ஒரு நாள் போட்டி கதை: நானும் ஒரு நடிகை ஆவேனா

by admin 2
50 views

எழுதியவர்: சுஶ்ரீ 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகரோடு!

துர்க்காதேவி பெண்கள் கல்லூரியில் அன்று அன்யுவல் டே கொண்டாட்டம். சுபா அன்றைய தினம் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாள். ஒன்று மோனோ ஆக்டிங்,இன்னொன்று ஒரு சமூக நாடகம்.
சுபாவைப் பத்தி முதல்ல தெரிஞ்சிப்போம். சுதாகர்,தேவி தம்பதிகளுக்கு ரெண்டாவது குழந்தை, இவளுக்கு மூணு வயசு மூத்தவன் வருண். வருண் இன்ஜினியரிங் டிகிரி சில வாரங்களில் முடிக்கும் தருவாயில் இருக்கிறான். நம்ம சுபா சயன்ஸ் டிகிரி படிக்கிறாள்.
சுதாகர் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தினன்தான்,இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்ல ஒரு இன்ஜினியரிங் கம்பெனில தரக் கட்டுப்பாடு பிரிவுல சூபர்வைசர். ஓகோன்ற வருமானம் கிடையாது.எல்லா நடுத்தர மக்கள் போல 20ம் தேதிக்கு மேல தினங்களை ஓட்டறது சிரமம்தான்.அந்த 10 நாள் இடைவெளியை சமாளிக்க அவர் மனைவி தேவி சாம்பார்ப் பொடி,ரசப் பொடி,ஊறுகாய்னு பாக்கெட் போட்டு கடைகளுக்கு அனுப்புகிறாள்.அது ஓரளவு குடும்பத்தை கடனின்றி கெளரவமாக நிலை நிறுத்துகிறது.
மூத்தவன் வருணை பொறியியல் கல்லூரில படிக்க வைக்கறதுக்குள்ளே நாக்கு தள்ளி விட்டது. சீக்கிரம் ஒரு வேலை தேடிக்கோடானு சொல்லியாறது. பாவம் அவனுக்கும் சில தன் நண்பர்களைப் போல யு.எஸ். போய் எம்.எஸ். படிக்க ஆசைதான், ஆனா அது நிறைவேறாத ஆசைன்னு அவனுக்குத் தெரியும்.
இதுல பொண்ணு வேற சயன்ஸ் டிகிரிதான் படிக்கறான்னாலும் செலவு ஒண்ணும் கம்மியில்லை. இழுத்துப் பிடிச்சு வாழ்க்கை ஓடறது,குழந்தைகள் வேலைக்கு வந்து சம்பாரிச்சாதான் தலை நிமிர முடியும்.,இது குழந்தைகள் ரெண்டு பேருக்கும் தெரியும். எதுல ஆரம்பிச்சோம்? ஹாங்… அந்தப் பெண்கள் கல்லூரி அன்யுவல் டே. சுபா டென்ஷன்ல இருந்தா. இப்ப நடக்கற டான்ஸ் புரொக்ராம் முடிஞ்சவுடனே அவளோட மோனோ ஆக்டிங் புரொக்ராம்.மேடை ஏறரது இது ஒண்ணும் முதல் தடவை
இல்லைன்னாலும் ஒவ்வொரு தடவையும் இதே டென்ஷன்தான். அந்தப் பொண்ணு நல்லாதான் டான்ஸ் ஆடறா, ஆனாலும் பார்வையாளர்கள் மத்தில ஒரு அலுப்பு,நாட்டியம்லாம் ஒரே போர்னு நினைப்பு, சின்னதா ஆரம்பிச்ச விசில் சத்தம் பெரிசாயிட்டே போச்சு. நிகழ்ச்சி முடியும் முன்னரே தொடர் கைதட்டல்கள். அந்தப் பெண் நிலைகுலைந்து கண்ணீருடன் முடித்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தாள்.

