எழுதியவர்: நா.பத்மாவதி
மழை மாலை நேரம். அந்தப் பழைய நூலக வாசலில் ரவி நின்று கொண்டு இருந்தான்.
ரவி தன் நண்பனிடம் “டேய் கிருஷ்ணா, பாரு இந்த இடம் எவ்வளவு அமைதியா பயமா இருக்கு… ஆனா ஏதோ கூப்பிடுற மாதிரி இருக்குல்ல” என்றான்.
“. உனக்கு எப்போதும், எல்லாவற்றிற்கும் பயம் தான். ஆ.., கதவும் திறந்தே இருக்கே. வா உள்ளே போய் பார்க்கலாம்” என இருவரும் மெதுவாக உள்ளே சென்றனர். அடர் தூசியும் பழைய மரநறுமணமும் கொண்ட நூலகம். ஒரு மூடிய மர அலமாரியில் பல புத்தகங்கள் இருந்தன. பார்த்து கொண்டே வந்தவர்கள் ஒரு பெரிய புத்தகத்தைப் பார்த்து நின்றனர்.
“என்ன புத்தகம் இது? இவ்வளவு கனமா இருக்கு. திறந்துப் பார்க்கலாமா?” என்றான் கிருஷ்ணா.
“இது என்ன கேள்வி. இந்த புத்தகம்… நம்மைப் பாத்து சிரிக்குற மாதிரி இருக்கு, பார்க்கலாம் வா.” என்ற ரவி புத்தகத்தின் அருகில் செல்ல முயன்றவன் “ஏய்ய்ய், இந்த புத்தகம் என்னை இழுத்துக்கொண்டு வந்த மாதிரி இருக்குடா.”என்றான்
“எதையாவது உளராதே” என்றபடி கிருஷ்ணா புத்தகத்தின் அருகில் செல்ல ரவி சொன்னது போல, அருகில் இழுப்பதாக உணர்ந்தான். வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல புத்தகத்தை மெதுவாக திறந்தான்.
அதன் முதல் பக்கத்தில் “நீ இந்தக் கதையில் வாசிப்பது எல்லாம் நிஜமாக மாறும்.” என்று எழுதி இருந்தது.
“டேய், இது ஏதோ மாஜிக் புக் போல, இந்த நூலகத்தின் அமைதியும் பயமா இருக்கு வேண்டாம் வாடா போகலாம்” என்றான் ரவி.
“ஒண்ணும் இல்லடா, ஒரே ஒருமுறை இதை முயற்சி செய்து பார்த்துட்டு போகலாம்டா ப்ளீஸ். பயப்படாதே நான் இருக்கேன். பார்க்கலாமா?”என்றான் கிருஷ்ணா.
ரவி பயத்தில் அரை மனதோடு,
“சரி” என்றான். புத்தகத்தை பிரித்ததும் “நம்ம வீட்டு பூனை பேச ஆரம்பித்தது” என்ற வரிகள் கண்ணில் பட்டது. “பார் ரவி பயந்தயே, இந்த பழைய நூலகத்துல பூனையே இல்ல, அது எப்படி பேசும்” என்று கிருஷ்ணா சொல்லிய அடுத்த நிமிடத்தில் பூனை வந்து, ரவியின் காலில் மோதியது.
அதிர்சியில் பின் வாங்கிய இருவரையும் பார்த்த பூனை “ரவீய்… ரவீய்… கிஷ்ணா… கிஷ்ணா… என்னடா என்னைய எதிர்பார்க்கலயா. சாப்பாடு எங்கே?” என்று கேட்டது.
இருவருக்கும் பேரதிர்ச்சி
“ஏய்… பூனை பேசுது டா!!” என கோரஸாக கத்தி பயந்தோடினர். மாயப் புத்தகம் ரவியை பின் தொடர்ந்ததை அறியாது வீடு வந்து சேர்ந்தனர்
ரவியின் வீட்டில் “ரவி, இவ்ளோ நேரமா சாப்பிடாமல் எங்கே போனாய்?” என்றார் அம்மா.
“அம்மா, ஒரு மாயப் புத்தகத்துல எழுதிய எழுத்து நிஜம் ஆகியது” என்று நடந்தவைகளை விவரமாகக் கூறினான் ரவி.
அம்மா நம்பாமல் “ரவி, அந்த டிவி கார்ட்டூன்களையே ரொம்ப பாத்துட்டே இருக்காதேன்னு எத்தனை தடவை சொல்லிட்டேன். கேட்காம தொடர்ந்து பார்த்ததனால் ஏற்பட்ட பிரமையா இருக்கும். பேசாம சாப்பிட்டு தூங்கு. மாயப்புத்தகம் மண்ணாங்கட்டின்னு” என்று சத்தம் போட்டார்கள்.
பிறகு சில நாட்கள் கழித்து… ரவி எழுத ஆரம்பிக்கிறான். ஆனால் புத்தகம் தானாக எழுத ஆரம்பிக்கிறது. அருகில் அன்று நூலகத்தில் பார்த்த மாயப் புத்தகம் கண்டு ஆச்சர்யமடைந்தான்.
“ஏய்! என்ன இது… நான் கொண்டு வரலையே… எப்படி வந்தது. எப்படித் தானே எழுதுது?” என்று ரவி ஆச்சர்யமாகப் பார்த்தான்.
புத்தகத்தில் “இனி ரவி இந்த புத்தகத்தின் ஒரு பகுதி. அவனின் வாழ்க்கை இங்கு எழுதப்படுவதைப் பின்பற்றும்.” என எழுதி இருந்தது.
“இல்லை இது வேண்டாம்” என பயந்தான் ரவி. அந்த நேரம், புத்தகம் தானாகவே பக்கங்களைப் புரட்டுகிறது. ரவியின் கைகளைப் பிடிக்கிறது.
புத்தகம் குழைந்த குரலில்,
“நீ இப்போது கதையின் பாத்திரம். கதையை நீ எழுத முடியாது… வாசிக்கவே முடியும்.” என்றது.
“ரவி சீக்கிரமாகப் புத்தகத்தை மூடுடா இல்லைன்னா நீ அந்த கதாபாத்திரமாக ஆகிடுவாய் ” என்றான் கிருஷ்ணா.
என்ன செய்வது என அறியாமல் மீண்டும் நூலகத்துக்குப் புத்தகத்துடன் ரவி வருகிறான்.
“இது என்னுடையது கிடையாது. தெரியாம எடுத்துட்டேன். மன்னித்துவிடு” என மனதார மன்னிப்பு கேட்டபடி புத்தகத்தை உள்ளே வைக்கிறான் ரவி.
அவன் புத்தகத்தை அடைக்க, அது தானாகவே மர அலமாரிக்குள் மாயமாகியது.
சில புத்தகங்கள் கதை மட்டும் சொல்லாது… கதையாகவே வாழ வைத்துவிடும்.
மாயப்புத்தகத்தை நீங்கள் எப்போதாவது பார்த்தால்… வாசிப்பதற்கு முன் யோசியுங்கள்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.