பாலியல் பேசும் மார்ச்: தம்பியும் ஆவானோ தகாதவனாய்

by admin 2
19 views

எழுதியவர்: சினேகிதா ஜே ஜெயபிரபா

முகநூலில் தான் அறிமுகமானான் மதிவதனன் அவனைப் பற்றி பெரிதாய் எதுவும் தெரியாது இனியா என்கிற அன்பிற்கினியாவுக்கு.

அவள் எண்ணியும் பார்த்திருக்கவில்லை. அவளது எழுத்துக்களை அவள் எழுதிட, பின்வரும் நாள்களில் அவள் எழுத்துக்களின் எழுத்தினனாய் அவனே ஆகிடுவானெனவும்,

அவனுக்காகவே அவனை மையமாக வைத்தே அவளது எழுத்துக்களனைத்தும் எழுதப்படுமென்பதையும்!அவன் அத்துனை அன்பும் அக்கறையும் உடைய ஆணவமில்லா ஆண்மகனாய் பெண்மையை மட்டுமின்றி மனிதத்தையும் மதிப்பவனாய் இனியா மனதில் மரியாதைக்குரிய இடத்தில் அமர்ந்து கொண்டான் என்பது தான் அதற்கு காரணமாய் இருந்திடக்கூடும்

எழுத பிடிக்கும் இனியாவுக்கு மனதில் உள்ள அத்தனையும் எழுதுவாள். எழுதியதில் சில பொழுதுபோக்காக முகநூலில் பதிவிட்டாள்.

மதிவதனனுக்கு எழுதும் பழக்கமில்லை  அவன் நண்பன் பாலமுருகன் எழுதுவான் மிக அருமையாக.

மதி எழுதியதை ரசித்து படிப்பான். காலப்போக்கில் இனியா எழுதிய வரிகளின் நிரந்தர ரசிகனாகிப்போனான்.

 வேலை நேரம் போக வேளைபோக்கிடவே முகநூலில் பதிவுகள் பார்ப்பது மதியின் வழக்கமாயிருந்தது. அன்றும் அப்படித்தான் வாசிப்பதற்காகவே தேனீர் இடைவேளையில் கைபேசியை கையிலெடுத்து  அன்பின் தோழி அன்பிற்கினியா முகநூல் பக்கத்தை புரட்டினான்.

துளியாய் விழுந்தபனியில் 

தெளிவாய் தெரிந்த தன்முகம் 

கதிரொளி கண்டதும் மறைந்து போனதோ?! கரைந்து போனதோ!! தேடித்தேடியே 

வாடிப்போனது வண்ணமலர்…….!

உடனேயே கைப்பேசியில் எழுத்துக்களை தட்டினான்.

இனியா உங்க எழுத்துக்களும் பெயரைப்போல் இனிமையாகவே உள்ளது ஆனால் …. என்று முற்றுப்பெறாமல் முடித்து அனுப்பினான்.

பொதுவாக மெசேஜ் எதுவும் வாசிக்கும் பழக்கம் இனியாவுக்கு இருந்ததில்லை எதேச்சையாய் இந்த செய்தி அவள் கண்ணில் பட்டது  எழுதுவது அவள் சுவாசமாய் கொண்டிருந்ததால் எழுத்தை பற்றி விமர்சனம் என்றதும் பதிலுக்கு நன்றி சகோ என்று பதிவிட்டாள் இனியா.

உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் உங்களை ஒரு குழுவில் இணைத்து விடட்டுமா? என்றே பதிலனுப்பினான் மதி.

இனியாவுக்கு என்ன பதிலனுப்ப என்று தெரியவில்லை என்றாலும் தன் எழுத்தின் மேல் அக்கறை உள்ளவனாய் இருக்கிறானிவன் என்று அவனுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்பதற்காகவே அனுப்பினாள் சரியென, அடுத்த நிமிடமே நண்பன் பாலகுமாரனை தொடர்பு கொண்டு குழுவில் இணைத்துவிட்டான்.

