சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: ஸாரி சிவா

by admin
69 views

எழுத்தாளர்: ஸ்டெஃபி விஜய்

“சிவாவை இன்னும் காணோமே.. மணி பன்னிரெண்டு ஆகப்போகுது. இப்போ பஸ் ஏறினா தான் அஞ்சு மணிக்கு ஹாஸ்டலுக்குள்ளே போக முடியும். இரண்டு மணி நேரம் ஒரு தூக்கத்தைப் போட்டுட்டு அப்புறம் கிளம்பி காலேஜுக்குப் போக சரியா இருக்கும்.. இவன் ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட் பண்ணுறான்?” என்னிடம் கேட்டான் ஆனந்த்.

“அவன் ஏன் லேட்டா வர்றான்னு எனக்கு என்ன தெரியும்? உன் கையிலே தான் ஒரு சோப்பு டப்பாவை வச்சிருக்கியே.. அதுல அவனைக் கூப்பிட்டு கேளு வருவானா இல்லையான்னு..” சிடுசிடுத்தேன் நான். ஆனந்த் சிவாவை தொடர்பு கொள்ள எதிர்முனையில் அழைப்பு மணி ஒலித்து சலித்து தானாகவே நின்றது. ஆனந்த் விபரம் சொல்ல, “அவன் ஒருத்தனுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்க முடியும்? நாம யாரும் நேரத்துக்கு காலேஜ் போக வேண்டாமா? நாம கிளம்பலாம், அவன் வரும் போது வரட்டும்” நான் தான் கூறினேன்.

“கொஞ்சம் பொறு பிரியா. அவன் வரலைன்னா கண்டிப்பா கால் பண்ணி நமக்கு சொல்லியிருப்பான். வழியிலே தான லேட் ஆகுது போல.. கொஞ்ச நேரம் கூட வெயிட் பண்ணிப் பார்ப்போம். அவன் இருந்தா நாங்க தைரியமா வீட்டுக்குக் கிளம்புவோம்” அப்பா சொன்னதும் கடுப்பேறியது எனக்கு.

நான் பிரியா.. இதோ என் தோழிகளுடன் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கின்றேன். நான், திவ்யா, சங்கீதா எங்களுடன் ஆனந்த், கவின், சிவா ஆறு பேரும் ஒவ்வொரு விடுமுறை முடிந்த பின்னும் ஒன்றாக கல்லூரிக்குத் திரும்புவது வழக்கம். இந்த வழக்கத்தை ஏற்படுத்தியதே எங்கள் பெற்றோர் தான்‌.

முதலாம் ஆண்டில் முதல் முறை விடுமுறை விட்ட போது வீட்டிலிருந்து பெற்றோர் வந்து தான் பெண் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி விட்டனர். அப்படியே எங்கள் அனைவரின் பெற்றோரும் வந்து எங்களை அழைத்துச் சென்றனர். விடுமுறை முடிந்து திரும்பிய போது எங்களை தனியே விட மனம் இல்லாமல் என் அப்பா எங்களுடன் வருவதாக இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் சொல்லி வைத்து ஒரே நேரத்தில் மூவரும் அப்பாவுடன் வந்து விட்டோம். அப்போது சிவாவும் வந்திருந்தான் அதே பேருந்தில் ஏறுவதற்காக.. நாங்கள் என் அப்பாவுடன் ஏறுவதைப் பார்த்தவன் ஓடி வந்தான். “அங்கிள், நான் சிவா.. இவங்களோட கிளாஸ்மேட். நீங்க காலேஜுக்கா வர்றீங்க?” இயல்பாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“நீ இவங்களோட படிக்கற பையனா பா! ரொம்ப சந்தோஷம்.. இந்தப் பொண்ணுங்களை இராத்திரி நேரத்துல எப்படி தனியா அனுப்பறதுன்னு தயக்கமா இருக்குப்பா.. கொஞ்சம் சீக்கிரமா கிளம்புங்கன்னாலும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க. நாங்களே மூணு மாசத்துக்கு ஒரு முறை மூணு நாள் லீவுல வர்றோம்.. அதுல ஒரு அரை நாளை சீக்கிரமே கிளம்பி வேஸ்ட் பண்ணணுமா ன்னு கேட்குறாங்க.. ஆனா பாரு இப்படி நடு இராத்திரியில எப்படி இவங்களை தனியா அனுப்ப முடியும்? அதான் நானும் கூடவே வந்து இவங்களை ஹாஸ்டல்ல விட்டுட்டு வரலாம்னு இருக்கேன்” அப்பாவின் பதிலைக் கேட்டு சிரித்தான் சிவா.

