காதல் பேசும் பிப்ரவரி: நில் கவனி காதலி

by admin 2
15 views

எழுதியவர்: குட்டிபாலா 

“என்னடி மைதிலி எங்கே இருக்கிறாய்? இன்னும் பத்து நிமிடத்தில் படம் ஆரம்பித்து விடும்” என்று படபடப்போடு மொபைலில் பொறிந்து தள்ளினாள் வனஜா. சிக்னல்கட்டானதால் எரிச்சலடைந்தவள் தியேட்டர் வாசலைப் பார்ப்பதும் வாய்க்குள் முனகுவதுமாக  பரபரப்புடன் காணப்பட்டாள்.  சிணுங்கிய மொபைலை எடுத்தவள் “வர முடியாது என்றால் முதலிலேயே சொல்லித் தொலைய வேண்டியதுதானே? 500 ரூபாய் தண்டம்” என்று எரிச்சலோடு கத்தி மொபைலை கட் பண்ணினாள்.
அன்று வெள்ளிக்கிழமை. அந்த தியேட்டரில் அவளின் அபிமான கதாநாயக நடிகரின் 25 ஆவது பட ரிலீஸ். அவளைப் போலவே மைதிலிக்கும் அந்த கதாநாயகனை பிடிக்கும்.  இருவருமே அவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களின் முதல்நாள் முதல் காட்சிக்கு எப்பாடுபட்டாவது ஆஜாராகி விடுவார்கள். பள்ளியில் படிக்கும்போது தொற்றிக் கொண்ட இந்த பழக்கம் இன்று கல்லூரி இறுதியாண்டு வரை தொடர்கிறது. இத்தனை நாளும் தவறாது வந்துவிடும் மைதிலியை விட்டுவிட்டு தான் மட்டும்
தனியாக படம் பார்க்க வேண்டி உள்ளதே என்று வருந்தினாள். ‘சிரமப்பட்டு எடுத்த ஒரு டிக்கெட் வீணாகி விடுமே என்று நினைத்து யாருக்காவது விற்று விடலாமா என்று சுற்று முற்றும் பார்த்தாள். ஆங்காங்கே நின்று நோட்டமிடும் போலீஸ்காரர்களைப் பார்த்து ‘ப்ளாக்கில் டிக்கட் விற்பவள்’ என்று தன்னைப் பிடித்துக் கொள்வரோ என்றும் பயந்தாள். மைதிலியிடம் இந்த 500ரூபாயை வசூல் பண்ணி விட வேண்டியது தான்’ என்று தேற்றிக்கொண்டு உள்ளே போவதற்காக நடந்தாள்.
அப்போது “மேடம், அந்த டிக்கெட்டை எனக்கு தருகிறீர்களா? எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன்” என்ற மெல்லிய குரல் கேட்டு திரும்பினாள். சட்டென்று நின்ற வனஜா அவனை உற்றுப் பார்த்தாள். ‘பார்ப்பதற்கு டீசன்டாக இருக்கிறான்; படித்தவன் போல் தெரிகிறது. ஆனால் எவ்வளவு விலை என்றாலும்
தருகிறேன் என்கிறானே! ஒருவேளை உள்ளே போய் பக்கத்தில் உட்கார்ந்ததும் ஏதாவது சில்மிஷம் செய்வானோ! 500 ரூபாய் வருகிறதே என்று எண்ணி வேறு சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ’ என்ற எண்ணங்கள் அவள் மனதில் ஓடின. அவள் முக பாவத்திலிருந்தே அவளின் தயக்கத்தை புரிந்து கொண்ட சங்கர் “மேடம் நானும் உங்களைப் போல் இந்த கதாநாயகனின் பிரியன்தான்- ஏன் வெறியன் என்று கூட சொல்லலாம். லேட்டா வந்ததால் டிக்கட் கிடைக்கவில்லை. நீங்கள் உங்கள் தோழியிடம் பேசியதிலிருந்து அவங்க வரவில்லை என்பது தெரிந்தது. அதனால்தான் கேட்கிறேன். உங்களுக்கும் பணம் வீணாகாதல்லவா?. பயப்பட வேண்டாம். நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். என் மீது சந்தேகப்படாமல் டிக்கட்டை கொடுத்து உதவுங்கள்” என்று கூறியபடி தனது விஸிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்தான். அதை கையில் வாங்கிப் பார்த்து “மணியடித்துவிட்டார்கள். படம் ஆரம்பிக்கப்போகிறது. வாங்க உள்ளே போகலாம்” என்று நடந்த வனஜாவை சங்கரும் பின் தொடர்ந்தான். இருவரும் உரிய சீட்டுகளில் அருகருகே அமர்ந்தனர். பாதுகாப்பாக சீட்டின் கைப்பிடியில் கை வைக்காமல் ஒருவித பயத்தோடு உட்கார்ந்திருந்தாள் வனஜா.  