்துக் கட்ட முடிவு செஞ்சி, தன்னோடு அடியாளா இருக்குற பிரபலமான ரௌடி ராஜாவுக்கு போன் பன்றான்.
அப்புறம் என்றவாறு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் அருண்.. தூக்கம் வந்தால் இங்கேயே தூங்குங்க சார் பெரிய பெட்தானே… அதுவும் சரிதான் காலையில நேரா ரூமுக்கு போய் காலி செஞ்சிட வேண்டியதுதான்… அப்புறம் ரேவதிக்கு என்ன ஆச்சு..
ரௌடி ராஜா அப்போது சென்னைல இருந்ததால் அடுத்த வாரம் வந்து அவ கதையை முடிக்கிறேன்னு சொல்றான். வாரம் தாங்காது உடனே அவளோட கதை முடிஞ்சாகனும்னு சொல்றான் கவுன்சிலர்
மகன். உடனே தனக்கு கீழே வேலை செய்ற ரௌடிக்கு போன் போட்டு அவ கதையை முடிக்க
சொல்றான்…
ரேவதியை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்களை ஒன்னுமே பண்ண முடியலையா..நம்மால் என்ன பண்ண முடியும் சார்..
பணம் இருந்தா என்ன வேண்டுமானாலும் செய்யலாம்னு நினைக்கிற நாய்ங்களை , ரேவதி ஆசைப்பட்ட மாதிரி , சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தண்டிக்க வேண்டாமா…
சட்டத்துக்கு சாட்சிகளும் ஆதாரங்களும் வேணுமே சார், அது எங்க கிடைக்கும்… ஆதாரங்களை சட்டத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டிய சட்டப் பிரதிநிதிகளே… பணம் இருக்கும் இடத்தில் மண்டியிட்டு கிடந்தால் சட்டங்களால் எப்படி நீதியை நிலை நாட்ட முடியும் . பிறர் உயிரை எடுக்கிற அதிகாரம் எமதர்மனிடம் தானே இருக்கிறது. அதனால் அந்த எமதர்மன் ககிட்டயே வேண்டுதலை வச்சிட்டு வீட்டுக்கு திரும்பிய ரேவதியை ரௌடி ராஜாவோட கையாளான பீடி பெருமாள் மடக்கி தாக்க ஆரம்பிச்சிருக்கான் …
அந்த பக்கம் சிலரின் நடமாட்டம் தெரியவே அப்படியே விட்டுட்டு ஓடிட்டான்… அவுங்க தான் சுயநினைவு இல்லாமல் இருந்தவளை தூக்கி கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க…
உங்க தங்கச்சியோட தோழி ரேவதிக்கு நடந்த கதையை கேட்கும் போதே என் மனசு துடிக்குதுங்க, அந்த வெறிபிடித்த மனித நாய்களை வேட்டையாடி அழிக்கனும்னு வெறியே வருதுங்க…
நம்மளை போல ஆளுங்களுக்கு வெறி மட்டும் தான் வரும் சார் , ஆனால் வெற்றி மட்டும் வராது… பல பேர் வாழ்க்கையை நாசம் பண்ணிய கவுன்சிலர் பையன் சமூக சீர்திருத்த வாதியாய் மக்கள் மனதில் உயர்ந்து நிக்கிறான்… அவனை எதிர்க்க துணிந்தவர்களை மன நோயாளியாக மாற்றவர்களின் மனதில் உருவகப்படுத்தி விடுகிறான். அதுனால தான் ரேவதிக்கு நினைவு திரும்புவதற்காக காத்துகிட்டு இருக்கேன். ஆமாம் ஆமாம்… அவளுக்கு நினைவு திரும்பியவுடன் அவள் கிட்டயே இருக்கிற
ஆதாரங்களை கேட்டு வாங்கி குற்றவாளிகளை கூண்டில் ஏத்த முயற்சி செய்யுங்க, நானும் என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்றேன்.
உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி சார்.. ஆனால் நான் ரேவதிக்கு சுயநினைவு வந்ததும், ஆதாரங்களை வாங்குவதற்காக இங்கு வரவில்லை… ஆதாரங்கள் பற்றிய எதையும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பதற்காகத்தான் வந்திருக்கேன். ஏன்…
அவதான் எல்லாத்தையும் எமதர்மன் கிட்ட சொல்லிட்டாளே… அப்புறம் எதுக்கு அடுத்தவர்கள் கிட்ட சொல்லனும் ..