இதுவே சுபாவுக்கு லேசான கலக்கத்தைக் கொடுத்தாலும்,ஒரு புன்னகையுடன் மேடைக்குப் போனாள். தன் நிகழ்ச்சியை ஆரம்பிச்சவுடனேயே வயித்தில் சிறகடித்த பட்டாம்பூச்சி பறந்தே போனது.ஒரு திறமையான நடிகை வெளியே வந்தாள். காதலனாய் கொஞ்சினாள், காதலியாய் சிணுங்கினாள், வில்லனாய் கொந்தளித்தாள், விதூஷுகனாய் சிரிக்க வைத்தாள். அந்த 20 நிமிடங்கள் பார்வையாளர்களிடமிருந்து மூச்சு சத்தமும். பாராட்டு கரகோஷமும் தவிர வேறு ஒன்றும் இல்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒன்ஸ்மோர் சத்தம், விசில்,உற்சாகக் குரல்களில் மனம் குளிர்ந்து உள்ளே ஓடினாள் சுபா.
தோழிகள்,ஆசிரியைகள் கட்டிப் பிடித்து வாழ்த்தினார்கள்.
“சுபா உன் அழகுக்கும் உன் திறமைக்கும் நீ சினிமா உலகில் நுழைந்தால் அடுத்த ஶ்ரீதேவி நீதான்.” இது ஒரு தோழி உண்மையான மகிழ்ச்சியுடன் கூறியது.
சுபாவுக்கு அனைவரும் பாராட்டி நடிகைகளுடன் ஒப்பிடுவது மகிழ்ச்சியை அளித்தாலும், சினிமான்னா கொஞ்சம் பயம்தான், நிறைய பணம் வரும், குடும்பம் வசதியா மாறும்ன்ற ஒரு சின்ன நப்பாசையும் இருப்பது உண்மை.
அன்றைய நிகழ்ச்சிகள் முடிஞ்சு தோழிகளுடன் வீடு திரும்பறப்ப, அந்த இளைஞன் அருகில் தயக்கத்துடன் வந்தான்.”ஒரு ரெண்டு நிமிஷம் உங்க கூட பேசலாமா” தோழிகள் உடன் இருக்கும் தைரியத்தில், ”என்ன விஷயம் சொல்லுங்க” முறைப்பாகவே பதிலளித்தாள்.
“ரொம்ப அழகா பெர்ஃபார்ம் பண்ணினீங்க, அதை பெர்சனலா பாராட்டணும்னு தோணிச்சு”
அவன் குரலில் கலந்திருந்த சின்ன தயக்கம்,பயம் சுபாவுக்கு சிரிப்பை வரவழைத்தது.”உங்க பாராட்டுக்கு நன்றி,அவ்வளவுதானே வேறு எதுவும் இருக்கா?”
“இருக்கு, என் நண்பனின் அப்பா சினிமா ஃபீல்ட்ல பி.ஆர.ஓ. வா இருக்கார். நீங்க ஓகே சொன்னா அவரை உங்க கிட்ட பேசச் சொல்றேன்.”
“அந்த மாதிரியெல்லாம் பிளான் எதுவுமில்லை, வீட்ல ஒத்துக்க மாட்டாங்க சினிமான்னா. சரி இதனால உங்களுக்கு என்ன லாபம்,உங்களை எனக்கு முன்னே பின்னே தெரியாதே”
“நான் சரவணன் எனக்கு ஒரு லாபமும் இல்லை இதுல சினிஃபீல்ட்ல கேமராமேனா இருக்கேன்,நல்ல சப்ஜெக்ட் கண்ல பட்டா கேமராக் கண்ணோட பாக்கறேன் அவங்களை வெள்ளித் திரைல பாக்க ஆசை
அவ்வளவுதான்.இந்தாங்க என் கார்ட் மனசு மாறினா ஃபோன் பண்ணுங்க”
கார்டை அவனிடமிருந்து அலட்சியமாக வாங்கிக் கொண்ட சுபா,”தேங்க்ஸ் ரொம்ப, வாங்கடி போலாம்” நடந்தாள். அவன் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தாள்.
