எழுதியவர்: அருள்மொழி மணவாளன்
தேர்வு செய்த படம்: படம் 4
சென்னை செல்வதற்கு இரண்டு டிக்கெட்கள் எடுத்துக் கொண்டு புகைவண்டி நிலையத்தில் நின்றிருந்தான் ரஞ்சித். இவனைத் தவிர முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி நிற்கும் இடத்தில் ஒரு சிலர் நின்றிருந்தனர். இந்த நிலையத்தில் வண்டி ஒரு நிமிடம் தான் நிற்கும். அதற்குள் ரமா வந்து விடுவாளா? என்று, ட்ரெயின் வரும் பாதையையும், ஆட்கள் வரும் பாதையையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு தவிப்பாய் நின்றிருந்தான் ரஞ்சித்.
பழமை மாறாமல் இருக்கும் கிராமங்களில் ரஞ்சித், ரமா வாழும் கிராமமும் ஒன்று. அனைத்து வீடுகளில் இருப்பது போல்தான் ரமாவின் வீடும். சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் ஜாதி, மதம் மாறி காதலித்து கல்யாணத்தில் பிரியாமல் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள். அதே அவர்களது வீட்டில் நடந்து விட்டால் அவ்வளவுதான், தன் குடும்ப ஆட்களை விட்டுவிட்டு அவர்கள் காதலித்தவர்கள் குடும்பத்தையே கருவறுத்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த ரமாவிற்கு, அவர்கள் ஊரில் தாழ்ந்த ஜாதியில், அதுவும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் முனியம்மாவின் மகன் ரஞ்சித் மீது காதல் வந்தது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான்.
ரஞ்சித் தாழ்ந்த ஜாதியில் பிறந்தாலும், படிப்பால் முன்னேற துடிக்கும் இளைஞன். அவன் பிறந்த சில வருடங்களிலேயே அவன் தந்தை இறந்து விட, அவனது தாய் அக்கம் பக்கம் வீடுகளில் பத்துபாத்திரம் தேய்த்து, அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து மகனை நன்றாக படிக்க வைத்தார்.
பத்தாவது அவர்கள் பள்ளியில் முதன்மையாக தேறியவனை அவர்களது பள்ளி தலைமையாசிரியர், அவன் விருப்பப்பட்ட பாடத்தை பக்கத்து ஊரு சென்று படிக்க ஊக்குவித்தார். 12 ஆவதிலும் நல்ல மதிப்பெண் எடுத்ததால், அவனது ஊரில் உள்ள பள்ளி வாத்தியார்கள் அனைவரும் சேர்ந்து, அவனை கல்லூரியில் படிக்க பக்கத்து டவுனுக்கு அனுப்பினார்கள். தினமும் கல்லூரிக்குச் சென்று வந்தாலும் ஓய்வு நேரத்தில் அவர்கள் ஊரில் உள்ளவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
அனைவரும் அவனிடம் வேலை வாங்கினாலும், அவனுக்கு கொடுக்கப்படும் காபியோ, சாப்பாடோ வீட்டின் பின்புறம் தான். வெளியே அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். அதைப் பற்றி எல்லாம் அவன் கவலைப்படவில்லை. சிறுவயதிலிருந்தே அனைத்தையும் பார்த்து வளர்ந்தவன் தானே! ஆகையால் அதைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் அவன் பாட்டிற்கு தன் வேலைக்கான கூலியை வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.
அவன் கல்லூரி செல்லும் பொழுது, தனது 11ஆவது படிப்பிற்கு அவர்கள் ஊரை விட்டு பக்கத்து ஊருக்கு செல்ல ஆரம்பித்தாள் ரமா.
அப்பொழுது வழியில் பார்த்து, அவனது அழகில் ஈர்க்கப்பட்டு அவன் மீது ஒருதலை காதல் கொண்டாள்.
மேலும் அவன் விடுமுறையில் அவர்கள் வீட்டில் வேலைக்கு வருவது அவளுக்கு வசதியாக போக, ஒரு முறை மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அவனிடம் தன் காதலை கூறினாள்.
