எழுதியவர்: குட்டிபாலா
புனே இரயில்வே ஸ்டேஷன். நள்ளிரவு இரண்டு மணி. எஸ்கலேட்டரில் ஏறிக் கொண்டிருந்த ஸ்வேதாவின் காதில் விழுந்த அந்த அறிவிப்பு. கூட்டத்தின் கூச்சலில் தெளிவாக கேட்கவில்லை. இருப்பினும் கூர்ந்து கேட்டதில் அவளுக்கு தெரிந்த அறைகுறை இந்தி அறிவை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ்
ஐந்தாவது நடைமேடையிலிருந்து புறப்பட தயாராக இருக்கிறது என்று புரிந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக ஃபிளாட்பாரத்தை அடைந்தாள். இரயில் மெல்ல நகர்வதை பார்த்ததும் ஓடிச்சென்று எதிரேவந்த எஸ்7 பெட்டியில் ஏறிக்கொண்டாள்.
பெரும்பான்மை சீட்டுகள் காலியாக இருப்பதைப் பார்த்து சற்று தூரத்தில் நின்றிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் “சார் என் சீட் 32” என்று சொல்லி டிக்கெட்டை காண்பித்தாள்.
“என்ன மேடம். இது சென்னைக்கு போவதற்கான டிக்கெட். இந்த இரயில் மும்பை போகிறது” என்றதும் டிக்கெட்டை அவர் கையிலிருந்து பிடுங்கி வேகமாக கதவருகே ஓடினாள்.
திறந்திருந்த கதவடியில் நின்று கொண்டிருந்த விக்ரம் “எக்ஸ்க்யூஸ் மீ” என்று குரல் கேட்டு திரும்பி ஒதுங்கி நின்றான்.அவனைத் தள்ளிவிட்டு குதிக்க முயன்றவளை இரு கைகளாலும் பிடித்திழுத்து “என்னங்க ஏன் இந்த தற்கொலை முயற்சி” என்று இந்தியில் கத்தினான். அவன் பிடியிலிருந்து திமிறி மறுபடியும் குதிக்க முயற்சித்தவளை பின்னால் இழுத்து சற்றும் எதிர்பாராத விதமாக கன்னத்தில் பளீரென்று அறைந்தான்.
அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை சைகையால் “உள்ளே போ” என்று மிரட்டி கதவை அடைத்துவிட்டு அவளை தொடர்ந்து சென்று TTEடம் புகார் செய்தான். அவர் அவனிடம் “சென்னைக்குச் செல்லும் இரயிலுக்கு பதில் இதில் ஏறிவிட்டாள். நீங்கள் நினைப்பதுபோல் தற்கொலை முயற்சி ஒன்றுமில்லை” என்று கூறிவிட்டு அவளிடம் “காலியாக உள்ள ஒரு சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள்” என்றார்.
மேலும் அவளிடம் அந்த இரயிலில் பயணிப்பதற்கு முறையான டிக்கெட் இல்லாததால் அபராதத்தோடு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். வெறுப்பில் ஏதோ முனகியபடி அத்தொகையை கொடுத்து இரசீது வாங்கிக்கொண்டு காலியாக இருந்த ஒரு சீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துவிட்டு ஜன்னலுக்கு வெளியே தெரியும் இருட்டை வெறித்துப் பார்த்தாள். அரை மணி நேரம் சென்று அவள் எதிரே வந்து உட்கார்ந்தான் விக்ரம். அவனைப்
பார்த்ததும் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவன் “ஸாரி மேடம். நீங்கள் எதற்காகவோ தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தீர்கள் என்று தவறாக நினைத்து உங்களை தடுத்தேன். கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு ஓவராக நடந்து கொண்டேன்” என்று தன் கன்னத்தை தடவி “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று தமிழில் சொன்னான்.