வீட்டு கூடத்தில் அம்மா தன் முன்னே ஒரு பெரிய மூங்கில் முறம் நிறைய வெள்ளைப் பூண்டு வைத்துக் கொண்டு தோல் நீக்கிக் கொண்டு உக்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்,”என்னம்மா, பூண்டு ஊறுகாய் ஆர்டர் வந்திருக்கா” கேட்டுக் கொண்டே உள்ளே போய் கை,கால்,முகம் கழுவி நெற்றியில் நாசூக்காய் விபூதி அணிந்து,பழனி முருகன் படத்துக்கு முன்னால் கைகுப்பி தொழுத பின்கொண்டாள்., அம்மாவுக்கு பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள்.
தானும் முறத்திலிருந்து இயல்பாக வெள்ளைப் பூண்டை எடுத்து தோல் உரித்துக் கொண்டே,”ஏம்மா நம்ம கஷ்டங்கள் எல்லாம் எப்ப விடியும்?,என் செல்ல அம்மாவின் கைகளுக்கு எப்ப ஓய்வு கிடைக்கும்?”
“போடி கிறுக்கச்சி, எனக்கு ஒரு சிரமமும் இல்லை,டி.வி. பாத்து நேரத்தை வீணாக்காம இதெல்லாம் செய்யறேன்,பாவம் அப்பாவே ஒண்டி ஆளா எவ்வளவு கஷ்டப் படுவார்”
“அண்ணாக்கு வேலை கிடைச்சு, நானும் வேலைக்குப் போய் சம்பாரிச்சு முதல்ல நமக்குன்னு ஒரு வீடு வாங்கணும்,உன்னை ராணி மாதிரி சோஃபால உக்கார வச்சு அழகு பாக்கணும் இதுதான் எங்க ஆசை.”
அப்பதான் உள்ளே வந்த வருண்,”ஏய், என்ன அம்மாவும் பொண்ணும் ரகசியம் பேசறீங்க”
சுபா,”போடா, சும்மா கொஞ்ச நேரம் என் அம்மா பக்கத்துல உக்காந்து பேசலாம்னா, பங்கு போட வந்துருவயே,போய் கை,கால் கழுவிட்டு, எங்க ரெண்டு பேருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வா,எனக்கு ஸ்ட்ராங்,சுகர் கம்மியா”
அம்மா,”ஏய் என்னடி இன்னும் அண்ணாவை வாடா போடான்னுட்டு,யாரும் கேட்டா என்னைத்தான் சொல்லுவாங்க, பொண்ணை வளக்கத் தெரியாம வளத்திருக்கானு.”
வருணைப் பாத்து,”நீ உக்காருடா செல்லம், நானே மூணு பேருக்கும் காபி கலந்து எடுத்துட்டு வரேன்”
வருண் சுபாவைப் பாத்து,நாக்கைத் துருத்தி கேலி செய்தான்.
“டே வருண்,இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா”கேட்ட வண்ணம் அவனை நோக்கி நகர்ந்து உக்காந்தா.
