எழுதியவர்: குட்டிபாலா
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு !!
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல தயாராகவிருக்கும் அந்த விமானத்தில் சன்னலோரம் உட்கார்ந்திருந்த சக்திவேலின் மனதில் ‘இனி சென்னைக்கு எப்போது வருவோம். என்று நம் கிராமத்திற்கு போவோம்’ என்ற எண்ணங்கள் ஓடின. இனி வாழ்வே அந்த சிங்கப்பூரில்தான் என்பது முடிவு செய்த ஒன்றுதான் என்றாலும் பிறந்த ஊரின் பாசம் மனதை நெருடியது.
யாருடைய வருகைக்காகவோ காத்திருந்த விமானம் அந்த பாதிரியார் ஏறிக்கொண்டதும் புறப்படுவதற்கான அறிவிப்பினை வெளியிட்டார் விமான ஓட்டி. தனது இருக்கையை தேடியபடி வந்த பாதிரியார் சக்திவேலின் அருகில் வந்து அமர்ந்தார்.
அமைதி தவழும் அவரது முகத்தில் ஒரு ஈர்ப்பு இருப்பது போல் தோன்றியது சக்திவேலுக்கு. எழுந்தும் எழாமலும் அவரைப் பார்த்து கும்பிட்டான். பதிலுக்கு அவர் “கர்த்தர் ஆசீர்வதிப்பாராக” என்று வாழ்த்தியது குழம்பிய அவன் மனதிற்கு சற்றே ஆறுதலாக இருந்தது.
ஓடுதளத்திலிருந்து மேலே பறந்த விமானம் அரை மணி நேரம் சென்றதும் திடீரென ஒரு அறிவிப்பு–விமானத்தில் ஒரு எஞ்சின் கோளாறாகிவிட்டதால் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்வதாக.
திடீரென விமானம் நிதானமின்றி உயர்ந்தும் தாழ்ந்தும் பறப்பதை பயணிகளால் உணர முடிந்ததால் “ஆ” “ஊ” என்ற கூச்சல். விமான ஒட்டி “யாரும் அச்சப்படத் தேவையில்லை. அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் நாம் சென்னை பந்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கி விடுவோம்” என்று
தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தார்.
பயணிகள் அனைவரின் முகங்களிலும் இருந்த கலவரம் சிறிதுமின்றி அந்த பாதிரியார் மட்டும் கண்களை மூடி கையில் ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருந்தது சக்திவேலுக்கு வியப்பாக இருந்தது.
சன்னல் வழியே வெளியே பார்த்தபோது விமானம் குடிபோதையில் நிதானம் இழந்து சாலையில் தள்ளாடும் குடிமகன் போல் தோன்றியது.
கூடவே குடிபோதையில் எதிர்பாராது தான் செய்த முதல் கொலையும் அதிலிருந்து தன்னை தப்பிக்க வைத்த அரசியல்வாதியிடம் கொத்தடிமை கூலிப்படையாளாக சேர நேர்ந்ததும் நினைவுக்கு வந்தது. அவருக்காக செய்த எட்டு கொலைகளுக்காக தன்னைத் தீவிரமாக தேடிவரும் காவல்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக தலைவரின் ஆலோசனைப்படி தலைமறைவாக வசிக்க தாய் மண்ணை விட்டு சிங்கப்பூர் போக வேண்டியதாயிற்றே என்றும் எண்ணினான்.
அதே நேரம் விமானம் தலை குப்புற வேகமாக கீழே இறங்கியதும் பயணிகள் கூச்சலிட்டனர். அவன் மனதில் முதல் முதலாக மரண பயம் தோன்றியது. அருகே அமர்ந்திருந்த பாதிரியாரைப் பார்த்தான். எவ்வித சலனமுமின்றி கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருந்ததை கண்டவன் ‘இவருக்கு மட்டும் ஏன் அந்த பயம் இல்லை’ என்று வியந்தான். ‘ஒருவேளை இவருக்கு மரணமே கிடையாதோ’ என்று நினைத்து
லேசாக சிரித்தான்.
அப்போது விமானம் மீண்டும் செங்குத்தாக மேலே ஏறி மறுபடியும் வேகமாக தலைகுப்புற கீழே இறங்கியது. அச்சத்தில் பயணிகள் அலறினர்.
அவன் மனதில் தன் வாழ்வின் இறுதிக்கட்டம் நெருங்கி விட்டது என்று தோன்றியது. என்னதான் தந்திரத்தால் சட்டத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் இதுவரை தப்பித்தபோதும் தான் செய்த கொலைகளுக்கு மனசாட்சிப்படி இப்போது நியாயம் கற்பிக்க இயலவில்லை அவனால். பாதிரியாரைப் பார்த்தவன் ‘இவர்கள் மதத்தில் பாவ மன்னிப்பு என்று சொல்வார்களே. இந்த கடைசி நேரத்தில் தன் பாவங்களுக்கு இவரிடம் பாவமன்னிப்பு கேட்டால் என்ன’ என்று யோசித்தான்.