“உனக்கு வந்திருப்பது காதல் அல்ல. பிற பாலின் மேல் உள்ள ஈர்ப்புதான். காதல் கத்தரிக்காய் என்று சொல்லி பிதற்றாமல், படிக்கும் வழியை பார்” என்று சொல்லி திட்டிவிட்டு அன்றுடன் அதை மறந்தும் விட்டான்.
ஆனால் அவளோ இது ஈர்ப்பு அல்ல, காதல் என்று அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று அவனை விரட்டி விரட்டி காதலித்தாள்.
அவன் இருக்கும் குடும்ப சூழ்நிலையில், அவளது காதலை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு மறுத்து கூறினாலும், தன்னை காதலிக்கும்படி அவள் இவனை வற்புறுத்த ஆரம்பித்தாள்.
இப்படியே நாட்கள் கடக்க உடல்நிலை சரியில்லாமல் அவனது தாய் மரணப் படுக்கையில் விழுந்துவிட்டார். ஓரிரு மாதங்களில் அவரும் இறந்து விட தனிமையில் தவித்தான் ரஞ்சன்.
அப்பொழுது தாய் போல் தன்னிடம் பேசும் ரமாவின் அன்பு, அவனுக்கு வாழ வேண்டும் என்ற நம்பிக்கையும் பலத்தையும் கொடுத்தது. அன்றிலிருந்து அவனும் அவளை காதலிக்க தொடங்கினான்.
அவன் கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேட ஆரம்பிக்க, அவளும் கல்லூரி முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தவள்.
அவர்கள் காதல் அரசல் புறசலாக ரமாவின் தந்தைக்கு தெரியவர, அதன் பின் கேட்கவும் வேண்டுமா?
அதன் விளைவாக குற்றுயிரும் குலையுயிருமாக அரசு மருத்துவமனையில் அனாதையாக கிடந்தான் ரஞ்சன்.
படிப்பை நிறுத்தி வீட்டில் அடைக்கப்பட்ட ரமாவிற்கு, தோழிகள் மூலம் விஷயத்தை கேள்விப்பட்டு துடிக்கத்தான் முடிந்தது.
மருத்துவமனையில் இருந்து உடல் தேறி வீட்டிற்கு வருவதற்கு அவனுக்கு ஒரு மாதம் ஆகியது. கல்லூரி நண்பர்கள் மூலம் சென்னையில் வேலை தேட ஏற்பாடு செய்தான்.
ரமாவின் தோழி மூலம் தான் வேலைக்காக இவ்வூரை விட்டு செல்வதாக தெரிவித்தான். அதில் கதறிய ரமா தன்னையும் அழைத்துச் செல்லும்படி அவனிடம் வேண்டினாள்.
இப்பொழுது சூழ்நிலை அவளை அழைத்துச் செல்ல இயலாத காரணத்தை கூற,
அவளோ “என்னை நீங்கள் அழைத்துச் சென்றால் நான் உயிருடன் இருப்பேன். இல்லை என்றால் என் உயிரை மாயிப்பேன்” என்று அழுதபடி கூற,
அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்
வேறு வழியின்றி அவளிடமே சரி இன்றைய தேதியைக் கூறி, “அன்று கடைசி ரயிலில் நான் இந்த ஊரை விட்டு கிளம்புகிறேன். நீ வந்தால் உன்னையும் அழைத்துச் செல்வேன். இல்லையென்றால் நம் காதலை மறந்து விட வேண்டும். எப்படியும் என்னை கொல்லவும் தயங்க மாட்டார் உன் அப்பா. நம்மை வாழ விடமாட்டார். எனக்கும் வேறு வழி தெரியவில்லை” என்றான்.
அவன் கூறியது சரி என்று உணர்ந்த ரமா, “கண்டிப்பாக நான் வருவேன். எனக்காக காத்திருங்கள்” என்றாள்.
தேதியையும் நேரத்தையும் கூறிய ரஞ்சன் “உனக்காக என் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க நான் தயார்தான். ஆனால் அந்த வண்டி காத்திருக்காது. நீ வந்தால் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்” என்றான்.