உடனே “நீங்கள் தமிழா?” என்று கேட்டதற்கு “ஆம்” என்று தலையாட்டினான். “மும்பை போகிறீர்களா? என்று கேட்டாள் ஸ்வேதா. மும்பை போய் அங்கிருந்து காலை 07.15 மணி ஃப்ளைட்டில் சென்னை செல்கிறேன். நீங்கள் எப்படி சென்னைக்கு போகப் போகிறீர்கள்?” என்று கேட்டதும் கைக்குட்டையால் வாயைப்பொத்தி விம்மினாள். “சாரி மேடம்” என்ற விக்ரமிடம் “சார், இங்கே புனேயில் இரண்டு சுற்று இன்டர்வியூ முடிந்துவிட்டது. நாளை காலை 11மணிக்கு சென்னையில் ஃபைனல் இன்டர்வியூ. எப்படி போவது என்று தான் கலங்குகிறேன் என்றாள்.
“சில நேரங்களில் செலவை பொருட்படுத்தக் கூடாது. ஏன் நீங்களும் காலை ஃப்ளைட்டில் சென்னை போகலாமே” என்றதும் “இனிமேல் டிக்கெட் கிடைக்குமா” என்று கேட்டாள்.
“நான் அடிக்கடி பிளைட்டில் போய் வருவதால் ஏஜென்ட் மூலம் டிக்கட் புக் செய்வது வழக்கம். உங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லையென்றால் அவர்கள் மூலம் முயற்சிக்கிறேன்” என்றான் விக்ரம்.
“சரி” என்று அவள் சம்மதித்ததும் மொபைலில் முயற்சித்தான். அவளுடைய ஆதாரையும் அட்ரஸையும் வாங்கிக்கொண்டு ஏஐண்ட் மூலம் டிக்கெட் வாங்கிக் கொடுத்தான்.
“ரொம்ப தேங்க்ஸ்” என்ற ஸ்வேதாவிடம் “ஸாரி” என்று தன் கன்னத்தை தடவிக் காண்பித்தான்.
“இட்ஸ் ஆல் ரைட்” என்று முதன்முதலாக சிரித்தாள். சென்னை விமான நிலையத்தில் வெளியே வரும்போது அவளிடம் “உங்களை வீட்டில் இறக்கிவிட்டு போகட்டுமா” என்று கேட்டான்.
“இது எங்கள் சென்னை. நான் பஸ்ஸில் போய்க் கொள்கிறேன்” என்றவளிடம் “எதற்கும் ஜாக்கிரதை. பஸ் மாறி ஏறி மறுபடி புனே போய்விடப் போகிறீர்கள்” என்று சிரித்தான்.
“அப்படியே போய்விட்டாலும் திரும்பவும் அடித்து கூட்டி வர யாராவது வருவார்கள்” என்று கன்னத்தைத் தடவிக் காண்பித்து அவளும் சிரித்தாள்.”ஓகே பார்க்கலாம்” என்று விடைபெற்றுக் கொண்டனர்.
குறித்த நேரத்திற்கு முன்பே அந்த கம்பெனிக்கு சென்று இன்டவியூவிற்காக காத்திருந்த கூட்டத்தோடு ஐக்கியமானாள் ஸ்வேதா.
மொபைல் ஒலித்ததும் எடுத்த பிரியங்கா “ஹாய் விக்ரம். என்ன ஒரு வாரமா பேச்சே இல்லை” என்றதற்கு “அம்மாவைப் பார்க்க புனே போயிருந்தேன் காலையில் தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு “நீ தி.நகர் நாதமுனி தெருவில் தானே இருக்கிறாய்?” என்று கேட்டான்.
“ஆமாம்” என்றவளிடம் “உங்கள் தெருவில் 48 ஆம் நம்பர் வீட்டில் வசிக்கும் ஸ்வேதா என்ற பெண்ணை தெரியுமா?” என்று கேட்டான். “என்னப்பா கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே. ஏதாவது காதல் விவகாரமா?” என்று கேட்டு சிரித்தாள்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு ஸ்வேதாவை தெரியுமா? அதற்கு பதில் சொல்” என்று அதட்டும் குரலில் கேட்டதும் “அப்பா இதுவரை தெரியாது. விசாரித்து விரைவில் சொல்லுகிறேன்” என்றாள். “தேங்க்ஸ் பிரியங்கா” என்று இணைப்பை துண்டித்தான் விக்ரம்.