“தெரியுமே, உன் காலேஜ் ஃபங்ஷன்ல நிறைய பாராட்டு கிடைச்சது,உங்க சரஸ்வதி மேடம் உன்னை தலைல தூக்கி வச்சு கொண்டாடினாங்க”
“போடா அவசரக் குடுக்கை,நீ சொன்னதும் உண்மைதான், ஆனா என் மோனோ ஆக்டிங்கை பாத்துட்டு, ஒரு பையன் பின்னாலயே வந்து வழிஞ்சான்”
“லவ்,கிவ்னு எதுலயாவது போய் மாட்டிக்காதே, முதல்ல நம்ம பேரண்ட்சை சந்தோஷமா வச்சிக்கணும் அதை மனசுல வச்சிக்கோ”
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு,”ஆமாம் உனக்கு மட்டும்தான் அம்மா, அப்பா மேல அக்கறை, நாங்கள்லாம் லவ் பண்ணி யாரையாவது இழுத்துட்டு ஓடிடுவோம்”
“சீ அப்படிச் சொல்லலைடா சுபிக் கண்ணா,இந்தக் காலத்துல பசங்க இந்த மாதிரி வேலைகள்ல ரொம்ப துடியா இருப்பானுங்க.அழகான பெண்ணைப் பாத்தா எப்படியும் வளைச்சுப் போட்டு வழிக்கு கொண்டு வர.ஆனா அந்த விதத்துல எனக்கு நிம்மதி அப்படி ஒண்ணும் பெரிய அழகி இல்லை என் தங்கைனு”
அதுக்குள்ளே அம்மா காபி டம்ளர்களோட வரவே பேச்சு பாதில நின்னது. சுபா கோபத்தோட வருணை முறைத்தாள்.அவன் குறும்புச் சிரிப்போட அவளைப் பார்த்தான்.
“எனக்கு காபி இல்லையா” என கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த சுதாகரைப் பாத்து, சந்தோஷப் புன்னகையுடன் தேவி,”உங்களுக்கு இல்லாத காபியா,இந்தாங்க இதை எடுத்துக்கங்க எனக்கு நான் வேற கலந்து எடுத்துட்டு வரேன்.” எழுந்த தேவியை தோளைப் பிடித்து அமர வைத்த சுதாகர்,”இல்லை நீ குடி,சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், இப்பதான் பிரண்ட்சோட டீ குடிச்சேன்” சொல்லிட்டே
கை,கால் கழுவ பாத் ரூம் பக்கம் போனார்.
திரும்பி வந்த சுதாகர்,”என்ன பசங்களா,அம்மாவைக் காக்கா பிடிக்கிறீங்க எதாவது காரியம் ஆகணுமா”
சுபா,”போப்பா,நீதான் அம்மாவை காக்கா பிடிச்சு ரொமான்ஸ் பண்ணினயாம் அந்தக் காலத்துல, பாவம் அம்மா ஏமாந்து போய் உன் பேச்சுல மயங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்”
தேவி இந்த வயதிலும் வெட்கம் மேலிட சிவந்த முகத்தை புடவைத் தலைப்பால் மூடிக் கொண்டாள்.
வருண் சுள்னு சுபாவோட கால்ல ஒண்ணு வச்சு,”கழுதை அப்பா கிட்ட பேசற பேச்சா இது, கொஞ்சம் கூட மரியாதை இல்லாம”
அடி விழுந்த இடத்தை தேய்த்துக் கொண்டே,”போடா வருண் குரங்கு,என் அப்பா நான் என்ன வேணா பேசுவேன்,உனக்கென்ன யு.எஸ். போறதுக்கு காக்கா பிடிக்கறே தெரியாதாக்கும் எனக்கு”
குழந்தைகள் தர்க்கத்தை ரசித்தாலும்,அவர்கள் ஆசையை பூர்த்தி செய்ய முடியாத நிலையையும் நினைத்து வருந்தவே செய்தார்,சுதாகரன். கண்களில் எட்டிப் பாத்த கண்ணீரை நாசூக்காக மேல் புஜத்தால் துடைத்துக் கொண்டு,”எனக்கும் ஆசைதான், வருணை எம்.எஸ். படிக்க வைக்கணும், குட்டிக்கு அவ ஆசைப் படற படி டான்ஸ்,பாட்டுனு கத்துக் கொடுக்கணும்னு, என்ன பண்றது இப்ப செயலற்ற நிலைல இருக்கேன்”
வருணும்,சுபாவும் பாய்ந்து அப்பாவை அணைத்துக் கொண்டார்கள்.