சிறிது நேரம் கழித்து ஆனால் “நீ உங்கள் வீட்டில் இருந்து, பொட்டு தங்கத்தை கூட எடுத்துட்டு வர கூடாது. நான் உழைத்து உன்னை தங்கத்தில் அலங்கரிப்பேன், சரியா?” என்றான்.
அவளும் புன்னகையுடன் சரி என்று தலையாட்டி “எனக்காக காத்திருங்கள்” என்று கூறி கிளம்பினாள்.
அதன் பிறகு இன்று வரை அவளிடம் பேச முயற்சி செய்யவே இல்லை ரஞ்சன். அதுபோல் அவளும் இன்று வருவாளா? இல்லையா? என்று தெரியாமல் அவளுக்காகவே காத்துக் கிடந்தான். நேரம் நெருங்க நெருங்க அவனுக்குள்ளும் ஒரு வித படபடப்பு தோன்றியது. தூரத்தில் ரயில் வரும் ஓசை கேட்க அவனது நெஞ்சமும் அதைவிட வேகமாக தடதடத்தது.
அவன் இதயத்தில் யாரோ பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது போல் வலி தோன்றியது. ரமா இன்னும் வரவில்லையே என்று தயங்கி, அவள் வரும் வழி மட்டும் நோக்கி காத்திருக்க, ரயில் நிலையத்திற்குள் மெதுவாக ரயில் வண்டி நுழைந்தது.
வேறுவழி இன்றி, வலிக்கும் இதயத்துடன் தன் உடைமைகளை தூக்கிக் கொண்டு முன் பதிவு செய்யாத பெட்டி நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ரயில் நிலையம் முடிவில் இருக்கும் கம்பி வழியாக யாரோ வருவது போல் தெரிய, தன் கண்களை கூர்ந்து நோக்கினான்.
ரமாதான் ஒரு பையை தூக்கிக்கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தாள். அவன் இதயத்திற்குள் மின்சாரம் தாக்கியது போல் புத்துணர்வு தோன்ற, தன் உடமைகளுடன் வேகமாக ஓடி சென்று, அவளை பையை வாங்கிக் கொண்டு வேகமாக அவளையும் இழுத்துக் கொண்டு ரயிலை நோக்கி வேகமாக ஓடினான்.
புகைவண்டியம் மெதுவாய் கிளம்ப ஆரம்பிக்க, அன்றைய கடைசி வண்டியின் கடைசி பெட்டியில், ரமாவை ஏற்றிவிட்டு தன் உடமைகளையும் தூக்கி உள்ளே போட்டு, அவனும் வேகமாக ஏறி மூச்சு வாங்க நின்றான். எதிரெதிர் சாய்ந்து நின்று இருவரும் வேக வேக மூச்சுவாங்கியபடி, தன் இணைகளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, கொஞ்சம் “ஒதுங்குங்க தம்பி” என்ற முதியவரின் குரலில் தன்னிலைக்கு வந்த ரஞ்சன், முதியவர் கழிவறை சென்றதும் ரமாவை இறுக்கமாக அணைத்து, “நீ வரவில்லை என்றதும், என் உயிரே போய்விட்டது ரமா” என்றான்.
“நீங்க இல்லாமல் என்றாலும் வாழ முடியாதுங்க, அதான் வந்து விட்டேன்” என்று கூறி தன் வீட்டில் இருந்து மாற்றுடையும் நான் சேமித்து வைத்திருந்த பணம் முப்பதாயிரம் மட்டுமே எடுத்து வந்ததாக கூறினாள்.
“எனக்கு தான் வேலை கிடைத்தது விட்டது என்று சொன்னேன்ல ரமா. பின்னர் ஏன் பணத்தை எடுத்து வந்தாய்? இப்போது பார், “பணக்கார பெண்ணை ஏமாற்றி பணத்துடன் ஓட்டம்” என்று என் பெயர் நாளை பத்திரிக்கையில் வரும்” என்றான் சோகமாக.