இரண்டு மணி நேரம் சென்று விக்ரமை போனில் அழைத்த பிரியங்கா “விக்ரம் எங்கள் கம்பெனியிலேயே ஸ்வேதா என்று ஒரு பெண் அரை மணி நேரம் முன்பு இன்டர்வியூவிற்கு வந்தாள். அவளை எங்கள் தெருவில் பார்த்ததுபோல் நினைவு.ஒருவேளை நீ தேடுபவள் இவளாக இருக்கலாமோ என்று அவள் ஃபோட்டோவை வாட்ஸாப்பில் அனுப்பியிருக்கிறேன்” என்றாள்.
பரபரப்பாக ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு “ஆமாம் அவளேதான். செலக்ட் பண்ணிவிட்டாயா?” என்று கேட்டான். “கமிட்டியில் நாளைதான் முடிவு செய்வார்கள். திறமை, அனுபவம் ஒன்றும் பெரிதாக
இருப்பதாக தெரியவில்லை” என்றவளிடம் “நீதானே HR. கமிட்டியில் பேசி செலக்ட் செய்ய முயற்சிக்கலாமே” என்றான். “அப்படியென்ன அவள் மீது உனக்கு அக்கறை” என்றாள் பிரியங்கா.
“நேற்றிரவு இரயிலில்தான் அவளை சந்தித்தேன்” என்று தொடங்கி முழு கதையையும் சொல்லிவிட்டு “உங்கள் கம்பெனியிலேயே அவளுக்கு வேலை கிடைத்தால் உன்மூலம் அவளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமே என்றுதான் கேட்கிறேன்” என்றான். எதற்காக அவளைப் பற்றி விவரங்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறாய்? காதலிக்கப் போகிறாயா? இல்லை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாயா?” என்று உரிமையோடு கேட்டாள்.
விக்ரமும் பிரியங்காவும் I.I.M. அகமதாபாத்தில் படித்தவர்கள். பிரியங்கா இறுதியாண்டில் படிக்கும்போது விக்ரம் முதல் ஆண்டில் சேர்ந்தான். இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் நன்கு பழகினர். கல்லூரிப் படிப்பு முடித்த பின்பும் அவர்கள் நட்பு தொடர்கிறது.
“புரியவில்லை பிரியங்கா. என்னவோ அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான். முடிந்தால் அவளுக்கு கமிட்டியில் சிபாரிசு செய்” என்றான்.
மறுநாள் “விக்ரம் உன் ஸ்வேதா செலக்டட்” என்றதும் “தேங்க்யூ பிரியங்கா” என்று பலமுறை அவன் சொன்னதிலிருந்தே அவன் துள்ளி குதிப்பதை இங்கிருந்தே உணர்ந்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் பிரியங்கா. பிரியங்காவை சாக்கு வைத்து ஸ்வேதாவை சந்திக்க அவர்கள் ஆபீஸுக்கு வாரமிருமுறையாவது வருவதை வாடிக்கையாக்கி விட்டான் விக்ரம். அடிக்கடி பிரியங்காவும் விக்ரமும் லஞ்ச்சுக்கு ஹோட்டலுக்கு போவது வழக்கம். பிரியங்கா மூலமாக சில முறை ஸ்வேதாவையும்
அழைத்தான். ஒருநாள் விக்ரம் “பிரியங்கா நான் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீதான் அவள் விருப்பத்தை தெரிந்து சொல்ல வேண்டும் என்றான்.