“இதுக்கு எதுக்கு அங்கிள் நீங்க அவ்வளவு தூரம் அலையுறீங்க? அதான் நான் இருக்கேனே.. நான் இவங்களுக்குத் துணையா போறேன். நீங்க கவலைப்படாம வீட்டுக்குப் போங்க” சட்டென்று சொல்லி விட்டான் அவன். ஆச்சரியாக இருந்தது அனைவருக்கும். ஒரு சிறிய தயக்கம் கூட இல்லாமல் சட்டென்று அவன் இப்படி கேட்டதும் அத்தனை பேர் மனதிலும் அவன் மேல் நம்பிக்கை உருவாகி விட்டது, என்னைத் தவிர.

“இந்த மூணு மாசத்துல இதுவரை ஒரு நாள் கூட ஒரே ஊர் பொண்ணுங்களாச்சேன்னு இவன் பேசியதும் கிடையாது, எந்த உதவியும் செய்ததும் கிடையாது. இப்போ மட்டும் என்ன வந்துச்சாம்! இவனை நம்பி எங்களை இவன் கூட அனுப்பணுமாம்” மனதுக்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருக்க அப்பாவோ, “பரவாயில்லை பா.. நான் நாளைக்கு ஆபிஸ்க்கு லீவு போட்டுட்டேன்‌, அதனால பொறுமையா திரும்பி வந்தா போதும். அதனால இன்னைக்கு நான் வர்றேன். அடுத்த முறையிலிருந்து நீங்க எல்லாரும் சேர்ந்து போங்க” எனக் கூறி விட்டார். அதற்கு மேல் மறுத்துப் பேசாமல் அனைவரும் பேருந்தில் அமர, பேருந்து கிளம்பியது.

அடுத்த நாள் மாலையில் விடுதியிலிருந்து அப்பாவை அலைபேசியில் அழைக்க, அவரோ முழுக்க முழுக்க சிவா தாசனாக மாறி விட்டிருந்தார். “நீங்க எல்லாம் பஸ்ல ஏறியதும் குறட்டை விட்டுத் தூங்கிட்டீங்க. எனக்குமே தூக்கம் சொக்கிடுச்சு. ஆனா அந்தப் பையன் ஒரு நிமிஷம் கூட தூங்கல. நம்ம முன்னே பின்னே யார் இருக்காங்க, புதுசா யாரு ஏறுறாங்க, இறங்குறாங்க, எல்லாருடைய பையும் பத்திரமா இருக்கான்னு பார்த்துக்கிட்டே வந்தான் மா. ரொம்ப நல்ல பையன்.. அடுத்த முறையிலேயிருந்து அவனோடேயே நீங்க மூணு பேரும் கிளம்புங்க. பத்திரமா கூட்டிட்டுப் போவான்” என அவன் புராணம் பாடி விட்டு அழைப்பை துண்டித்தார்.

என்னைத் தவிர மற்ற அனைவருக்கும் இந்த ஏற்பாடு பிடித்து விட்டது. வீணாக அப்பா அலைய வேண்டாம் என்ற ஒரு காரணத்துக்காக நானும் அதை ஏற்றுக் கொண்டேனே தவிர, எனக்கு சிவா எங்களுடன் வருவதில் துளியும் விருப்பமில்லை. ஏதோ எங்களுக்கு எதுவுமே தெரியாது போலேயும்.. இவனால் தான் எங்களை பத்திரமாக கூட்டிப் போக முடியும் என்பது போலும் ஒரு மாயையை அவன் உருவாக்கி இருப்பதாகவே எண்ணினேன். போதாததற்கு அவன் வேறு அந்த சீட்டில் உட்காருங்கள், இந்த சீட்டில் உட்கார வேண்டாம், ஜன்னல் கதவை பூட்டிக் கொள்ளுங்கள், பையை இங்கே வைத்துக் கொள்ளுங்கள், ஏதாவது வேண்டுமென்றால் என்னை எழுப்புங்கள் என ஆயிரத்தெட்டு இன்ஸ்ட்ரெக்ஷன்ஸ் கொடுக்கும் போது அப்பாவின் மேல் அத்தனை கோபம் வரும் எனக்கு. கடுகடுவென்ற முகத்தோடு அவனுக்கு பதில் கூறாமல் அமர்ந்திருப்பேன். அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்களுக்குப் பின் இருக்கையில் அமர்ந்து கொள்வான்.

