ஒரு நாள் போட்டி கதை: வரிசை எண் ஐந்து

by admin 2
137 views

எழுதியவர்: நா மதுசூதனன்  

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு !

பேருந்தில் கனகச்சிதமாக அனைத்து சீட்களிலும் ஆள்கள் அமர்ந்திருந்தார்கள். ஒரே ஒரு வரிசையில் மட்டும் ஜன்னலோரம் அவன் அமர்ந்திருந்தான். அவளுக்கு அவன் அருகில் அமர ஒரு தயக்கம் எழுந்துகொண்டே இருந்தது. இருந்தும் பயண நேரம் அதிகமிருந்ததால் கால்வலிக்கும் என்ற எண்ணமும் அழுத்தியது. ” இங்கே அமரலாமா” என்று கேட்டாள். “தாராளமா”  என்று சொன்னவன் லேசாகச் சிரித்தான். அவளுக்கு அந்தச் சிரிப்பு அவ்வளவாக நம்பிக்கையைத் தரவில்லை. அமர்ந்ததும் அந்தச் சிறிய இடத்தில் இருவரது இடுப்பும் உரசின. ஒரு மாதிரி சங்கடமாக உணர்ந்தாள்.  முன்னால் பிடித்திருக்கும் கையை அவன் இறக்கினால் சரியாக அவளது மார்பில் தான் இடிக்கும். அவனும் எவ்வளவு நேரம்  அப்படியே பிடித்துக் கொண்டிருக்க முடியும் என்று நினைத்தாள். அவள் சங்கடத்தை உணர்ந்தவன் போல் “நீங்க இயல்பா உட்காருங்க. நான் கொஞ்ச நேரம் நிக்கறேன்” என்று வெளியே வந்தான். ” இல்ல பரவால்ல, நான் இப்படி திரும்பி உட்காந்துக்கறேன். நீங்க உட்காருங்க” என்றாள். திரும்பிப் பார்க்கப் பெரும்பாலானவர்கள் உறக்கத்தில் இருந்தனர். உறங்காதவர்களில் சிலரும் எங்கே நம்மை மாற்றி அமரச் சொல்லிவிடப் போகிறார்கள் எனத் தலையைக் குனிந்து கொண்டனர். சற்றே கலைந்த தலை. சரியாகச் செதுக்கப்படாத தாடி. குறுகிய கண்கள்.  மெலிதான தேகம். சுவாசத்தில் சிகரெட் வாசம். பனியன் அணியாமல் சட்டையின் மேல் பட்டன்களைத் திறந்து விட்டிருந்தான். மெலிதான வியர்வை நெடியும் அடித்தது. தனது பயணம் இப்படி அமையும்  என்று அவள் நினைக்கவே இல்லை. சொன்னபடியே எழுந்து வெளியேறி நின்று கொண்டான். 

பெண்கள் கூட ஆண்கள் அருகே இயல்பாய் அமர்ந்து விடுவார்கள் இந்தக் காலத்தில். ஆனால் ஆண்கள் இன்னும் அந்த இயல்பு நிலைக்குப் பழகவில்லை என்றே தோன்றுகிறது. ஜன்னல் காற்று அவள் கூந்தலைக் கலைத்தது. காற்றில் குளிர் கலந்து இருந்தது.  கண்ணாடியை இழுத்து மூடினாள். கையைச் சீட்டில் ஊன்றித் தான் அதை இழுக்க வேண்டியிருந்தது. ஊன்றியபோது கையில் ஒரு பேப்பர் அகப்பட்டது. அன்றைய மாலை செய்தித்தாள். எடுத்துப் பார்த்தாள். ” சீரியல் கொலையாளியின் கைவரிசை. மூன்று மாதங்களில் நான்கு கொலைகள். அனைத்துக் கொலைகளும் ஒரே மாதிரி நடந்திருக்கின்றன. இறந்தவர்கள் யாருக்கும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லை. போலீஸ் விசாரித்து வருகிறது. ஆளரவமற்ற இடங்களில் இந்தக் கொலைகள்  நடந்திருக்கின்றன. சி சி டி வியிலும் சந்தேகத்திற்கிடமான நபர்களைக்  காண முடியவில்லை” என்று இருந்தது. ஏற்கனவே கட்டம் கட்டி வெளியிடப்பட்டிருந்த செய்தியின் நான்கு பக்கமும் சிவப்பு மையால் மேலும் ஒரு கட்டம் கட்டப்பட்டிருந்தது. வெகு இயல்பாக அவனது சட்டைப் பாக்கெட்டைப் பார்த்தாள். குத்தியிருந்த பேனாவின் மூடி சிகப்பு நிறத்தில் இருந்தது. இவன் தான் குறித்து வைத்திருப்பானோ. யாராக இருக்கும், நோக்கம் என்ன என்று அடுத்தடுத்து கேள்விகள் வந்தன. திரும்பவும் அவனைப் பார்த்தபோது இவளின் இந்தச் செயலை அவன் கவனித்திருந்தான். திரும்பவும் அதே போல ஒரு சிரிப்பு. 

