ஒரு நாள் போட்டி கதை: மௌன சாட்சி

by admin 2
96 views

எழுதியவர்: நா மதுசூதனன்  

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்பிணியோடு !

மேடைமேல் படுத்திருக்கும் அந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். சலனம் இல்லாமல் உறங்குவது போல் படுத்துக்கொண்டிருந்தாள். முகத்தில் இருந்த ஈரப்பதம் அந்தக் குளிர்ச்சாதன அறையின் குளிர்ச்சியில் காணாமல் போயிருந்தது. ஒரு பச்சை நிற கவுன் அணிந்திருந்தாள். அது முழங்காலைத் தாண்டி நீண்டிருந்தது. மேடைமேல் ரத்தம் திட்டுத் திட்டாய் உறைந்து போகத் துவங்கியிருந்தது. வெளியே அவள் குடும்பத்தினர் பரபரப்பாக இருந்தனர். எல்லார் முகமும் இருண்டிருந்தது. ஒரு வயதான பெண்மணி முந்தானையை வாயில் வைத்துப் பொங்கும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது போல் இருந்தது. அது இருக்கட்டும். அந்தப் பெண்ணை எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்வதற்கு முன் அவள் இங்கு எப்படி வந்தாள்  என்பது தெரியவேண்டுமல்லவா. சொல்கிறேன்.  

வீடு பரபரப்பாக இருந்தது. “காயத்ரிக்கு வலி வந்துருச்சு. சீக்கிரம் டாக்டர்கிட்ட சொல்லிடுங்க, ஆம்புலன்ஸ் இல்லன்னா, வண்டிக்குச் சொல்லிடுங்க. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை வேற வண்டி கிடைக்கறது கஷ்டம். பத்து கிலோமீட்டர் போகணும். சாலை மறியல்னு சொல்லிட்டு இருந்தாங்க. முதல்வர் பையன் வேற வராராம்,  வண்டிய சுத்தல்ல விட்ருவாங்க போலீஸ். கட்சிக்காரங்களுக்கு அதெல்லாம் ஒன்னும் கிடையாது.  பொதுசனத்துக்குத் தான் பிரச்னை” காயத்ரியின் அம்மா விடாமல் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேச்சை யாருமே கேட்டது போல் தெரியவில்லை. அவரவர் பலவேறு யோசனைகளில் ஓடிக்கொண்டிருந்தார்கள். காயத்ரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ‘இன்னும் ரெண்டு நாள் இருக்கே டாக்டர் சொன்ன தேதிக்கு. இன்னிக்கு சந்திராஷ்டமமாச்சே. இன்னிக்குத் தான இப்படி ஆகணும். அம்மா எதாவது சொல்வாளே’ என்று யோசனையில் இருந்தாள். ” ஏம்மா கொஞ்சம் பொறுத்துப் பாக்கலாமா. நாளன்னிக்கி நல்ல நாள்னு சொன்னியே என்றால் அம்மாவிடம். பைத்தியம் இதெல்லாம் அப்படித் தள்ளிப் போடா முடியுமாடி.  நாளும் கோளும் வரும் குழந்தைக்குத் தெரியுமா என்ன. பகவான் மேல பாரத்தைப் போட்டுட்டு கெளம்பு” என்றாள். அவரோட அப்பா அம்மாக்குச் சொல்லியாச்சா. அதெல்லாம் அவர் சொல்லிக்குவார். இல்ல ஆஸ்பிடல் போனொன்னா சொல்லிக்கலாம் உள்ளூர் தான. வந்துருவாங்க.”

அவள் கணவன் பரபரப்பில் ஓடிக்கொண்டிருந்தான். “இன்னிக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு ஆபீஸ்ல. வரலைன்னா அதுக்கு மூஞ்சைத் தூக்கி வெச்சுக்குவார் மானேஜர். இந்த நேரத்துல இது வேற” என்று யோசித்துக்கொண்டிருந்தான். வேறு வழியில்லை போனை போட்டுச் சொல்லிடவேண்டியது தான். வருஷ முழுதும் தான் பழியா கிடக்கிறோம். இதுக்கு கூடச் சொல்லலைனா எப்படி என்று தனக்குத் தானே ஆறுதலும் சொல்லிக் கொண்டு மேனேஜரை அழைத்து விஷயத்தைச் சொன்னான். இவன் நினைத்தது போல அவர் எதுவும் கத்தவில்லை. “அதைப் பாருப்பா முதல்ல. அந்தப் பி பி டி யை மட்டும் அனுப்பிட்டு ஒரு வார்த்தை அப்பறமா பேசிடு. நான் மேனேஜ் பண்ணிக்கறேன்” என்று வைத்துவிட்டார். குழந்தை வரும் வேளை. இவர் மனசு கூட  மாறிடுச்சு போல என்று நினைத்து மருத்துவமனைக்கும்  ஆம்புலன்சுக்கும்  போன் செய்தான். 

கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்தனர் காயத்திரியின் அம்மாவும் அவனும். ஆம்புலன்சில் கால் ஊன்றி ஏற முடியவில்லை அவளால். கண்ணிலிருந்து நீர் வழிந்தது. “ரொம்ப வலிக்குதுங்க முடியல. கொஞ்சம் பொறு த்துக்கம்மா”. 

‘ஏங்க எதாவது பெஞ்சு மாதிரி இருக்கா. உக்காந்து காலை ஊனி ஏர்ற மாதிரி’ என்று கேட்டான் ஆம்புலன்ஸ் ட்ரைவர். உள்ளே ஓடிப் போய் எடுத்து வந்தான் பக்கத்து வீட்டு பையன். ” ராம்ப் அல்லது வீல் சேர் வெச்சு ஏத்தற மாதிரி இல்லையாப்பா. அதெல்லாம் வெச்சுக்க வேண்டாமா” என்று சத்தம் போட்டார் பக்கத்து வீட்டு மாமா. 

“சார் ஆஸ்பிடல்ல மூணு ஆக்சிடன்ட் கேஸ் சார். கொண்டு போய் இறக்கின உடனே ஓடி வந்தேன் சார். மன்னிச்சுக்குங்க. இன்னிக்கு வரத்து கொஞ்சம் அதிகம் சார் ஆஸ்பிடல்ல. எங்க நிலைமையையும் புரிஞ்சுக்குங்க. டிராபிக் டைவர்ட்பண்ணி போலீஸ் வழி பண்ணி கொடுத்து இவ்வளவு சீக்கிரம் வந்துருக்கேன். தப்பா நினைக்காதீங்க”.

இரண்டு கைகளுக்கு இடையில் தனது கைகளைக் கொடுத்துக் கிட்டத்தட்ட காயத்ரியின் கணவன் அவளைத்  தூக்கினான்.அவளும் தன்னை மீறிச் சற்று உந்தி அம்புலன்ஸ் பின் புறம் அமர்ந்து ஒரு வழியாக உள்ளே சென்று அமர்ந்து விட்டாள். மெதுவாக எழுப்பி உள்ளே இருந்த சீட்டில்  படுக்க வைத்தார்கள். அருகில் தரையில் அமர்ந்து கொண்டு கையைப் பிடித்துக் கொண்டான் கணவன். அம்மா அவள் காலடியில் அமர்ந்து கொணடாள். “பெருமாளே நல்லபடியா பெத்து வரணும்பா. குருவாயூரப்பா நீ தான் காப்பாத்தணும்” என்று தோன்றிய தெய்வங்களிடம் எல்லாம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தாள்.

சந்துபொந்துகளுக்கு இடையில் அமைந்துள்ள அந்த வீடு இருந்த வீதிக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்வதே ஒரு சாதனை. அந்த வீட்டிற்கு வழி கேட்டால் மெயின் ரோடிலிருந்து உள்ளே மூணாவது லெப்ட் திரும்பி, ரெண்டாவது ரைட் எடுத்துத் திரும்ப ரெண்டாவது லெப்ட் வீட்டு வாசல்ல ஒரு வேப்பமரம் என்று அடையாளம் சொல்வார்கள்.  இந்தச் சாதனையைத் திரும்பச் செய்து மெயின் ரோட்டுக்கு வந்தான் ட்ரைவர். சாலையின் இரு பக்கமும் கம்பங்கள் ஊன்றிக் கட்சிக்கொடிகள் பறந்து கொண்டிருந்தன. ஐந்தடிக்கு ஒரு இடத்தில் குழாய் கட்டி ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டு கட்சிப் பாடல்களும், கட்சித்தலைவர் புகழ் மாலைகளும் அலறிக்கொண்டிருந்தன. இந்தக் குழாய் ஸ்பீக்கர்களை இன்னும் தடை செய்யவில்லையா என்று நினைத்தான் ட்ரைவர். 