அதனை கவனித்த சங்கரும்  கைப்பிடியில் கை வைக்காமல் அமர்ந்திருந்தான். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வெகுவாக ரசித்த வனஜா ‘வழக்கமாக உடன் வரும் மைதிலி வராததால் வாய்விட்டு ரசனையை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்றும் கடைசி நிமிடத்தில் ஏமாற்றி விட்டாளே இந்த மைதிலி’ என்றும் மனதுக்குள்
தோழியை கடிந்து கொண்டாள். இடைவேளையில் வெளியே சென்ற சங்கர் பாப்கார்னும் ஐஸ்கிரீமும் வாங்கிவந்து அவளிடம் நீட்டினான். “தேங்க்ஸ். எனக்கு வேண்டாம்” என்ற வனஜாவிடம் “பரவாயில்லை. டிக்கெட் பணத்தில் கழித்து விட மாட்டேன். வாங்கிக்குங்க” என்று சிரித்தான்.  உள்ளூர அச்சம் இருந்தாலும்  தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள். படம் முடிந்து வெளியே வந்ததும்  அவளிடம் 500 ரூபாயை கொடுத்துவிட்டு “படம் எப்படிஇருக்கிறது?பிடித்திருக்கிறதா?”என்றான். “மிகவும் நன்றாக இருக்கிறது. ஒன்ஸ்மோர் பார்க்க வேண்டும்” என்ற வனஜாவிடம் “பொய் சொல்லாதீர்கள். நீங்கள் சரியாக படம் பார்க்கவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்” என்றான் சங்கர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று மறுத்தவளிடம் “முன்பின் தெரியாத நான் பக்கத்தில் உட்கார்ந்ததால் நீங்கள் சுதந்திரமாக ரசித்து பார்க்கவில்லை என்பது எனக்கு தெரியும். உங்களை தொந்தரவு செய்கிறோமே என்று நானும் சரியாக பார்க்கவில்லை. அதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை 11 மணி காட்சிக்கு இப்போதே ரிசர்வ் செய்யப் போகிறேன்” என்றான் சங்கர். தன்னிடம் அவன் தந்த 500 ரூபாய் நோட்டை திருப்பித் தந்து “இரண்டு டிக்கெட் ரிசர்வ் செய்யுங்கள்” என்றாள் வனஜா.
சிரித்துக் கொண்டே “இரண்டு என்ன? மூன்றாகவே வாங்கி விடுகிறேன். உங்களை ஏமாற்றிய உங்கள் தோழிக்கும் சேர்த்து” என்றவனை இடைமறித்து “வேண்டாம். வேண்டாம். இரண்டே போதும்” என்று சொல்லும்போது அவள் கன்னம் சிவப்பதைக் கண்ட சங்கர் “ஓகே. ஞாயிறு காலை சந்திப்போம்” என்று சொல்லவும் தனித்தனியாக ஆட்டோ தேடி பிரிந்தனர்  இருவரும்.
மறுநாள் சனிக்கிழமை  தோழி மைதிலியிடம் படத்தைப் பற்றியும் அபிமான கதாநாயகன் நடிப்பு பற்றியும் விரிவாக அளந்துவிட்ட வனஜா  சங்கரை சந்தித்ததைப் பற்றி சொல்லலாமா  என்று யோசித்து முடிவில் ‘வேண்டாம். அவள் ஏதாவது காது, மூக்கு வைத்து காலேஜ் முழுவதும் பரப்பி விடுவாள்’ என்று சொல்லாமல் தவிர்த்து விட்டாள்.

