ஒரு பக்க போட்டிக்கதை: காக்கும் கரங்கள்

by admin
161 views

எழுத்தாளர்: அனந்த் ரவி

அந்த வீடு சுற்றி வளைக்கப் பட்டு விட்டது. இனி அவர்கள் தப்பிக்க முடியாது அதிகாரி அனுபமா வெற்றிச் சிரிப்புடன் மேலதிகாரி திவாகரைப் பார்த்தாள்.

“சார், கடவுள் புண்ணியத்துல இது தனி வீடா இருக்கு. ஒரு குண்டு போட்டு வீட்டைத் தரை மட்டமாக்கிடுவோம். அந்த மூன்று தீவிரவாதிகளும் எரிஞ்சி சாம்பலாயிடுவாங்க.”

அந்த வீட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த திவாகர் ஒரு நொடி தன் பார்வையைத் திருப்பி அனுபமாவைப் பார்த்தார். “இல்லை அனுபமா, அது வேண்டாம்”

“சார்” பதட்டப் பட்டாள் அனுபமா. “என்ன சார் சொல்றீங்க? நாலு இடங்கள்ல குண்டு வச்சி நூறு பேரைக் கொன்னப் படுபாவிங்க சார் அவனுங்க. அந்த நாய்களை உயிரோட எரிக்க வேணாம்னு சொல்றீங்களா?”

மீண்டும் தன் பார்வையை அவள் மேல் திருப்பினார் திவாகர் “அனுபமா அவனுங்களை எரிக்க வேண்டியதுதான். அதுல சந்தேகம் இல்லை. ஆனா இந்த வீட்டை அழிக்க வேணாம்னு சொல்றேன்”

நொந்து போனாள் அனுபமா. “எனக்குப் புரியல சார்.”

மெல்ல புன்முறுவலிட்டார் திவாகர். “அனுபமா அங்கே பார். அந்த மரத்துல இருக்கற புறா வெகு நேரமா என்னைத்தான் பாத்துகிட்டு இருக்கு. அது அந்த வீட்டுக்குள்ள கூடு கட்டித் தன் குஞ்சுகளை விட்டு வச்சிருக்கு. வீட்டை அழிச்சாத் தன் குழந்தைங்களும் போயிடுமேன்னு அந்த புறா வருத்தப் படாதா?”

“சார் கேவலம் ஒரு புறாவுக்காக மனித குலத்தின் எதிரிகளை விட்டுடறதா?”

“கேவலம் ஒரு புறா இல்ல அனுபமா. அது ஒரு தாய். இந்த வீட்டோட மின்சாரத்தை நிறுத்து. தொட்டியில இருக்கற தண்ணீர் தீர்ந்து போயிட்டா அவனுங்க வெளியே வந்துதான் ஆகணும். மின்சாரம் இல்லேன்னா மோட்டார் போட்டு தண்ணி ஏத்த முடியாது. ஒரு நாலு நாள் பொறுப்போம். இந்தப் பறவைத்தாயின் ஏக்கத்தை மதிப்போம். கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் தன் அலகால இரையை தன் குஞ்சுகளுக்குக் கொடுத்துட்டு வந்து இங்க உட்கார்ந்திருக்கு. அதை ஏமாத்த வேண்டாம்” என்று உறுதியாக உத்திரவிட்டார் திவாகர். 

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

1 comment

Avatar
Susri May 8, 2024 - 10:30 am

அழகான புனைவு

Leave a Comment

error: Content is protected !!