பிரதான சாலையிலிருந்து ஊருக்குச் செல்வதற்கு ஒரு பெரிய மேடான ரோட்டில் செல்ல வேண்டும். அங்கு ஏறித் தேசிய நெடுஞ்சாலைக்கு வலது பக்கம் திரும்ப வேண்டும். நான்கு வழி சாலையாதலால் வாகனங்கள் நூறுக்குக்  குறைவாக அந்தப் பகுதியைக் கடப்பதில்லை. விபத்துகளைத் தடுக்க சாலைத் தடைகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன. தொடர்ந்து பயணம் செய்பவர்கள் இதை அறிவார்கள். அறியாத சிலர் அருகே வந்து கிரீச்சென்று பிரேக் போடுவதும் விபத்தில் சிக்குவதும் வழக்கம். மேடேறி திரும்ப நினைப்பவர்கள் நின்று வாகனங்கள் சென்றபின் தான் திரும்ப நேரிடும். ஆம்புலன்ஸ் அந்தத் திருப்பத்தில் உள்ள அந்தச் சாலைத் தடையில் ஏறி இறங்கியது. மெதுவாகத் தான் ஏறியது. இருந்தாலும் உள்ளே காயத்ரிக்கு அதுவே பெரிய அதிர்வைக் கொடுத்தது. அம்மா என்று அலறினாள். “எப்பா புண்ணியமா போகும் பாத்துப் போப்பா” என்று கத்தினாள் அம்மா. 

மேடேறி  கடந்து செல்லும் வாகனங்கள் செல்லக் காத்திருக்க நேர்ந்தது. அரசியல்வாதிகள் வாகன வரிசை என்பதால் வரிசையாக இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக வேகமாக வந்தன. அந்த வேகத்தடையில் ஏறி வலது புறம் திரும்பிக் கட்சி ஊர்வலத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முயன்றன. ஆம்புலன்சும் ஒரு வழியாகத் திரும்பிச் செல்ல ஆரம்பித்தது. நெடுஞ்சாலையில் அதே போலக் கொடிக்கம்பங்கள், வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன. இடைவெளி விடமால் ப்ளெக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டு ஆற்றலரசே, பேரரசே மாவரசே என்று பலவிதமான புகழ் சரடுகள் கோர்க்கப்பட்டிருந்தன. அந்தச் சாலையின் ஒரு புறம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மறுபுறம் வாகனங்கள்  போகவும் வரவும் ஏதுவாக இருவழிச் சாலையாக மாற்ற முயன்று கொண்டிருந்தனர் போலீசார்.  சிறிது தூரம் சென்றதுமே சாலையின் நடுவில் அந்தக் கட்சித் தலைவரின் வாரிசு நடு ரோட்டில் வண்டியை நிறுத்தித் தொண்டர்களிடம் மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். கழுத்தில் விழுந்த மாலையை அருகில் இருந்த தொண்டர்களை நோக்கியும், சால்வைகளை வண்டிக்கு உள்ளேயும் வீசிக்கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு மக்கள் இரு பக்கமும் கலைந்தனர். அவரும் வழி விடச் சொல்லிக் கைகளைக் காட்டினார். மெதுவாக ஊர்ந்து தான் செல்ல வேண்டியிருந்தது. தொண்டர்களும் வேடிக்கை பார்க்க வந்தவர்களும்  சாமான்யத்திற்கு நகர்வதாக  இல்லை. போலீசார் இருபக்கமும் லத்தியை வைத்துத் தடுத்து  வழி ஏற்படுத்திக் கொடுக்க முயன்றனர். ஒரு வழியாக அதைக் கடந்து வரவே பத்து நிமிடங்களாகிவிட்டது. 

தலையில் சைரன் விளக்கைச் சுழலவிட்டு வேகமெடுத்தது. “இன்னும் இரண்டே கிலோமீட்டர் தான்மா. அஞ்சு நிமிசத்துல போயிடலாம்” என்றவாறே பிரதான சாலையிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் இடப்பக்கம்  வண்டியைத் திருப்பினான். எங்கிருந்து வந்தான் என்று தெரியாவில்லை. இடது பக்கத்தில் உள்ள ஒரு சந்திலிருந்து வேகமாக வந்தான் ஒரு மோட்டார் சைக்கிள் இளைஞன். தாழ்வான ஒரு பகுதியிலிருந்து மேலேறி வரக்கூடிய ஒரு சாலை என்பதால் வேகமாக மேடேறியதில் வண்டி தனது கட்டுப்பாட்டை இழந்தது. விர்ரென்று சாலையைக் கடந்தது. இது போன்ற வீலிங்குகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த  ஆம்புலன்ஸ் ட்ரைவர் அதை எதிர்பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட பிரேக்கின் மேல் ஏறியே நின்றுவிட்டான். மிகப் பெரிய அதிர்வுடன் வண்டி நின்றது. மயிரிழையில் தப்பித்த அந்த இளைஞன் யோவ்…இவனைக் கத்தியதும் இல்லாமல்  என்று ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்து விட்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு வேகமெடுத்துச் சென்றே விட்டான். இந்தப் பதினைந்து வினாடிகளில் காயத்ரி பின்னே கீழே தலைக்குப்புற விழுந்திருந்தாள்.