இப்போது மூன்றாம் ஆண்டு வந்து விட்டோம்.. இன்னும் எங்கள் பெற்றோருக்கு எங்களை தனியே அனுப்ப மனம் வரவில்லை. சிவாவோடு இப்போது ஆனந்தும் கவினும் வேறு சேர்ந்து வரவே, அனைவரும் எங்கள் பெற்றோரின் நன்மதிப்பை பெற்று விட்டனர். “அந்த மூணு பசங்களை நம்பி அனுப்பலாம், ஆனாலும் சிவா இருந்தா கூட கொஞ்சம் தைரியம் தான்” அப்பா ஒவ்வொரு முறை சொல்லும் போதும் பற்றிக் கொண்டு வரும் எனக்கு.. ஆமா இவன் பெரிய ஆபத்பாந்தவன் என நக்கலாக நினைத்துக் கொள்வேன்.

மணி பன்னிரெண்டு பத்து ஆன போது வேகமாக வந்து சேரந்தான் சிவா. “சாரி அங்கிள்.. ஃப்ரெண்ட் ஒருத்தன் பஸ் ஸ்டான்டில் டிராப் பண்ணுறதா சொல்லியிருந்தான். திடீருன்னு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயிட்டு. அதான் அவங்களை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு ஆட்டோ பிடிச்சு வர்றதுக்கு லேட்டாயிடுச்சு” நேராக எங்கள் அப்பாக்களிடம் சென்று தன்னிலை விளக்கம் தந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் தாமதமாக வந்ததைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. “அதனால என்னப்பா.. அதான் வந்துட்டியே.. அதோ ஒரு பஸ் நிக்குது.. அது தான் முதல்ல கிளம்பும். அதுல ஏறிக்கோங்க” அப்பா சொல்ல ஆறு பேரும் வரிசையாக ஏறிக் கொண்டோம்.

இன்று ஒருநாளாவது இவன் இல்லாமல், இவனது அதிகப்பிரசங்கித்தன அறிவுரைகள் இல்லாமல் நிம்மதியாக செல்லலாம் என நினைத்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சியதில் சரியான கோபம். “ஏய் பிரியா.. இந்த சீட்டில் வந்து உட்காருங்கா மூணு பேரும்” அவன் காட்டிய சீட்டைப் பார்த்தேன். மூன்று பேர் அமரும் சீட்டில் எங்களுக்கு இடம் போட்டு விட்டு பின்னால் இருந்த சீட்டில் அவர்கள் மூவரும் அமரப் போனார்கள். “இல்ல.. நாங்க இங்கே உட்கார்ந்துக்கறோம்” என்றபடியே எங்கள் பைகளைத் தூக்கி மேலே வைத்து விட்டு, அவன் காட்டிய இருக்கைக்கு எதிரில் இருந்த இருவர் அமரும் இருக்கையில் நானும் திவ்யாவும் அமர்ந்தோம். எங்கே உட்காருவது என முழித்த சங்கீதாவிடம், “ஏய்.. என்ன முழிச்சுட்டு இருக்கே.. அதான் முன்னாடி சீட்ல ஒரு இடம் இருக்குல்ல.. அதுலே போய் உட்காரு” அதட்டினேன் நான்.

சிவாவையும் என்னையும் மாறி மாறி பார்த்தபடியே முன் இருக்கையில் சென்று அமர்ந்தாள் சங்கீதா. ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு மஃப்ளரை கழுத்தில் கட்டிக் கொண்டேன் நான். வழியனுப்ப வந்தவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு பேருந்து கிளம்பியது. “இவனால இன்னைக்கு ஒரு மணி நேரம் லேட்டு” மனதுக்குள் கருவியவாறே தூக்கம் கண்களைத் தழுவ அயர்ந்து உறங்கி விட்டேன்.