சமயம் பார்த்து ஒரு நாள் பிரியங்கா ஸ்வேதாவிடம் அவன் விருப்பத்தை சொன்னாள். விரக்தியாக சிரித்த ஸ்வேதா “பிரியங்கா, முதல் முதலில் இரயிலில் என்னை உரிமையோடு கன்னத்தில் அடித்து காப்பாற்றி பின் அதற்கு மன்னிப்பும் கேட்ட போது எனக்கும் அந்த எண்ணம் தோன்றியது. ஆனால் என் அம்மாவும் அக்காவும் காதல் கல்யாணத்திற்கு அறவே சம்மதிக்க மாட்டார்கள். அதனால் நானும் அந்த ஆசையை அன்றே எனக்குள்ளே புதைத்து விட்டேன்” என்றாள்.
“உன் அக்காவுக்கு கல்யாணம் ஆன பின் உன் கல்யாணம் என்று சொல்கிறார்களா?” என்றாள் பிரியங்கா.
“என் அக்காவுக்கு திருமணமாகிவிட்டது” என்றதும் “பின் ஏன் உனது கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்கிறாய்?” என்று கேட்டாள் பிரியங்கா.
“வீட்டுக்குத் தெரியாமல் உடன் வேலை செய்தவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட என் அக்கா ஆறே மாதங்களில் திரும்பி வந்துவிட்டாள்” என்றாள் ஸ்வேதா. “ஏன் அவன் கைவிட்டு ஓடிப் போய் விட்டானா?” என்று கேட்ட பிரியங்காவிடம் “அப்படியிருந்தாலும் பரவாயில்லையயே. சிறுவயதிலிருந்தே இராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டவன் தேர்வாகி பயிற்சிக்கு சென்றானாம் சென்றவன்
சென்றவன்தான். இரண்டு மாதங்கள் அவனிடமிருந்து செய்தி வரும் என்று காத்திருந்து அவனைப் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை என்று புலம்பியபடி தந்தை இறந்த அன்று எங்களிடம் வந்தாள். நான் அப்போதுதான் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்திருந்தேன். செய்வதறியாது திகைத்து நின்ற அம்மாவை அவள்தான் தேற்றினாள்.. அன்றிலிருந்து எங்கள் குடும்ப பொறுப்பை அவளே ஏற்றுக்கொண்டாள். என்னைப் படிக்க வைத்ததும் அவளே” என்று சற்று நிறுத்தினாள். தொடர்ந்து “அம்மா அடிக்கடி அவளை மறு கல்யாணத்திற்கு வற்புறுத்தும் போதெல்லாம் ‘அது முடிந்த கதை’ என்று சொல்லி மறுத்துவிடுவாள். அதுவுமன்றி என்னிடமும் ஆண்களோடு பழகுவதில் கண்டிப்பாகவும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று புத்திமதி சொல்வாள். எப்போதாவது காதல் கல்யாணம்
என்ற செய்தி காதில் விழுந்தால் ஆண் வர்க்கத்தையே திட்டித் தீர்த்து விடுவாள். காதல் என்பது பெண்களை மெல்ல மெல்ல கொல்லும் கொடிய நோய் என்று லெக்சர் அடிப்பாள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் என் ஆசையை வீட்டில் சொல்வதில் பயனில்லை என்பதால் விக்ரம் மீது எனக்கிருந்த ஈர்ப்பை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டேன்” என்றாள் ஸ்வேதா சோகப் புன்னகையோடு.
இவை எல்லாவற்றையும் விக்ரமிடம் தெளிவாக கூறிய பிரியங்கா “விக்ரம் ஸ்வேதாவை மறந்து விடப்பா. இது நடக்காது” என்றாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. திடீரென்று வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கிய
விக்ரமை ஆச்சரியத்தோடு வரவேற்றாள் பிரியங்கா. “உட்கார்” என்றுசொன்னவளிடம் “உடனே புறப்படு பிரியங்கா. நாம் ஸ்வேதாவின் வீட்டுக்குப் போவோம். அவள் அம்மாவிடமும் அக்காவிடமும் பேசிப் பார்ப்போம்” என்றான். பிரியங்கா எவ்வளவோ மறுத்தும் அவனின் வற்புறுத்தலால் இருவரும் அதே தெருவில் உள்ள ஸ்வேதாவின் வீட்டுக்கு முதன் முறையாக சென்றனர். வழியிலேயே அங்கு பேச வேண்டியது பற்றி ப்ரியங்காவிடம் விளக்கமாக சொன்னான் விக்ரம். அவளும் அதேபோல் அவர்களிடம் “ஸ்வேதா என்னுடன்தான் வேலை பார்க்கிறாள். இந்த விக்ரம் எனது நண்பன். நாங்கள் ஒரே கல்லூரியில் படித்தோம். நல்ல குடும்பம்.
