மாய புத்தகம் கதைப் போட்டி: முடிவில்லாமல் தொடரும்

by admin 2
38 views

எழுதியவர்: பூமலர்

பள்ளி நூலகம் அமைதியாக இருந்தது. பன்னிரண்டு வயது யுவன் ஜன்னல் அருகே அமர்ந்து, படபட என்னும் சத்தத்துடன் பெய்யும் மழையை ரசித்துக் கொண்டு இருந்தான்.  அவனுடைய வகுப்பு தோழர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். ஆனால் அவன் எப்போதும் போல இன்னும் சில நிமிடங்கள் நூலகத்தில் இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்புவான். பள்ளியில் இருந்து இரண்டாவது தெருவில் வீடு  இருந்தது. மக்களை விட புத்தகங்களைச் சுற்றி இருப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் படிக்கும் புத்தகங்களின் கதாப்பாத்திரங்களே அவனின் நண்பர்கள் ஆகினர்.   

      அப்போதுதான், சாய்ந்திருந்த அலமாரியில் இருந்து ஒரு வண்ணம் இழந்த, தோலால் அட்டை போடப்பட்ட, புத்தகம் ஒன்று நழுவி அவன் காலடியில் விழுந்தது. அட்டைப் படத்தில் இருந்த தலைப்பு விசித்திரமாக இருந்தது: “தொடரும்…”.

          எழுத்தாளர்  பெயர் இல்லை. நூலகக் குறியீடு இல்லை. முதல் பக்கத்தில் ஒரு வாக்கியம் மட்டுமே: “இந்தக் கதை ஒரு கனிவான இதயத்திற்காகக் காத்திருக்கிறது”. ஆர்வமாக, யுவன் பக்கங்களைப் புரட்டினான். மாறன் என்ற போர்வீரனின் சாகசம், சர்மதா என்ற பேசும் காகம், அஷ்டவிந்தா என்ற தனிமைக் கோட்டையில் வாழும் சூனியக்காரி – அனைவரும் எதையோ தேடுகிறார்கள். அவர்களுக்கு அது என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவன் கடைசி பக்கத்தை எட்டியபோது, முடிவு எழுதப்படாமல் காலியாக இருந்தது. குழப்பதில் அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.


            மறுநாளும் அந்தப் புத்தகத்தை எடுக்க, இம்முறை கதைகள் மாறி இருந்தன. யுவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. யோசனையுடனே புதுக் கதைகளை படித்தான். அதன் மறுநாள், அது மீண்டும் மாறியது. அவன் அதைப் படிக்கும் ஒவ்வொரு முறையும், அது வெவ்வேறு பதிப்பைச் சொன்னது. போர்வீரன் இறந்தான் அல்லது காயம்பட்டான். காகம் பழைய நினைவுகளை மறந்து வருந்தியது அல்லது சில நினைவுகள் மட்டும் நினைவில் இருந்தது. சூனியக்காரி  தன் தனிமையைப் போக்கும் மந்திரங்களைச் சொன்னாள் அல்லது அழுதாள். யுவன் ஏதோ விசித்திரமாக உணர்ந்தான். அந்தப் புத்தகம் உயிருடன் இல்லை, ஆனால் அது அவனிடம் எதையோ எதிர்பாத்துக் கேட்டுக்கொண்டிருந்தது.

           அவன் அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றான். இரவு, அவன் புத்தகத்தைத் திறந்து வைத்து அதனிடம் குனிந்து, “நீ ஏன்  கதையை முடிக்கக்கூடாது?” என்று கேட்டான். அடுத்த நொடி அப்புத்தகத்தின் கடைசிப் பக்கம் மின்னியது. அவன் விழி விரித்து பார்த்துக் கொண்டு இருந்த போதே மங்கலான மையில், ஒரு பதில் உருவானது: “ஏனென்றால் நான் அக்கறை கொண்ட ஒருவருக்காகக் காத்திருக்கிறேன்”.

            அன்று இரவு தூக்கத்தில் கனவாக தோன்றியது என்னவென்றால், எழுத்தாளர்களால் கைவிடப்பட்ட, வாசகர்களால் மறக்கப்பட்ட, அல்லது முடிக்கப்படாமல் அழிக்கப்பட்ட கதைகளில் வாழும் கதாபாத்திரங்களின் ஆன்மாக்களும், ஒருபோதும் முடிக்கப்படாத கதைகளின் ஆன்மாக்களும் இணைந்து இந்தப் புத்தகத்தில்  வாழ்கிறது என்பதே. இந்தக் கதாபாத்திரங்கள் யாரோ தங்களுக்கு ஒரு முடிவைக் கொடுப்பார்கள் என்று நம்பி, தங்கள் தொடக்கத்தைத் திரும்பத் திரும்ப வாழ்ந்து, சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை உணர்கிறான். எனவே, யுவன் மறுநாள் தனது சொந்த பேனாவைக் கொண்டு வந்தான். ஜன்னல் அருகே தனது படிக்கும் மேசையில் அமர்ந்து, அந்தப் புத்தகத்தைப் பிரித்தான். அதன் கடைசி வெற்றுப் பக்கத்தைப் பார்த்து, சத்தமாகக் கூறினான் : “இதை ஒன்றாக முடிப்போம், உன் விருப்பப்படி”. அதைக் கேட்டதும் அந்தப் புத்தகம் சற்று ஒளிர்ந்து மங்கியது.

           அந்தப் புத்தகத்தில் தன்னுடைய பேனாவால் எழுத ஆரம்பித்தான் யுவன். மாறனிடம் ஆசையைக் கேட்க,  “எனக்குச் சண்டையிட விருப்பம் இல்லை. போர் முடிந்து, கடலுக்கு அருகில் அமைதிருக்கும் என் ஊருக்குச் சென்று அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறேன்” என்று மாறன் பதில் எழுதினான். அதையே இறுதி அத்தியாயமாக எழுதினான்.

           அஷ்டவிந்தா தன் மாயாஜால சக்தியை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை, தன்னுடைய பேரார்வம் இசையில் தான். எனவே அந்தக் கோட்டையை இசை மாளிகையாக மாற்றி, மக்களுக்கு அனுமதி அளிக்கக் கோர, அவளின் அதையே இறுதி அத்தியாயமாக எழுதினான்.

            சர்மதா என்னும் காகம் தன் வாழ்வின் சோகமான பகுதிகளைக் கூட, மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்ப, யுவனும் அதற்கு ஏற்றார் போல இறுதி அத்தியாயத்தை எழுதினான்.

             மேலும் இறுதி வரியில், “அவர்கள் சுதந்திரமாக இருந்தனர்; அவர்களின் கதை முடிந்ததால் அல்ல,  யாரோ ஒருவர் இறுதியாக அதைக் கேட்டதால்” என்று எழுதினான். புத்தகம் மெதுவாக மூடப்பட்டது. இந்த முறை அந்தப் புத்தகத்தில் தொடரும் என்ற தலைப்பும் மெதுவாக மறைவதைப் பார்த்தான் யுவன்.  ஆனால் இரவில் மீண்டும் “தொடரும்” என்ற தலைப்பு தோன்றியது.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!