அருணுக்கு தூக்கம் கண்களை சொக்கவைத்துக் கொண்டிருக்க, எமதர்மன் அந்த பாவிகளோட உயிரை எடுத்துடுவான்னு நீங்க நம்புரீங்களா என்றான்… நம்பிக்கை தானே வாழ்க்கை சார் … பாவத்திற்கு கூலியாக, தக்க தண்டனையை நிச்சயம் எமதர்மன் தந்தே தீருவான்… பாவக் கணக்குகளை அவன் தானே சரிபார்க்கிறான் சார்.
ஆமாம் ஆமாம்… என்றவாறு அங்கேயே தூங்கிப் போனான் அருண். விடிந்ததும் அருண் கண்விழித்த போது, அவன் கிளம்பிக் கொண்டிருந்தான்… இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டீங்க ஆஸ்பத்திரிக்கா…
ஆமாம் சார் கொஞ்சம் நேரத்துக்கு முன்புதான் ஆஸ்பத்திரியில் இருந்து போன் வந்தது…
ரேவதிக்கு நினைவு திரும்பிடுச்சாம்… என்னை உடனே பார்க்கனும்னு சொல்லியிருக்கா , அதான் கிளம்பி கிட்டு இருக்கேன்.
ரொம்ப மகிழ்ச்சி, கடவுளும் எமதர்மனும், நிச்சயம் ரேவதிக்கு சந்தோசம் தருவார்கள் என்று சொல்லியவாறு, அருண் அவனது அறைக்கு கிளம்பினான். மதியம் மூன்று மணி சுமாருக்கு, கையில் மாலை மலர் பேப்பரோடு அருணிடம் வந்த ராமசாமி … சார் நேத்து பார்ல பேசிக்கிட்டு இருந்தோமே தொடர் கொலைகளை பத்தி …இப்போ அஞ்சாவது கொலையும் நடந்துருச்சி… அதுவும் எங்க தெரியுமா…
அப்படியா , எங்கே, எப்போ, யாரு… என்றான் அருண்.
நீங்க தங்கியிருந்த ஐஸ்வர்யா லாட்ஜில, அதே மூன்றாவது மாடியில் தான் சார்…திண்டுக்கல்லில் அவனும் ஒரு பெரிய ரவுடி சார், பேரு பீடி பெருமாள் சார் …என்னது பீடி பெருமாளா…
ஆமாம் சார்… மத்த நாலு பேரும் எப்படி கொலை ஆனாங்களோ, அதே மாதிரி தான் இவனையும் கொலை செஞ்சிருக்காங்க… முதல்ல ஸ்கூல் டீச்சர், அப்புறம் கவுன்சிலர் மகன், அடுத்து ஒரு பத்திரிகைக்காரன் , ஒரு வக்கீல், இப்போ இந்த பீடி பெருமாள், நீங்களே யோசிச்சு பாருங்க சார், இவுங்களுக்குள்ள ஏதாவது தொடர்பு இருக்க ஒரு காரணமானது இருக்குதா… கொலை நேத்து ராத்திரியே நடந்துருக்கு , காலைல பத்து மணி வரைக்கும் அவன் வெளியே வராததால, அவனோட கூட்டாளிகள் வந்து கதவை
திறக்கப் சொல்லி பார்த்தா மல்லாக்க விழுந்து செத்துக்கிடக்குறானாம், என்றவாறு பக்கத்தில் இருந்த டைப்பிஸ்ட்டிடம் பேப்பரைக் காட்ட கிளம்பினான்.
நேற்று இரவு அந்த இளைஞனோடு அவனது அறையில் தங்கியது நினைவுக்கு வர… ச்சே … பேரை க்கூட கேட்காம விட்டுட்டோமே என்று நினைத்ததும், நேற்று இரவு கீழே சிதறிய விசிட்டிங் கார்டுகளை எடுக்கும் போது, ஒன்றை எடுத்து, தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்தது நினைவுக்கு வர… பரபரப்பாய் பாக்கெட்டில் கையை விட்டு அந்த கார்டை எடுத்துப் பார்த்தான்
அதில் EMA. தர்மன், நிர்வாகி, தண்டனை அறக்கட்டளை, என்ற வாசகங்கள் இருந்தது. நீ தான் உண்மையான எமதர்மன், என்று அவனை வாழ்த்தியவாறு வேலையில் மூழ்கினான் அருண்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.