ஒரு பெரிய மருத்துவர் குழு அவளைச் சூழ்ந்திருந்தது. ஆபரேஷன் தியேட்டர்களுக்கே உண்டான மிகப்பெரிய விளக்கு மேலே எரிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் எத்தனை மானிட்டர்கள் இருக்கின்றன என்பதை என்னால் உணரமுடியியவில்லை. மூக்கில், வாயில், என அனைத்து துளைகளிலும் ட்யூப்கள் நுழைந்திருந்தன. ” ஆபரேஷன் மட்டுமே ஒரே வழி. ரத்தம் அதிகம் சென்றுவிட்டது. எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். நீங்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் தலைமை மருத்துவர். வெளியே காயத்ரியின் அம்மாவின் பலத்த அழுகுரல் எனக்கு லேசாகக் கேட்டது. அவள் கணவன் பித்துப் பிடித்தது போல் நின்றுகொண்டிருந்தான். ” இரண்டு மணி நேரமாவது ஆகும். தைரியமா இருங்க வேற என்ன நான் சொல்ல முடியும்” என்று சொன்னவாறே சர்ஜன் உள்ளே வந்தார். கோட்டை மாட்டி விட்டார் ஒருவர். முகத்தில் மாஸ்க்கை அணிந்தார். தலையில் ஒரு குல்லா மாட்டப்பட்டது. காயத்ரியின் முகத்தைப் பார்த்தார். வலியிலும் அதிர்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும்  அந்த முகத்தில் ஒரு வித்தியாசமான  களை இருந்தது. பேத்தடிக் என்று மனதுக்குள் சொல்லியவாறே கத்தியைக் கையில் எடுத்தார்.

சில நேரம் நமக்கு மீறிய ஒரு சக்தி இயங்குவது பரிபூர்ணமாகத் தெரிவது இது போன்ற சமயங்களில் தான். அதிர்ச்சியில் தலைக்குப்புற விழுந்ததில் மொத்த அழுத்தமும் வயிற்றில் இறங்கவே உள்ளே இருக்கும் குழந்தையின் நிலை என்ன என்று அவர்களுக்குத் தெரிவிக்கும் ஒரே கருவி அந்த மானிட்டர் தான். காயத்ரியின் மூச்சு சற்று தாறுமாறாக இருக்க குழந்தையின் நாடித்துடிப்பும் உயிர்நிலையும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டது. இரண்டு உயிர்கள். ஆறு மருத்துவர்கள். விஞ்ஞான வளர்ச்சி, பத்து பேரின் பிரார்த்தனைகள் இவை அனைத்தும் அங்குக் கைகோர்த்து இயங்குவதை நான் உணர்ந்தேன். சரியாக ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சை முடிந்தது.  நன்கு ஆரோக்கியமாக ஒரு பெண் குழந்தை. பிறந்த நேரம் சரியாக மணி 1230. அடுத்த இரண்டாவது நிமிடத்தில் காயத்ரி இறந்தாள். இவை அனைத்திற்கும் மௌன சாட்சியாக நான் இருந்தேன்.

“மன்னியுங்கள்… எங்களால் குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. தனது குழந்தை பிரச்சினையின்றி பிறக்க வேண்டும் என்றே உங்கள் பெண் காத்துக் கொண்டிருந்தாள் போல. உண்மையில் எங்களுக்கு இதில் பத்து சதமானம் மட்டுமே நம்பிக்கை இருந்தது. உடலளவில் அவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குப் பிறகு இதுவே மிகப் பெரிய செயல். இதை நீங்கள் உணர்வீர்கள் என்றே நினைக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தார் டாக்டர். “ஆனால் ஒரே ஒரு பிரச்சினை. குழந்தை பிறந்து இப்போது மூன்று மணி நேரமாகிறது.  மூச்சு, நாடித்துடிப்புகள் எல்லாம் சீராக இருக்கிறது. ஆனால் பெரிதாக அசைவில்லை. இன்னும் அப்ஸர்வேஷனில் தான் வைத்திருக்கிறோம். அதன் அசைவுகளில் ஏதாவது நல்லபடியாக மாற்றம் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள்  எதிர்பார்ப்பு”.

அனைவரும் அவரவர் பங்குக்கு அழுதுகொண்டிருக்க என்னை யாரும் கவனிக்கவில்லை. இதற்கு மேலும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.   மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க என்னால் செய்ய முடிந்த ஒரே செயலைச் செய்ய முடிவெடுத்தேன். தொட்டிலில் கிடத்தப்பட்டிருந்த நான் கையைக் காலை உதறிக்கொண்டு வீல் என்று அழ ஆரம்பித்தேன். 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!