அடச்சே இப்படியா அவனைப் பார்ப்பது. தவறாக நினைத்திருப்பானோ. என்னைப் பார்த்தால் ஒரு சைக்கோ மாதிரியா தெரிகிறது என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது.  உட்கார இடம் கொடுத்ததற்கு எனக்கு இது தேவைதான் என்று அவன் நினைப்பானோ என்று பலவிதமான எண்ணங்கள் அவள் மனதில் ஓடின. எங்கே இறங்க வேண்டும் என்று கேட்கவும் கூச்சமாக இருந்தது. எவ்வளவு நேரம் நின்று கொண்டே வருவான். பாவம். “உட்காருங்க பரவால்ல, எவ்வளவு நேரம் நின்னுட்டே வருவீங்க”. இல்லைங்க பரவால்ல. கால் வலிச்சா, போரடிச்சா நானே உக்காந்துக்கறேன். அதுவரை தான் எனக்கு இந்த மொபைல் இருக்கே. இதுல அடிமையாகாத ஜனம் இன்னும் இருக்கா. பத்து நிமிஷம் யூ ட்யூப், பத்து நிமிஷம் பேஸ் புக் ரீல்ஸ்னு பாத்தா நாள் முழுதும் போறதே தெரியாதுல்ல. இந்த உலகத்தைப் பைத்தியமாக்கி வெச்சுருக்கறதே இது மாதிரி சமூக ஊடகங்கள் தான். உங்கள பத்திச் சொல்ல முடியாது. நானும் அப்படியொரு பைத்தியம் தான்” என்று சிரித்தான். பின்னாலும் முன்னாலும் இருந்தவர்கள் மொபைலிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு மீண்டும் மொபைலில் மூழ்கினார்கள். 

ஜன்னலோரம் அவள் அமர்ந்திருக்க சிறிது நேரம் கழித்து அருகில் இருந்த இருக்கையில் இவளுக்கு முதுகு காட்டி முனையில் அமர்ந்து கொண்டவன் சற்று நேரம் கழித்து நேராகப் பாதி இருக்கையில் அமர்ந்தான். காலை வெளியே நீட்டினாலும் அந்தச் சீட் வழுக்கியது. வளைந்து உடைந்து விடுவது போல இருந்தது. அவஸ்தையாக இருந்தது அவனுக்கு. பேசாமல் படிக்கட்டில் சென்று அமர்ந்து விடலாமா என்றும் தோன்றியது. மணியைப் பார்த்தான் இன்னும் அரை மணிநேரப் பயணம் தான். சமாளித்துக் கொள்வோம் என நினைத்தான்.

” நான் ஒரு எழுத்தாளன் மேடம். க்ரைம் தொடர்பான கதைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம். அதற்காகத் தான் இது போன்ற செய்திகளைக் குறித்து வைப்பது வழக்கம். ஏதாவது ஒரு சமயத்தில் உதவும். இப்பொழுது கூட நீங்கள் அதைப் பார்த்து விட்டு என்னையும்  குறிப்பாக எனது பேனாவையும்  கவனித்தீர்கள். அதை நானும் பார்த்தேன். உங்கள் அப்சர்வேஷன் சரிதான்” என்றான், 

அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இப்படி ஓப்பனாகப் போட்டு உடைத்து விட்டானே என்று தன்மேல் கூச்சமும் அவன்மேல் ஒரு கடுப்பும் சேர்ந்து வந்தது. லேசாகப் புன்னகைத்தாள். அது இளிப்பு போலச் சற்று விகாரமாக  இருக்கும் என்று அவளுக்கேத் தோன்றியது. ” இது போன்ற கொலைகளுக்கு எல்லாம் ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை மேடம். பொதுவாக ஏதாவது சமூகக் கோபம், மனநிலை பிறழ்ந்த நிலை,  சிறுவயது கசப்புணர்வுகள், இல்லை ஏதாவது த்ரில்லான அனுபவம் வேண்டும் என்கிற ஒரு எண்ணம். இவை தான் பொதுவான காரணங்களாக இருக்கும். சுருக்கமாகச் சொல்லப்போனால் சைக்கோத்தனம்” என்று சிரித்தான்.” சரி விடுங்க இதைப் பத்தி நமக்கென்ன.  ஜாக்கிரதையா பாதுகாப்பா இருந்துக்க வேண்டியது தனிப்பட்ட ஒவ்வொருத்தரோட கடமை அவ்வளவு தான். யாரையுமே இந்தக் காலத்துல நம்ப முடியல” என்றாள். 

இந்த உரையாடல் ஒரு விரும்பத் தகாத ஒரு உணர்வை ஏற்படுத்தி இருந்தது. இறங்க வேண்டிய ஸ்டாப்பும் நெருங்குவதால் அதைத் தொடர வேண்டாமெனத் தோன்றியது. ” ஸ்டாப் வந்துருச்சு நான் இறங்கறேன். தாங்க்ஸ்” என்று எழுந்து முன்னே சென்று கண்டக்டரிடம் “அண்ணா அடுத்து நான் இறங்கணும்” என்றாள். இறங்கி தோளில் பையைச் சரிசெய்து கொண்டாள். அவள் நடந்து செல்ல வேண்டிய இடம் சற்று ஆளரவமற்று இருக்கும். பகலிலேயே அதிகம் நடமாட்டம் இருக்காது. இது பின்மாலைப் பொழுது. பெரிய மனிதர்கள் வசிக்கும் பகுதியாதலால் வாட்ச்மேன்கள் மட்டுமே இங்கொன்றும் அங்கொன்றுமாக இருப்பார்கள். அதுவும் கொஞ்சம் உள்ளே சென்றால் மைய பகுதியில் அந்த நடமாட்டம் கூட  இருக்காது. 

அமைதி என்பது நம் மனநிலையைப் பொறுத்தது. சந்தோஷமாக இருந்தால் அனுபவிக்கலாம். சற்று சலனத்துடன் இருந்தால் அதுவே பெரிய அரவமாகத் தெரியும். மிகப் பெரிய சாலை அது. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி போன்ற  கார்களில் வலம் வருவதால் சாலை அந்த வாகனங்களின் சக்கரங்கள் வழுக்கிக் கொண்டு போகும் தரத்தில் இருந்தது. நகரிலேயே டீக்கடையோ பெட்டிக்கடையோ இல்லாத ஒரே சாலை அது மட்டும் தான். அவை தங்கள் தெருவின் அமைதிக்கும் அழகுக்கும்  குந்தகம் விளைவிக்கும் என்று வரவிடாமல் தடுத்திருந்தார்கள். இரவில் மட்டும் போலீஸ் ரோந்து வாகனங்கள் அடிக்கடி வலம் வருவது வழக்கம். நடந்து கொண்டே இருந்தவளுக்கு உள்ளுணர்வு உறுத்தி ஏதேச்சையாகத் திரும்பியவள் பார்வையில் அவன் பட்டான். அவனும் அவளைப் பார்த்திருந்தான். அவளது நிறுத்தத்திலேயே தான் இறங்கி இருக்க வேண்டும். பின்னால் ஒரு பத்தடி தூரத்தில் வந்துகொண்டிருந்தான். 