“நாங்க இன்னும் குழந்தைகள் இல்லை வளந்துட்டோம்,எங்க பொறுப்பு எங்களுக்குத் தெரியும் கவலைப் படாதீங்கப்பா, சீக்கிரமே நம்ம குடும்பமும், இப்ப அலட்சியம் செய்யும் சொந்தங்களுக்கு மத்தில தலை நிமிர்ந்து நடக்கும் படி செய்வோம்.”
இருவரையும் இரு புறமும் சேர்த்து அணைத்துக் கொண்டான் சுதாகர்.
கண்கள் மினுமினுக்க பெருமையுடன் கணவனைப் பார்த்த தேவி ஒரு சந்தோஷப் புன்னகையுடன்,”சரி சரி டிராமா போதும் எல்லாருமா சேந்து மளமளனு பூண்டை உரிச்சுக் கொடுங்க,இன்னிக்கே ஊறுகா போடணும்.”
அதற்குப் பிறகு அந்தக் குடும்பம் ஏதேதோ பேசிய வண்ணம் வேலையில் ஈடுபட்டது.
சுபா அன்னிக்கு நூலகம் போய் படிக்கலாம்னு,பக்கத்திலிருந்த நூலகத்துக்குப் புறப்பட்டாள். நூலக வாயிலில் மீண்டும் அந்த வாலிபன்.
பாக்காத மாதிரி உள்ளே நுழையப் போன சுபாவை மறைத்து, “நல்லதொரு வாய்ப்பு வந்திருக்கு,எனக்கு தெரிஞ்ச இயக்குனர் வேணிமைந்தன் உங்களோட அஞ்சு நிமிஷம் பேசணும்ன்னார்.”
அதற்குள் வெள்ளை வெளேர் வேஷ்டி சட்டையில் இவர்களைப் புன்னகையுடன் அணுகினார்,அந்த நடுத்தர வயது மனிதர்.
“வணக்கம்மா,நான் வேணிமைந்தன், திரைப் பட இயக்குனர், உங்க நடிப்புத் திறமையை தம்பி சரவணன் ரொம்ப ஸ்லாகித்துச் சொன்னார்.
நீங்க விருப்பப் பட்டா உங்க திறமைக்கு தகுந்த வருமானம் கிடைக்கும், அது நீங்க எதிர் பாராத நல்ல தொகையா இருக்கும்”
“அது வந்து என் பேரண்ட்சைக் கேக்கணுமே”
“கண்டிப்பா கேக்கணும் கமிட் ஆகி ஒப்பந்தம் போடறதுக்கு முன்னால, இப்ப ஒரு சிம்பிள் கேமரால உங்க மிகம் எப்படி வருதுனு பாக்க ஒரு டெஸ்ட் அவ்வளவுதான். ஒரு மணி நேரத்துல ஸ்டுடியோல இருந்து திரும்பிடலாம், தம்பி சரவணன் கூடவே இருப்பார் பயம் வேண்டாம்”

தயக்கத்துடன்,”எங்கே வரணும்”
“பக்கத்துலதான் ஸ்டுடியோ, ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துட்டு திரும்பிடலாம்”
கொஞ்சம் பயத்துடன் சரவணனைப் பார்த்தாள் சுபா.
“பயப்படாதீங்க,நான் கூடதான் இருப்பேன் பத்திரமா திரும்ப இந்த லைப்ரரில கொண்டு வந்து விட்டுடறேன்”
தயாராக டிரைவருடன் காத்திருந்த காரில ஏறி 15 நிமிட தூரத்தில் ஒரு கட்டிடத்தை அடைந்தனர். ‘வினய் ஸ்டுடியோஸ்’ னு ஒரு சின்ன போர்டு மாட்டி இருந்தது. அவர்களுடன் தயங்கித் தயங்கி நடந்தாள் சுபா.
வரவேற்பு அறை மாதிரி இருந்த முன் பகுதி மேஜையில் இருந்த பெண்ணின் உடையே கொஞ்சம் அருவருப்பாக இருந்தது.அவள் சுபாவைப் பார்த்து ஸ்நேகமாய் சிரித்தாள்.
