எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
தேர்வு செய்த படம்: படம் 4
வானம் தான் எவ்வளவு அழகாக இருக்கிறது. அழகான நீல நிறம். அதில் அங்கங்கே வெள்ளை நிற மேகங்கள். ரசித்தவாறே நிவேதா வந்து கொண்டிருந்தாள். எதிரே வருபவரை கவனிக்காமல் மோதிக் கொண்டாள்.
“சாரி.. நான் வானத்தை பார்த்துக் கொண்டே வந்து மோதி விட்டேன்”என்று மன்னிப்பு கேட்டாள்.
அவன் கண்களை பார்த்தாள். அந்த கண்கள் அவளைச் சற்றே நிலைகுலைய வைத்தன. அவள் இதுவரை கண்ட கண்களில் இது போல கனிவைப் பார்த்ததில்லை.
“பரவாயில்லை. ஜாக்கிரதையாக போங்க. எங்காவது பள்ளத்தில் விழுந்திடாதீங்க”.
‘அவள் அசைவுகள் கூட கவிதை போலிருக்கிறது’ என்று மனதில் நினைத்தான் மாலன்.
இருவரும் அவர் அவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர். ஆனால் இருவர் மனமும் ஒருவரை ஒருவர் நினைவில். ‘அவர் பெயரைக் கூட கேட்கவில்லையே’ என்று நினைத்தாள்.
மறுநாள் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் ‘ஆஸ் யூ லைக் இட்’ நாடகத்தில் ஆர்லோன்டோ தன் முதல் சந்திப்பில் ரோசாலின்ட் காதலித்ததை நடத்திக் கொண்டிருந்தார்.
‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் ‘ என்பதை பல நாடகங்களில் கொண்டு வந்துள்ளார் என்று பாடம் நடத்தினார்.
நிவேதா மனம் முழுவதும் தான் மோதியவன் பற்றிய சிந்தனை. இது தான் ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைடோ’என்று குழம்பியது மனம்.
மாலனுக்கும் அதே நினைவு தான். அவள் நடை அழகு. அவள் அசைவு கவிதை பாடுகிறது என்று மனதில் திரும்ப திரும்ப அவளின் நினைவே. இது தான் ‘இலக்கிய காதலோ?’
மாலன் பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணியில் சேர அன்று தான் கிளம்பினான். அப்பொழுது தான் அவளை சந்தித்தான்.
நாட்களும் நகர்ந்தன. கிருஷ்ணரை பார்க்கமலே காதல் கொண்ட ருக்மணியை நினைத்துக் கொண்டாள்.
‘தான் பார்த்தும் விபரம் எதுவும் தெரிந்து கொள்ளவில்லையே’ என்று மனதிற்குள் புலம்பினாள்.
அந்த வருடம் அவள் கல்லூரியின் கடைசி வருடம்.
“என்னடி நாங்களும் பார்க்கறோம். உன்னிடம் நிறைய மாற்றங்கள். நம் தமிழ் இலக்கியத்தில் படித்தது போல் ‘பசலை நோயா?”‘ என்று கேலி செய்தனர்.
‘நான் வழியில் ஒருத்தரை ஆறு மாதங்கள் முன்பு பார்த்தேன். அவர் மேல் மோதி விட்டேன். பின்னர் சாரி கேட்ட போது அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் பரவாயில்லை என்று கீழே விழுந்த அவரது பையை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஆனால் அவர் முகத்தை என்னால் மறக்க முடியவில்லை.” தோழிகள் அனைவரும் கேலி செய்தனர்.
“என்ன கண்டதும் காதலா? பார்த்துடி.. அவன் ஏற்கெனவே கல்யாணம் ஆனவனா இருக்கப் போகிறார்” என்று ஒருத்தி கேலி செய்தாள்.
மற்றொருத்தி “அவனை எங்கே தேடுவது?” என்றாள். அடுத்த நாள் கேம்பஸ் இன்டர்வியூ. அதில் நிவேதா பெங்களூர் கம்பெனிக்கு தேர்வானாள். இரண்டு மாதங்கள் சென்றது. ரிசல்ட் வந்து விட்டது. அதே சமயம் கம்பெனியில் சேருவதற்கான கடிதமும் கிடைத்தது.
அன்று இரவு சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரயிலில் செல்ல முன் பதிவு செய்திருந்தாள். இரயிலில் ஏறும் போது தன் கனவில் நினைவில் இருக்கும் காதலனை நேரில் காண்கிறாள்.
இருவரும் நேருக்கு நேர் பார்த்தும் சிறிது நேரம் பேசாமடைந்தகளாக நின்றனர். கண்ணும் கண்ணும் பேசிக் கொண்டன.
மாலனும் அவள் நினைவிலேயே இருந்ததால் பார்த்ததும் உணர்ச்சி வயப்பட்டு கைகளை பிணைத்துக் கொள்கின்றனர்.
“நீங்கள்..!”என்று நிவேதா கூற அதே சமயம் மாலன் “நீங்கள்..!” என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.
அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கண்டு மெதுவாகச் சிரித்தான். “என் பெயர் மாலன்”
“என் பெயர் நிவேதா. நான் பெங்களூரில் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்வதற்கு பெங்களூர் வருகிறேன். நான் பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். இருவரும் தங்கள் செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டனர்.
இரயில் புறப்படப் போகும் நேரம் இருவரும் உள்ளே நுழைந்தனர். இது தானோ ‘கண்டதும் காதல் ‘.
இரயிலில் வெவ்வேறு இடம். ஆனால் இரவு முழுவதும் தங்கள் காதல் வசனங்களை பறிமாறிக் கொண்டனர்.
பெங்களுரை அடைந்ததும் இருவரும் விடைப் பெற்றனர்.அடுத்த நாள் நிவேதா தான் செல்ல வேண்டிய கம்பெனிக்கு ஆட்டோவில் சென்றாள்.
அங்கு அவளைப் போல் இன்னும் இரண்டு நபர்கள் காத்திருந்தனர். ரிசப்ஷனிஸ்ட் நிவேதாவை உள்ளே அனுப்பினார். மேனேஜர் “இந்தாங்க உங்கள் அபாய்ன்ட்மென்ட் ஆர்டர். டீம் லீடர் மாலன் அவர்களைப் பாருங்கள் ” என்று அனுப்பினார்.
ஒரு நிமிடம் மனதில் என்னைக் கவர்ந்த மாலனோ? என்று எண்ணினாள்.
“எஸ்கூஸ்மீ…! உள்ளே வரலாமா?.சார்..”
“எஸ். கம்மின்”
உள்ளே சென்ற நிவேதா டீம் லீடரைக் கண்டதும் நிலை தடுமாறினாள். எதிரே கனவுலக நாயகன் மாலன்.
இருவருக்கும் மகிழ்ச்சி. இருவரும் வாழ்க்கையில் இணைந்தனர் என்று சொல்லவும் வேண்டுமா?
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.