அதன்பின் நண்பர் இருவருமே தனித்தனியாய் செய்தி அனுப்பினர் All the best என்று 

பாலகுமாரன் அனுப்பிய செய்திக்கு நன்றி என பதிலளித்த இனியா நீங்க யாரு னு தெரியல எனக்கு என  இனியா செய்தி அனுப்பிய பிறகே பாலகுமாரன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான்

 தானும் மதியும் சிறுவயது முதலே நண்பர்கள் என. அதன்பின் இனியா மதியிடம் இருவர் பற்றியும் கேட்டு அறிந்தாள் பாலு எனப்படும் பாலகுமாரன் அதிகம் எழுதியிருக்கான் அவன் மூலமாக தான் இனியா குழுவில் இணைக்கப்பட்டாளென, மேலும் ஒரு ரகசிய தகவலும் கூறினான் பாலுவுக்கு கேட்கும் திறனில்லையென

அதனாலோ என்னவோ அவனிடம் அவளுக்கு ஒரு தனிபாசம் உருவானது அவனும் அடிக்கடி அக்கா என அன்பொழுக செய்தி அனுப்பிட இனியாவும் தம்பி என பாசமாய் பதிலனுப்பினாள் 

எனினும் மதியின் குறுஞ்செய்தியில் தான் அதிகம் மனம் மகிழ்ந்தாள். தன் ஒவ்வொரு அசைவையும் கண்டுணர்ந்திடும் அறிவுமிகு அன்பும் அக்கறையும் அவள் பல வேளை வியந்தவை தன் எழுத்தின் வரிகளை வாசித்ததுமே தன் மனநிலையை யோசிக்குமளவு அத்தனை அறிவு என்பதா? அக்கறை என்பதா?

விடை தெரியவில்லை அவளுக்கு  எனினும் அவள் விரும்பி எழுதிய எழுத்துக்களை அவளையே இன்னுமதிகம் விரும்பி எழுதச்செய்வதோடு நில்லாமல் அவள் எப்போதும் மகிழ்வாய் மட்டுமே இருக்கும் நிலையை உருவாக்க முயன்றான்.

இந்நிலையில்  இனியா மதியின் அன்புக்கு அடிமையாகும் நிலை அறிந்த மதி அவளது வாழ்வில் எதுவும் தன்னால் பாதிக்கப்பட்டு விடுமோ என்றே அஞ்சி அவளை விட்டு விலகி இருக்கும் முயற்சியை மேற்கொண்டான். 

இனியா அதை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை அறிந்ததும் அவள் தன்னை வெறுக்கும் நிலை உருவாக்கிடவே அன்பும் அக்கறையும் நிறைந்த அவனது இயல்பான குணத்தில் வெறுப்பு என்னும் வேசம் போடத் தொடங்கினான்.

இனியாவோ மதியின் உள்ளமும் உள்ளுணர்வும் உணர்ந்தவள் என்பதை மதி அறிந்திருக்க வாய்ப்பில்லை அது மட்டுமில்லாமல் நிஜமாகவே மதி இனியாவை வெறுத்தாலும்  அவளால் அவனை துளியும் வெறுக்க இயலாது  அந்தளவு அதிகதிகமாய் நேசித்து விட்டாள்.

ஒரு கட்டத்தில் இவளது நேசம் அதிகம் என்பதை உணர்ந்த மதி அவனது வார்த்தைகளை கடினத்தன்மையாக்கினான். இனியாவோ மதி திட்டினாலும் விலகாதிருந்தாலே போதுமென்றே எண்ணினாள். 

மதியோ பல வேளைகளில் இனியாவை புறக்கணிக்க தொடங்கியதால்  அவனது நலம் அறிய வேண்டும் என்ற எண்ணத்தில்  பாலமுருகனை தொடர்பு கொண்டு மதி பற்றி விசாரிப்பாள். ஒரு முறை இனியா மதிக்கு நலமாயிருக்கியா என செய்தி அனுப்ப மதி வெறுப்புடன் இங்க இருக்கிற பிரச்னைல இந்த முண்ட வேற என எரிச்சலை காட்டினான் 

இனியாவுக்கு இவ்விதமான வார்த்தைகளை கேட்டு பழக்கமில்லை என்றாலும் அவன் பேசிய மோசமான வார்த்தை பெரிதாய் தெரியவில்லை  ஆனால் அவன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்ற மன வருத்தமே அதிகமாக இருந்தது.

ஆகவே வழக்கம் போல் பாலமுருகனை தொடர்பு கொண்டாள் அவனோ  இவ என்னடா எப்ப பேசினாலும் மதிய பத்தி மட்டுமே பேசுகிறாளென சற்று எரிச்சலாகவே உன் மதிக்கு மதியை தவிர வேறு எதுவும் தெரியாது  எங்களை எல்லாம் மனுசனா தெரியலையோ அவனை பத்தி மட்டும் தான் பேசுற அவனுக்கு என்ன அவன் நல்லா தானிருக்கான் எனக்கோபமாக பதிலளித்தான்.