கைப்பையில் அனிச்சையாகத் தேடினாள். ஒரு பெப்பர் ஸ்பிரேவும் இன்ன பிற சங்கதிகளும் தட்டுப்பட்டன. திரும்பிப் பார்த்ததும் கையை அசைத்தான். வேகமாக நடந்து அருகே வந்தான். ” நீங்களும் இந்த ஏரியா தானா பாத்ததே இல்லையே” என்றான். “ஆமாம் காமராஜர் தெரு பக்கத்துல” என்றாள் மையமாக. “அப்படியா. கூட நடந்து வரலாமா” என்றான். அவள் பதில் சொல்லவில்லை. அதைச் சம்மதமாகக் கருதினானோ என்னவோ கூட அமைதியாக நடக்க ஆரம்பித்தாள். உள்ளே பலவிதமான எண்ணங்கள் ஓடியது. ரத்தம் சட்டென்று சூடானது போல் தோன்றியது. காது மடலில் ஜிவு ஜிவு என்றது. சுற்றிலும் பார்த்தால் இவர்கள் இருவரைத் தவிர யாருமே இல்லை. இருபக்கமும் மரங்கள் அடர்த்தியாக வெளிச்சத்தை மறைத்துக் குளிர்ச்சியை அதிகப் படுத்திக்  கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு தெரு நாய்க் கூட்டம் கத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. டீக்கடை வைக்கக் கூடாது என்று தடுத்த அந்த வசதி படைத்த மனிதர்களைப் பற்றி அவை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உர் உர் என்று வாயைப் பிளந்து கோரைப் பற்களைக் காட்டி கூட இருந்த நாய்கள் நடக்கும் மனிதர்கள் எனப் பாகுபாடின்றி அச்சமூட்டின. 

“ஒரே ஒரு உதவி பண்றீங்களா. கொஞ்சம் ரெண்டடி முன்னால போங்க உங்க பின்னால நான் நடந்து வரேன். நாய்ங்கன்னா எனக்கு ரொம்ப பயம். போன வாரம் கூட ஒரு ஆளை ரெண்டு நாய்ங்க சேந்து கடிச்சு இப்ப ஆஸ்பத்திரில இருக்கார் அந்தாளு. நீங்க முன்னால நடந்தா நான் கொஞ்சம் தைரியமா வருவேன்” என்றாள். ” என்னையும் கடிச்சு உங்களையும் கடிச்சா என்ன பண்ணுவீங்க” என்று அசந்தர்ப்பமாகச் சிரித்தவாறே கேட்டான். ” ஜஸ்ட் ஜோக்கிங். முன்னால போறேன். பாத்து வாங்க” என்று நடந்தான். 

மறுபடி ஒரு முறை பைக்குள் கையை விட்டுச் சோதித்தாள். அக்கம் பக்கம் ஒரு ஆள் நடமாட்டம் இல்லை. அவனை ஓட்டிப் பின்னால் நடந்தாள். பையிலிருந்து அந்தக் கூர்மையான சர்ஜிக்கல் கத்தியை எடுத்தாள். முன்னால் நடந்தவனின் 

பிடரிக்குக் கீழே உள்ள பின்னங்கழுத்தில் ஆழமாக இறக்கினாள். அதிர்ச்சியில் அலறக்கூட முடியாமல் திரும்பியவன் கழுத்தில் ஒரு அரைவட்டமாக இழுத்தாள். நடைபாதையில் விழ இருந்தவன் தள்ளாடி பக்கத்தில் இருந்த சாக்கடையில் விழுந்தான். அப்படியே அடங்கிவிட்டான். கழுத்திலிருந்து கொப்பளித்து  வெளியேறிய ரத்தம் சாக்கடை நீருடன் கலந்து பயணிக்க ஆரம்பித்தது.

பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கையில் இருந்த ரத்தக்கறையையும் கீழே சற்றே சிந்தியிருந்த ரத்தத்தையும் கழுவினாள். காலையில் அடித்திருந்த வெயில் சூட்டில் தண்ணீர் இருந்த இடம் தெரியவில்லை. வேகமாக அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள். சிறிது தூரம் நடந்ததும் நின்றாள். பையின் உள்ளே இருந்து ஒரு சிறிய நோட்டை எடுத்தாள். ஒரு குறிப்பிட்ட பக்கத்தைத் திறந்தாள். வரிசை எண்  ஐந்து: பெயர்: யாரோ எழுத்தாளனாம் என்று எழுதியவள் அடுத்த வரியில் வரிசை எண் ஆறு: பெயர்: என்று எழுதித் திரும்பவும உள்ளே வைத்தாள். 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!