“அதெல்லாம் வராது. அதற்குரிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டுதான் வந்திருக்கிறேன். இனி அவர்கள் நம் பக்கம் கூட வர மாட்டார்கள்” என்றாள் உறுதியாக.
“அப்படியா! அப்படின்னா செய்தாய்?”‘என்று ஆச்சரியமாக கேட்டான் ரஞ்சித்.
தன் கையில் உள்ள சில காகிதங்களை காண்பித்தாள்.
அதில் அவள் வீட்டிலிருந்த நகை புகைப்படமும், போலீஸ் அதிகாரிக்கு கொடுத்த கடிதத்தில் காப்பியும் இருந்தது. கடிதத்தில், தான் மேஜர் என்றும், தான் வேறு ஜாதி பையனை விரும்பி மணப்பதால், தனக்கும் ரஞ்சித்துக்கும், தன் தந்தையாலோ, எங்கள் ஜாதி ஆட்களாலோ ஆபத்து வராமல் காக்கும்படியும், வீட்டில் இருந்து ஒரு நகையும் எடுத்துச் செல்லவில்லை என்றும், ஊர் தலைவருக்கும், காவல்துறை அதிகாரிக்கும், அவர்கள் ஊர் கலெக்டர்க்கும், எழுதிய கடிதத்தின் நகல் இருந்தது.
அதை படித்த பார்த்த ரஞ்சித் அவளின் புத்திசாலித்தனத்தை நினைத்து மகிழ்ந்து, “நான் வாழ்நாள் முழுவதும் பயந்து கொண்டே வாழ வேண்டுமோ என்று பயந்தேன் ரமா. ஆனால் அந்த பயத்தை முழுவதும் போக்கி விட்டாய். எப்படி உனக்கு இப்படி எழுத தோன்றியது” என்று கூறி இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
இத்தனை வருடங்கள் அவர்கள் காதலித்தாலும், தன்னை தொடாமல் ஒரு அடி தள்ளி நின்று, அவள் கண்களைப் பார்த்தே பேசியவன், இன்று அவளை இறுக்கமாக அணைத்ததில் அதிர்ச்சியாக அவனை வியந்து பார்த்தாள் ரமா.
“எனக்கு என் அப்பாவை பற்றியும், எங்கள் ஜாதி ஆட்களைப் பற்றியும் நன்றாக தெரியுமே! கௌரவ கொலை என்று காதலித்த அவர்கள் ஜாதி ஆளை விடுத்து, அவள் காதலித்தவனையும் அவனது குடும்பத்தையும் கூண்டோடு அழித்து விடுவார்கள். நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. நம் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக தான்” என்றாள் ரமா.
தன் வருங்கால மனைவியின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்தான் ரஞ்சித்.
“இருந்தாலும் நீ பணத்தை எடுத்து வந்திருக்கக் கூடாது” என்று கூற,
“உங்களுக்கு அடுத்த மாதம்தான் சம்பளம் வரும். அதுவரை நமக்கு கையிருப்பு வேண்டும் அல்லவா? அதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு அது கஷ்டமா இருந்தால் உங்கள் சம்பளம் வந்ததும் அதை திருப்பி அனுப்பி விடுவோம், கவலைப்படாதீர்கள்” என்றாள்.
தனக்காக இவ்வளவு செய்திருக்கிறாள், ஆகையால் அவள் பணத்தை வைத்தே வாழ்க்கையை தொடங்குவோம் என்று நினைத்து, “சரி ரமா, அதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினான்.
சென்னை வந்து இறங்கியதும் அவளை அழைத்துக் கொண்டு மத்திய ரயில் நிலையத்திற்கு வந்தான்.
அவளோ ஆச்சரியமாக அவனிடம் “இன்னும் பயணிக்க வேண்டுமா?” என்று கேட்க,
“ஆமாம், நாம் ஹைதராபாத் போகிறோம்” என்று கூறி, பயணியர் ஓய்வறைக்கு அழைத்து வந்து, உணவு உண்டு, ஓய்வெடுத்து காத்திருந்தனர், தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்க, ஹைதராபாத் செல்லும் வண்டிக்காக ரஞ்சித் – ரமா ஜோடி.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.