அதற்கு இனியா இல்லை அவன் ஏதோ பிரச்சனைல் இருக்கிறான் என்றவள் அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பினாள்

அதை பார்த்த பாலமுருகன் என்ன!  அவன் உன்னை மோசமான வார்த்தையில் பேசினானா?! என கேட்டான் இனியாவோ பேச்சை மாற்றி வேறெதையோ பேசி பேசி அந்த சூழலை சமாளித்தாள். 

அதன் பின் வந்த நாட்களில் இனியா பாலமுருகனிடம் மதியை பற்றி விசாரித்தால் அவன் அதற்கு பதில் அளிப்பதில்லை. இப்போது இனியாவுக்கு மதி பற்றி எந்த தகவலும் தெரிவதில்லை என்றாலும்  பாலமுருகன் கோபித்துக்கொண்டு போனாலும்  அவ்வப்போது மதியைப் பற்றி அவனிடம் கேட்கவே செய்தாள் இனியா

இப்படி சில காலம் உருண்டோடியது மதியின் தொடர்பு இல்லாத இந்த நிலையில் இனியா மிகவே பாதிக்கப்பட்டாள் உடலாலும் மனதாலும் என்றாலும், எழுதுவதை நிறுத்தவில்லை எழுதும்போது மதியின் உடனிருப்பை உணர்ந்ததால்.

ஒரு நாள் பாலமுருகனை தொடர்பு கொண்டு தன் சினேகிதன் நலமா இருக்கானா என கேட்டிட முயன்றவளிடம்,

வீடியோ கால் வரேன் உன்னோட டிரஸ் ஓபன் பண்ணு  உன்ன பாக்கணும் பேசிய பாலுவிடம் இதை சிறிதும் எதிர்பார்க்காத இனியா இப்படி பேசாத தம்பி என்று கூற நான் இப்படித்தான் பேசுவேன் எனக்கு உன்ன பண்ணனும்  இப்போ உன்ன பாக்கணும்  அதுக்கு ஓகே என்றால் என்னிடம் பேசு இல்லை என்றால் பிளாக் பண்ணிட்டு போ என்று கூறி விட்டான். 

இனியாவுக்கு தலை கிறுகிறுவென சுற்றியது எனினும் சுதாரித்துக் கொண்டு, 

இல்ல தம்பி நீ எனக்கு எப்பவுமே தம்பி தான் நான் உனக்கு அக்கா அதாவது அம்மா மாதிரி என்றாள்  அதற்கு சிறிதும் இரக்கமில்லாதவனாய் அதெல்லாம் விடு மதி கூப்பிட்டா போயிடுவ தானே என்றான் 

இனியாவோ அவன் அப்படி கூப்பிடுவான் என்று நீ நினைக்கிறியா என்றாள் 

மீண்டும் பாலு  நான் கேட்டதுக்கு பதில் சொல் மதி கூப்பிட்டால் போவியா போக மாட்டியா என்றான் 

இனியாவோ அவன அவங்க அம்மா அப்படி வளர்க்கலனு நான் நம்புறேன்  நீ ஏன் இப்படி பேசுகிறாய் என்றாள்

உன்ன உங்க அம்மா நல்லா வளர்த்து இருக்காங்க இல்ல உன் வேலையை பாரு வேற எதுக்காக என்கிட்ட அவன பத்தி விசாரிக்கிற என்று திட்டிதீர்த்துவிட்டு போய்விட்டான்

ஆனால் இனியாவின் மனமோ ஆராத ரணமாய் தீராவலி கொண்டது நேற்று வரை அக்கா என்று தானே கூப்பிட்டான் இன்றைக்கு எப்படி இவனால் இப்படி பேச முடிகிறது என எண்ணி எண்ணி இன்றுவரை மனம் குமுறிக்கொள்கிறாள்

இதை யாரிடம் சொல்லி மனதை தேற்றுவது தன் மனதுக்கு இருந்த ஒரே ஆறுதல் மதியின் தூய அன்பு தான் அவனும் அவளுடன் இப்போது தொடர்பில் இல்லை என்றாலும் மௌனமாய் பேசா பாசையிலும் அவர்களது பாசமிகு தூய தோழமை வளர்ந்து கொண்டுதானிருக்கிறது

மதியை நினைக்கையில் இப்படி ஒரு நல்ல நண்பனுக்கு  எப்படி பாலுவை போல் நண்பன் இருக்கக் கூடும் என்று மனதுக்குள் அடிக்கடி கேள்வி எழும்பும் என்றாலும் அன்று நடந்த அந்த உரையாடல் உண்மையிலும் உண்மையன்றோ..

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!