கண்களை மூடி அமர்ந்திருந்தவரை தோளில் தட்டினான். விழித்துக் கொண்டவர் “என்ன” என்று கண்களால் கேட்டார்.
“ஃபாதர், உங்களிடம் இப்போது பாவமன்னிப்பு கேட்கலாமா?” என்றான்.
பதிலேதும் சொல்லாமல் புன்முறுவல் உதித்தவர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்.
இப்போது விமானம் முன்னைவிட வேகமாக குலுங்கியது.
மறுபடியும் பாதிரியாரின் தோளைத்தட்டி “ஃபாதர் நம் அனைவரையும் மரணம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்” என்றான். அவரோ மீண்டும் புன்னகைத்துவிடுட்டு கண்களை மூடி ஜபத்தை தொடர்ந்தார்.
மீண்டும் அவரைத் தட்டியெழுப்பி “உங்களைப் போன்றோருக்கு மரணபயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற பாபிகளுக்கு அப்படி அல்ல.
எங்கள் மத கோட்பாட்டின்படி நான் செய்த பாவங்களுக்கான தண்டனையை மேலுலகத்தில் நிச்சயம் அனுபவித்தேயாக வேண்டும். ஆனாலும் கடைசியாக மரணத் தறுவாயில் தவறுகளை உணர்ந்தவருக்கு தண்டனையின் வேகம் குறையும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் மதத்திலும் பாவமன்னிப்பு என்று உள்ளதல்லவா.
ஆகவே இந்த கடைசி நேரத்தில் மரணத் தறுவாயில் என் தவறுகளை உங்களிடம் விண்ணப்பித்து பாவமன்னிப்பு கோர விரும்புகிறேன். தயவுசெய்து கேட்டு என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.
இப்போதும் கண்களாலேயே சம்மதம் சொன்னவரிடம் “எதிர்பாராமல் இருபது வயதில் குடிபோதையில் செய்த முதல் கொலை, அதற்கான தண்டனையிலிருந்து தன்னை காப்பாற்றிய அரசியல்வாதியிடம் கூலிப்படையாக மாறியது, அதன்பின் அவருக்காக தான் செய்த எட்டு கொலைகளின் விவரங்களை
சொல்லி மன்னிப்பு கோரினான்.
“கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று பாதிரியார் சொன்ன அதே நேரம் பெரும் இரைச்சலோடு தரையைத் தொட்டு ஓடுதளத்தில் ஓடிய விமானத்தில் திடீரென்று நெருப்பு பற்றியது.
விமானம் நின்றதும் பயணிகள் அனைத்து வாயில்கள் வழியாகவும் முண்டியடித்து இறங்கி ஓடினர். விரைந்து வந்த தீயணைப்பு வீர்ர்கள் இரண்டு தீயணைப்பு வண்டிகளிலிருந்து தண்ணீரை பீச்சியடித்து நெருப்பை கட்டுக்குள் கொண்டுவர போராடிக்கொண்டிருந்தனர்.
சக்திவேலும் பாதிரியாரும் வெளியே வரும் பொழுது பின்னால் வந்த பாதிரியாரை நெருப்பு சூழ்ந்து கொண்டது. திரும்பிப் பார்த்த சக்திவேல் அவர் வலதுகாலை இழுத்து இழுத்து நடப்பதை அப்போதுதான் கவனித்தான். நெருப்பின் பிடியிலிருந்து அவரால் தப்ப முடியாதென்று உணர்ந்தான். தாமதிக்காமல் அவரிடம் ஓடி அவரைப் பிடித்திழுத்து வேகமாக முன்னே தள்ளிவிட்டான். கீழே விழுந்த வேகத்தில் அவரது ஆடையில் பற்றியிருந்த தீ அணைந்துவிட்டது. ஆனால் நெருப்பு ஆவலோடு அவனைப் பற்றிக் கொண்டது. திமிற முயற்சித்தான். ஆனால் பயனில்லை.
மரணம் உறுதியென்று புரிந்து கொண்டான். தான் செய்த பாவச்செயல்களுக்கு ப்ராயச்சித்தமாக ஒரு நல்ல உயிரை காப்பாற்றும் வாய்ப்பு கிட்டியதேயென்று எண்ணி அந்த பாதிரியாரை நோக்கி கைகூப்பியபடி நெருப்பினை அணைத்துக் கொண்டான்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.