கை நிறைய சம்பாதிக்கிறான். மிகவும் நல்லவன். இவனுக்கு ஸ்வேதாவை பிடித்திருக்கிறது. ஸ்வேதாவிடம் இவனை பிடிக்கிறதா என்று கேட்டேன். உங்கள் இருவருக்கும் சம்மதம் என்றால் ‘ஓகே’ என்றாள். உங்கள் சம்மதம் பெறவே வந்தோம்” என்றாள்.
ஸ்வேதாவின் அக்கா நந்தினி “இவர் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா?” என்று கேட்டதும் “அவர்கள் புனேயில் வசிக்கிறார்கள்” என்ற ப்ரியங்காவிடம் “அவர்களிடம் பேசி முதலில் அவர்கள் எண்ணத்தையும் தெரிந்து கொள்வோம்” என்றாள்.
“அதுவும் சரிதான்” என்று சொல்லி ப்ரியங்கா விக்ரமுடன் வெளியேறினாள். அவர்கள் சென்ற பிறகு “ஸ்வேதா, உனக்கு அந்த விக்கிரமை பிடிக்கிறதா என்ற அக்காவிடம் சற்று நேரம் தயங்கியபின் ‘ஆம்’ என்ற பாவனையில் தலையாட்டினாள்.”ஸ்வேதா, நீ அவனை உண்மையிலேயே விரும்பினால் நாம் முதலில் அவன் பெற்றோரை சந்தித்து பேசுவோம். அவனுக்கே தெரியாமல் அவனைப் பற்றி அவர்கள்
வசிக்கும் ஊரில் விசாரித்து தெரிந்து கொள்வோம். எனக்கு ஏற்பட்ட நிலைமை உனக்கும் வந்து விடக்கூடாது என்ற அக்கறையில்தான் சொல்கிறேன்” என்றாள்.
“அக்கா, உனக்கும் அம்மாவுக்கும் சம்மதமில்லையென்றால் விட்டு விடுங்கள்” என்றவளின் தோளைத் தட்டி “ஸ்வேதா, விக்ரமின் பெற்றோரின் முகவரியை வாங்கி வா. விசாரிப்போம். நமக்கு ஒத்து வருமா என்று பார்ப்போம்” என்றாள் நந்தினி. அடுத்த ஞாயிற்றுக்கிழமை. காலையில் மூவரும் புனேயில் விக்ரமின் வீட்டுக்கு சென்றனர். அழைப்புமணியை அழுத்தியதும் கதவைத் திறந்த விக்ரமின் தந்தை
தயாளனிடம் “விக்ரம் வீடுதானே?” என்று கேட்கவும் “ஆம். வாங்க. வாங்க” என்று வரவேற்றவர் உள்ளே திரும்பி “மீரா, சீக்கிரம் வா. உன் சின்ன மருமகள் வந்திருக்கிறாள்” என்றதும் விரைந்து வந்த அவர் மனைவி “வாங்க வாங்க. போட்டோவில் இருப்பதை விட நேரில் இன்னும் அழகாய் இருக்கிறாள்” என்றார்.
இரகசியமாக இவர்களைப் பார்த்து விக்ரமின் குடும்ப விஷயங்களை அறிய வந்த மூவரும் ஆச்சரியத்தில் வாயடைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதைக் கவனித்த தயாளன் “அம்மா என் மகன் விக்ரம் உங்கள் மகள் ஸ்வேதாவை விரும்புவதைப் பற்றியும் அவன் தோழி
ப்ரியங்காவுடன் உங்களை வந்து சந்தித்ததைப் பற்றியும் தெரிவித்திருந்தான் அடுத்த வாரம் நாங்கள் சென்னை வந்து உங்களை சந்திக்க திட்டமிட்டிருந்தோம். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்” என்றார்.