எவ்வளவு நேரம் உறங்கினேன் எனத் தெரியவில்லை.. யாரோ காலை சுரண்டுவது போல தோன்றியது. அடித்துப் பிடித்து எழும்பி பின் இருக்கையைப் பார்த்தால் ஐம்பது வயது மதிப்புள்ள நபர் ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார். “சே..சே.. அப்பா வயசில் ஒருத்தர் இருக்காரு.. தெரியாம கால் பட்டிருக்கும்” நினைத்தபடியே மீண்டும் உறங்க முயன்றேன், முடியவில்லை. மீண்டும் அதே சீண்டல் இரண்டொரு முறை தொடர உறுதியாகி விட்டது, இது தெரிந்தே நிகழ்வது தான் என்று. என்ன செய்வது எனப் புரியாமல் கால்களை நன்றாக முன்னே இழுத்துக் கொண்டு அமர்ந்தேன். இப்போது இருக்கையின் இடைவெளி வழியே விரல்கள் ஊர்ந்து வந்து என் இடையைத் தொட்டது. கம்பளிப் பூச்சி போல அருவருப்பாக உணர்ந்ததும் வேகமாக கைகளைத் தட்டி விட்டேன். மீண்டும் மீண்டும் அந்த விரல்கள்.. பின்னால் திரும்பி நான் பார்க்கும் போது உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்த அந்தக் காமுகனை என்ன செய்வது எனத் தெரியாமல் நெளிய ஆரம்பித்தேன் நான். அருகில் திவ்யா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். லேசாக எட்டி எதிர்புற பின் இருக்கையைப் பார்க்க சிவா இன்னும் உறங்காமல் தான் இருந்தான். “அவனை அழைத்துக் கூறி விடலாமா?” மனதுக்குள் தோன்றிய எண்ணத்தை ஒத்தி வைத்தேன். “இப்படி ஏதாவது வாய்ப்பு கிடைச்சா தன்னை ஹீரோவா காட்டிக்கலாம்னு தான் அவனே காத்திருக்கான்.. இதுல நான் வேற அவன் எண்ணத்துக்கு எண்ணெய் ஊத்தணுமா” என எண்ணியபடியே சீட்டின் விளிம்பில் வந்து உட்கார்ந்தேன்.

இப்போதும் தொல்லை விடவில்லை.. நான் சத்தம் போடாதது அவனுக்கு தெம்பை கொடுத்திருக்கும் போல.. அவனும் இருக்கையின் முனையில் வந்து அமர்ந்து எட்டி என் உடலின் மேல் விரல்களை படர விட ஆரம்பித்தான். இதற்கு மேல் பொறுப்பது சரியல்ல என நான் திரும்பிய விநாடி, “சார்.. நீங்க அந்த சீட்டிலே போய் உட்காருங்க.. நான் இங்கே உட்கார்ந்துக்கறேன்” சிவாவின் குரல் மெலிதாகக் கேட்டது. “நான்.. நான் எதுக்கு எழும்பணும்? என்ன விளையாடுறியா பா நீ? தூங்கிட்டு இருக்கறவனை எழுப்பி வேற சீட்ல உட்கார சொல்லுற.. முன் சீட்டிலே பொண்ணுங்க இருக்கறதாலேயா?” நக்கலாய் கேட்ட அந்தக் கிழவனைப் பார்த்து முறைத்தான் சிவா.

“மரியாதையா இப்போ எந்திரிச்சு அந்த சீட்டுக்கு போறீங்களா இல்லையா.. நீங்க இவ்வளவே நேரம் என்ன செய்துட்டு இருந்தீங்கன்னு நான் பார்த்துட்டு தான் இருந்தேன். சத்தம் போடாம போனீங்கன்னா மரியாதை மிஞ்சும்.. இல்லைன்னா நீங்க என்ன செய்தீங்கன்னு முன் சீட்டில் இருக்கற பொண்ணு சொல்லுவா‌.. அப்புறம் கிடைக்க வேண்டிய மரியாதையை வாங்கிக்கோங்க” யாருக்கும் கேட்காத மாதிரி, அதே நேரத்தில் கடின குரலில் அவன் கூற முகத்தில் ஈயாடாமல் எழுந்துச் சென்றான் அந்தக் காமுகன். அந்த இடத்தில் இப்போது அமர்ந்து கொண்டான் சிவா. பேருந்தில் இருந்த முப்பது பேரில் எங்கள் மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்திருந்தது அந்த சம்பவம்.

அவன் முகத்தைப் பார்க்கக் கூட அருகதை அற்றவளாக குறுஞ்செய்தி ஒன்றை அவனுக்கு அனுப்பி வைத்தேன். “ஐ அம் சாரி சிவா.. தாங்க்ஸ் எ லாட்”. அவனிடமிருந்து பதில் வந்தது, “டோன்ட் வொர்ரி.. ஐ ம் ஹியர் ஃபார் யூ த்ரீ.. “

இனிமேல் சிவா எங்களுடன் பயணிப்பதில் நிச்சயம் எனக்கு எந்த ஈகோவும் இல்லை. அவன் எந்த இருக்கையில் அமர சொல்கின்றானே அதிலேயே அமர்ந்து கொள்வேன்.. அப்பாவின் நம்பிக்கை பொய் ஆகவில்லை.. மனிதர்களை சரியாகத் தான் எடை போட்டிருக்கின்றார்.. நான் தான் அதிகப்பிரசங்கித்தனமாக சிந்தித்திருக்கின்றேன்.. என்னென்னவோ எண்ணங்கள் மனதில் ஓட, இப்போது நிம்மதியாக உறங்க ஆரம்பித்தேன் நான்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!