ஒரு பக்க போட்டிக்கதை: தாய் உள்ளம்

by admin
75 views

எழுத்தாளர்: திருமதி ப்ரஸன்னா வெங்கடேஷ்

“ கலா அக்கா, எதுக்கு போன் போட்டு என்னை வரச் சொன்னே?  மீன் கொழம்பு வாசம் வேற தெருக்கோடி வரைக்கும் வருது?” என்று சொல்லியபடியே வேணி உள்ளே வந்தாள்.  “ வா வேணி, எல்லாம் உன் சிநேகிதிக்காகத் தான் செஞ்சிருக்கேன்.  என் வீட்டுக்காரர் மார்க்கெட்டுக்கு இப்பத் தான் கெளம்பி போனாரு. அது தான் உனக்கு போன் அடிச்சு உடனே வரச் சொன்னேன்” என்று சொன்னாள் கலா. 

“ என்ன தான் இருந்தாலும், உனக்கு ரொம்பத் தான் பிடிவாதம் கலா அக்கா. உன் மகள் சாலாட்சிய நீயே பாத்து உன் கையால செஞ்சதைக் கொடுத்தா என்னவாம் ? அது சந்தோஷப்படும் இல்ல ? ” என்று கடிந்து கொண்டாள் கலாவின் பக்கத்து வீட்டில் இருக்கும் வேணி அவள் கலாவின் மகள் சாலாட்சியின் உயிர்த் தோழியும் கூட.

“ உனக்குத் தெரியாதா வேணி?  சாலா தன் இஷ்டத்துக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட தால தானே சாலா அப்பாக்கு போன வருஷம் ஹார்ட் அட்டாக் வந்துச்சு? ஆஸ்பத்திரில பத்து நாள் இருந்து ஆபரேஷன் பண்ணி , மனுஷன் எத்தனை கஷ்டப்பட்டாரு? பொழைச்சு வருவாரான்னு ஆயிடுச்சே.  அவ பேரை எடுத்தாலே அவருக்கு பயங்கரமா கோவம் வருது.  இப்பிடி இருக்கிறச்ச, நான் வேற அவளோட ஒட்டி உறவாடினா , வீட்ல ப்ரச்சனை தான் வரும். நீயே இதைக் கொண்டுட்டுப் போய் குடு.  மாசமா இருக்கான்னு சொல்ற , அவளுக்கு மீன் கொழம்புன்னா உசுரு” என்று ஒரு தூக்கை வேணியிடம் தந்தாள் கலா.” வேணி, நான் செஞ்சதுன்னு சொல்லாத.  அப்பனை மாதிரியே அவளுக்கு ரோஷம் ஜாஸ்தி.  சாப்பிடாம இருந்துருவா” என்று சொன்னாள்.

“ சரி அக்கா, நான் கெளம்பறேன்.  சாலா இன்னிக்கு டெய்லர் கடைக்குப் போணும்னு சொல்லிட்டு இருந்தா” என்று கிளம்பினாள்.  வேணி சாலாட்சியின் வீட்டை அடைந்த போது, சாலா சாப்பிட உட்கார்ந்து இருந்தாள் “ வா, வேணி. ஒரு அஞ்சு நிமிஷம் இரு.  சாப்ட்டுட்டு வந்துடறேன். நீயும் ஒரு வாய் சாப்பிடறியா ?  கீரை மசியல் செஞ்சிருக்கேன்” என்று சாலா சொன்னாள்.  “ யம்மா, எத்தினி தடவ நான் சாப்பிடறது? உனக்காக மீன் கொழம்பு செஞ்சு கொண்டு வந்திருக்கேன்.  இந்தா, சாப்பிடு” என்று குழம்பு தூக்கை சாலாவிடம் தந்தாள் வேணி.  “ அடேடே, கொண்டா. ஒரு கை பாக்கறேன் உன் சமையலை” என்று ஆர்வமுடன் மீன் குழம்பை சோறுடன் கலந்து சாப்பிடத் தொடங்கினாள் சாலா.  வேணி ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டாள்.

சாலா சாப்பிட்டு விட்டு வந்ததும் , “ கொழம்பு நல்லா இருந்துச்சா சாலா ? “ என்று கேட்டாள் வேணி.  “ ரொம்ப.. ரொம்ப நல்லா இருந்துச்சுனு எங்கம்மா கிட்ட சொல்லு வேணி.  எல்லாத்தையும் நானே சாப்டுட்டேன்” என்று கலங்கிய கண்களோடு சாலாட்சி சொன்னாள்.  வேணி அசட்டுச் சிரிப்புடன் ,” எப்பிடிடி கண்டுபிடிச்ச ?  உன் கிட்ட சொன்னா நீ சாப்டாம இருந்துட்டா என்ன செய்யறதுன்னு தான் நான் சொல்லலை/” என்று வேணி சொன்னாள்.  “ ஏண்டி வேணி, எங்கம்மா கைபக்குவம் எனக்குத் தெரியாதா? அப்புறம்.. உனக்கு இன்னும் ஒரு முடி கூட நரைக்கலையே கண்ணு. குழம்புல வெள்ளை முடி வேற இருந்துச்சே” என்று சிரித்தபடி சொன்னாள் சாலாட்சி.  “ வேணி, அம்மாங்கிற உறவு, ஒட்டி உறவாடற உறவுடி. வேண்டாம்னு என்னால அவ்வளவு சுலபமா உதற முடியாது.  இப்ப, நானும் ஒரு தாயாகப் போறதால எனக்கு எங்கம்மா மேல பாசம் அதிகமாத் தான் ஆயிருக்கு வேணி.  சீக்கிரமே  எல்லாம் சரியாயிரும்னு ஒரு நம்பிக்கைல வாழ்ந்துகிட்டு இருக்கேன்” என்று கம்மிய குரலில் சொன்னாள் சாலாட்சி. 

சாலாட்சியின் கைகளை ஆதரவுடன் பற்றிய வேணி, “ கவலப்படாதே சாலா.  உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடி நடக்கும். நீ திருப்தியா சாப்பிட்டேன்னு உங்கம்மா கிட்ட சொல்றேன்” என்று சொன்னாள் .  “ நல்லா சொல்லு, அடுத்த தடவை பூண்டு ரசம் செஞ்சு குடுக்கச் சொல்லு. தூக்கைத் தேச்சு கொடுக்கறேன்” என்று சொல்லி சிரித்தாள் சாலாட்சி.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!