ஸ்வேதாவின் தாயார் “அது சரி. ஸ்வேதாவைப் பார்த்ததும் சின்ன மருமகள் என்றீர்களே. மூத்த மகனும் மருமகளும் எங்கு இருக்கிறார்கள்?” என்றதும் விக்ரமின் தாய் மீரா கண்ணீரைத் துடைத்துவிட்டு “மூத்தவன் விக்ரம் மாதிரி இல்லை. இவருக்கும் அவனுக்கும் சிறுவயதிலிருந்தே ஒத்துவரவில்லை. எப்போதும் எதிலும் வாக்குவாதந்தான்நான்தான் இருவரையும் சமாதானப்படுத்தி சமாளித்து வந்தேன்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் எங்கெங்கோ சுற்றினான். வெகு நாட்களாக தொடர்பே இல்லை. திடீரென்று நான்கு வருடங்கள் முன்பு இராணுவ மருத்துவமனையிலிருந்து இங்கே கூட்டி
வந்தார்கள். இராணுவத்தில் குதிரை சவாரி பயிற்சியின்போது கீழே விழுந்ததில் தலையில் பலமான அடி. நினைவு போய்விட்டது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. எங்களோடு இதே வீட்டில் அந்த அறையில் இருக்கிறான். என்ன செய்வது. எல்லாம் விதி என்று தேற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றாள்.
அப்போது அந்த அறையிலிருந்து “அம்மா” என்ற குரல் கேட்டது. “இதோ வருகிறேன் ப்ரேம்” என்று எழுந்து வேகமாகப் போனாள் விக்ரமின் தாய் மீரா. அதற்குள்ளாக எதிரே வந்த ப்ரேம் “அம்மா பசிக்குது” என்று குழந்தை போல் அழுதான். அவனைப் பார்த்த நந்தினி அவனிடம் ஓடிச் சென்று “ப்ரேம், என்னைத்
தெரியவில்லையா. உன் நந்தினி” என்று அவன் கைகளைப் பிடித்து ஆட்டினாள். அவன் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு “அம்மா பசிக்குது” என்று அம்மாவிடம் திரும்பி அழுதான். மீராவும் நந்தினியும் அவனை கைத்தங்கலாகக் கூட்டி வந்து சோபாவில் அமர்த்தினார்கள்.
மீரா ஒரு தட்டில் சப்பாத்தியும் குருமாவும் எடுத்து வந்தார். அதை கையில் வாங்கிய நந்தினி, கண்ணீர் வழிய அவனுக்கு வாயில் ஊட்டினாள். சாப்பிட்டு முடிந்ததும் அவனை கட்டிலில் படுக்க வைக்கும்வரை ப்ரேம் அவளையே வைத்த கண் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உறங்கியதும் மீரா, “ப்ரேமை உங்களுக்கு தெரியுமா?” என்று நந்தினியிடம் கேட்டதும் அழுது கொண்டே அவர்கள் காதலித்தது, வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டது, இராணுவத்தில் தேர்வாகி
தன்னை பிரிந்து வந்தது என்று நடந்தவை அனைத்தையும் பொலபொலவென்று கொட்டித் தீர்த்தாள்.
அவள் தலையை வருடிய மீரா தன் கணவனிடம் “இனி ப்ரேமைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சின்ன மருமகள் ஸ்வேதா நம் மூத்த மருமகளையும் கூடவே கூட்டி வந்து விட்டாள்” என்றதும் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி.ஆறு மாதங்களில் ப்ரேம் முழுவதுமாக தேறி விட்டான். தை மாதம் விக்ரம்-ஸ்வேதா திருமணம் முடிந்து இரு ஜோடிகளும் தேன் நிலவுக்கு சிம்லாவில்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.