எழுதியவர்: வானவன்(ஆகாஷ்)
அபினயன், தினமும் அதே பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தான், அவன் இதயத்தில் இடம்பிடித்த மாயாவைப் பார்ப்பதற்காக. எதுவும் பேசாமல், அவளைக் காண்பது மட்டும் அவனுக்குப் போதுமென அவன் எண்ணியிருந்தான். அவள் எப்போதும் அவனைத் தாண்டி நடந்தாலும், அவளின் அருகில் இருப்பது அவனுக்கு ஓரு அமைதியான மகிழ்ச்சியாய் இருந்தது.
ஒருநாள், மாயா அவனை நெருங்கி வந்தாள். அவனின் இதயம் சற்று அதிகமாக துடிக்கத் தொடங்கியது. அவள் கண்களில் ஒரு மர்மம் கலந்த சோர்வு தெரிந்தது. இதுவரை, அவளை இதுபோல் அவன் கண்டதில்லை. அவளின் கையில் பழைய பை ஒன்று இருந்தது. அதில் கட்டவிழ்ந்த கடிதங்களும், அவள் ஆவலுடன் எழுத முயன்று முடிக்கப்படாத கதைகளும் இருந்தன. அவளின் பார்வை நேராக அபினயனின் கண்களில் விழுந்தது.
“நாளை நான் இங்கு வரமாட்டேன்,” என மெதுவாகச் சொன்னாள்.
அபினயன் பேச முயன்றும், வார்த்தைகள் வாயை விட்டு வர மறுத்தன. ஆனால் கண்களில் நீர் தேங்கியிருந்தது.
மழை சுழன்றது, அவள் அவ்விடத்தை விட்டு விலகிப் போனாள். அவன் மழையில் நனைந்தபடி அங்கேயே நின்றான். அவள் மறைந்த பின், பஸ் நிறுத்தத்தில் மழைநீர் மட்டும் தவழ்ந்தது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.