சுபா அங்கிருந்த இருக்கையில் அமர வைக்கப் பட்டாள். இன்னொரு நடுத்தர வயது மனிதர் இவள் முன்னே வந்து அமர்ந்தார். “வணக்கம்மா நான் அட்வொகேட் சுந்தரம்,முதல்ல சில விஷயங்கள் சொல்லிடறேன். இங்கே கான்ட்ராக்ட் படி வேலை இருக்கற தினம் மட்டும்னு தினசரி சம்பளம் முடிவு பண்ணிக்கலாம். ஒரு லட்சம் ஒரு நாளைக்குனு நார்மலா நாங்க ஃபிக்ஸ் பண்ணறோம்..திறமையைப் பாத்து அதை நெகோஷியேட் பண்ணிக்கலாம்.இப்ப முதல்ல ஸகிரீன் டெஸ்ட் முடிச்சிடுங்க”
ஒரு லட்சம், ஒரு நாளைக்கா சினிமான்னா சினிமாதான் சுபாக்கு ஆச்சரியம்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே உள் அறையிலிருந்து ஏக சத்தம்.இயக்குனர் வேணிமைந்தன் குரல் ஓங்கி ஒலித்தது. “நல்ல முகவெட்டு,பாடி பில்டர் மாதிரி உடம்புனுதான் நல்ல சம்பளம் கொடுத்து கூப்டதுக்கு ஒத்துட்டுதானே வந்தே? இப்ப அதைப் பண்ண மாட்டேன்னு பெரிய உத்தமபுத்திரனாட்டம் பேசறே” அடுத்து ஓங்கி ஒலித்த குரல் சுபாவை ஸ்தம்பிக்க வைத்தது. “போங்கய்யா போங்க நீங்களும் உங்க படமும்” கத்திக் கொண்டே வெளில வந்தது வருண், கூடவே அறைகுறை ஆடையில் அந்தப் பெண்ணும்,இயக்குனரும்.
வருணும் சோஃபால சுபாவைப் பாத்து திகைத்துப் போனான். “ஏய் நீ ஏன் இங்க வந்தே,வா வெளில” கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினான் வருண்.
“இல்லைண்ணா ஸ்கிரீன் டெஸ்ட்னு கூட்டிட்டு வந்தாங்க”
“சீ சும்மா இரு படுபாவிப் பசங்க,நல்ல சம்பளம் ஒரே வருஷத்துல கோடீஸ்வரன்னு ஆசை காட்டி ஒரு நாள் பூராவும் அந்தப் பொண்ணையும் கூட வச்சிட்டு கண்ட படி நடக்கச் சொல்றாங்க. இது என்னனு இருந்து பாத்ததுல தெரிஞ்சது இவங்க அப்பாவி இளைஞர்கள் பெண்களை ஆசை காட்டி போர்ன் வீடியொ எடுத்து உலகம் பூரா அனுப்பி கோடி கோடியா சம்பாதிக்கறானுக.நீ எப்படி இவங்க கிட்ட சிக்கினே?”
அதிர்ச்சியுற்ற சுபா நடந்ததைக் கூறினாள்
“நல்ல வேளை சரியான நேரத்தில் உன்னைப் பாத்தேன்,இல்லைன்னா மயக்கி உன்னைக் கெடுத்திருப்பாங்க. இது பத்தி வீட்ல எதுவும் பேசாதே.நம்ம நல்ல நேரத்துக்கு பொறுமையா காத்திருப்போம்.
என் பிரண்டோட அப்பா கமிஷனர் ஆபீஸ்ல வேலை பாக்கறார் அவர் கிட்ட சொல்லி இவன்களை கூண்டோட கம்பி எண்ண வைக்கிறேன்.
அனுபவப் பட்ட அவர்கள் கூண்டோட பறந்து போனது வருணுக்கு தெரிய நியாயமில்லை.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!