அவளிடம் “ஏன் கடைசி நேரத்தில் ஏதோ அவசரம் வர முடியாது என்று சொன்னாயே” என்று கேட்டதற்கு “என்னை பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள் என் பெற்றோர்” என்றாள் மைதிலி.
அதைக் கேட்டு சிரித்த வனஜா “கள்ளி. என்னிடங்கூட இதைப்பற்றி சொல்லவில்லையே! வாழ்த்துக்கள்” என்றவள் தொடர்ந்து “பையன் எப்படி நம்ம கதாநாயகன் ரேஞ்சுக்கு இருக்கிறானா? உனக்கு பிடித்திருக்கிறதா?” என்று கேள்விகளை வீசினாள்.
“போடி போ. அவங்க யாரும் வரல. என்னை படத்திற்கு வராமல் தடுத்த பாவத்தை கட்டிக் கொண்டதுதான் மிச்சம்” என்றாள். தொடர்ந்து “அதைவிடு. அந்தப் படத்திற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை போவோமா?” என்றதும் அவசர அவசரமாக “நாளைக்கு வேண்டாம். அடுத்த ஞாயிறு பார்க்கலாம்” என்று இணைப்பை துண்டித்து விட்டாள் வனஜா.
முதன்முறையாக மைதிலி சினிமாவுக்கு அழைத்து ‘வேண்டாம் என்று மறுத்தது’ அவள் மனதை உறுத்தியது. அதுவும் சங்கருடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையே அப்படி சொல்ல வைத்தது என்பதும் அவளுக்கு புரிந்தது. ஒருவேளை நான் சங்கரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேனோ என்று குழம்பினாள். சங்கருக்கே போன் செய்து வர முடியாது என்று சொல்லி விடலாமா? இல்லை மைதிலிக்கும் சேர்த்து டிக்கட் வாங்கி அவளையும் அழைத்து போகலாமா என்று மேலும் குமைந்தாள். ஆனால் அவள்
உள்ளத்தில்  சங்கரை தனியாக சந்திக்க வேண்டும் என்ற ஆவலே ஓங்கியது. ஞாயிற்றுக்கிழமை.
விடிந்தது முதலே பரபரப்பாக இருந்தாள் வனஜா. 10:30 மணிக்கெல்லாம் தியேட்டர் வாசலில் சங்கரை எதிர்பார்த்து காத்திருந்தாள். நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர சங்கரைக் காணோம். ஏமாற்றி விட்டானோ என்று யோசித்தாள். படக்காட்சி தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது ஆட்டோவில்  வந்திறங்கிய சங்கரைப் பார்த்து நிம்மதி அடைந்தாள். இருவரும் உள்ளே சென்றனர்.
அன்று போலவே அருகருகே அமர்ந்திருந்தாலும் ஏதும் பேசாமல் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர். இவளுக்கோ படத்தில் நாட்டமே இல்லை. அடிக்கொருமுறை அவனை ஓரக் கண்ணால் கவனித்தவாறு அமைதியின்றி உட்கார்ந்திருந்தாள். பேசாமல் எழுந்து போய்விடலாமா என்று கூட நினைத்தாள். இடைவேளை வந்தது. “மேடம் வாங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டு வருவோம்” என்று அழைத்தான் சங்கர். ஏதோ சொல்வதற்காகத்தான் இந்த அழைப்பு என்று நினைத்து மனதிற்குள் மகிழ்ந்த வனஜா
“என் பெயர் வனஜா. மேடமில்லை” என்றாள். “ஓகே” என்றான் சிரித்தபடி.

ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு சற்று தொலைவில் வந்ததும் அவள் சற்றும் எதிர்பாராதவாறு”வனஜா. நான் உங்களை விரும்புகிறேன். காதலித்து கல்யாணம் என்பது என் கொள்கை. என் நல்ல காலம். அன்று உங்கள் தோழி வராததால் உங்களை சந்திக்க நேர்ந்தது.  ஏனோ தெரியவில்லை உங்களைப் பார்த்ததுமே நீங்கள்தான் எனக்காக பிறந்தவள் என்று தோன்றியது.  இன்றைய படக்காட்சிக்கு
என்னுடன் வருவதற்கு நீங்கள் ஒத்துக் கொண்டதுமே உங்களுக்கும் என் மீது நல்ல அபிப்பிராயம் உள்ளது என்று புரிந்து கொண்டேன். இனி உங்கள் சம்மதம் கிடைத்தால் முறைப்படி பெற்றோருடன் வந்து உங்கள் வீட்டாரிடம் பேசத் தயாராக இருக்கிறேன்” என்றான்.
இது ஓரளவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் முகத்திற்கு நேராக அதிரடியாக தன் காதலை சொன்னது அவள் மனதை ஒருவிதமாக நெருடியது.  பதில் ஏதும் சொல்லாமல் தன் சீட்டில் போய் அமர்ந்த வனஜா படம் முடிந்து தியேட்டரைவிட்டு வெளியில் வரும் வரை எதுவும் சொல்லவில்லை.
ஆட்டோவில் அவள்  புறப்பட்டபோது “பிறகு எப்போது பார்க்கலாம்?” என்ற சங்கரின் கேள்விக்கும் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆர்வ மிகுதியில் அவசரப்பட்டு விட்டேனோ! இல்லை அவளுக்கும் தன்மீது காதல் என்று தவறாக எண்ணிவிட்டேனோ! என்று குமைந்தான்.. வனஜாவின் மொபைல் எண்கூட
தெரியாதே. எப்படி அவளைத் தேடிப்பிடிப்பது என்று வருந்தினான். நாட்கள் ஏழு ஓடி மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இன்று.
காலை எழுந்ததிலிருந்தே கடந்த ஞாயிறு வனஜாவுடன் இருந்ததையும் அவசரப்பட்டு காதலை சொல்லப்போய் அவளின் நட்பை இழந்ததையும் எண்ணி நொந்துகொண்டான்.
அன்று மாலை  மொபைலில் வனஜா அழைக்கவும் “ஸாரி மேடம். அன்று அநாகரீகமாக நடந்து கொண்டதற்கு மன்னியுங்கள்” என்றதும் கலகவென்று சிரித்தாள் வனஜா.
“எல்லாமே அவசரந்தானா உங்களுக்கு. அன்று காதலை சொல்வதற்கு அவசரம். இன்று மன்னிப்பு கேட்கவும் அவசரம்” என்றாள். தொடர்ந்து “வரும் வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று வீட்டில் சொல்கிறார்கள். உங்களை பெற்றோரோடு வரச் சொல்லி இருக்கிறார்கள்” என்று சொன்னதும் குஷியானான் சங்கர். “ஆமாம். எப்படி என் மொபைல் நம்பர் கிடைத்தது?” என்று கேட்டதற்கு “அதுவும்
உங்கள் அவசரத்தால்தான். அன்று டிக்கட் கேட்டு என்னிடம் கொடுத்த உங்கள் விஸிட்டிங் கார்டு செய்த மாயந்தான்” என்றதும் இருவரும் சிரித்தனர்.
“உன்னைப்போல் நின்று நிதானித்து காதலிக்க தெரியாது என்று ஒத்துக்கொள்கிறேன்” என்றான் சங்கர்.

இரு வீட்டாரும் சம்மதித்த பின் தோழி மைதிலியிடம் நடந்தவற்றையெல்லாம் விவரித்து சங்கரின் போட்டோவை காண்பித்ததும் மைதிலி அதிர்ந்தாள்.
இந்த சங்கர்தான் அன்று தன்னை பெண் பார்க்க வரவிருந்ததும் அவன் வராததாலேயே அன்று படக்காட்சிக்கு வரமுடியாமல் போனதும் அவளுக்கு மட்டுந்தானே தெரியும்.
அதை நினைத்து  “வனஜா, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். ஆனால் காதல் எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? என்பதை அந்த கடவுளும் அறியமாட்டார் போலும். தியேட்டரில் தொடங்கிய உன் காதல் திருமணத்தில் முடிந்தது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் என்றாள் மைதிலி.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!