ஒரு பக்க போட்டிக்கதை: தாய்க்கு நிகர் தாயே

by admin
49 views

எழுத்தாளர்: குட்டிபாலா

பள்ளித்தோழி பங்கஜம் தம்பதியரின் மணி விழாவில் கலந்துகொண்டு கோயம்பேடு திருமண மண்டபத்திலிருந்து சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தாள்  பரமேஸ்வரி.  ஆறு ஆண்டுகளுக்குப் பின் சென்னை வந்ததால் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள் ஆட்டோ திடிரென்று செனாய் நகர் பக்கம் திரும்பியதும் “ஏன் திரும்புகிறாய்” என்று கேட்டதற்கு ஓட்டுனர் “அந்தப் பக்கம் சாலையில் வேலை நடக்கிறது என்றார்.  பேசிக்கொண்டிருக்கும்போதே ஆட்டோ நுழைந்தது அவள் வீடு இருக்கும் தெரு என்பது தெரிந்ததும் அவளையறியாமலே நாலாம் நம்பர் வீட்டை தேடின கண்கள். குறுகிய தெருவில் வாகனங்கள் அதிகமானதால் ஆட்டோ ஊர்ந்தது.

ஆட்டோ நான்காம் எண் வீட்டின் முன் வரும்போது சிறிய கூட்டம்  இருப்பதைப் பார்த்து திகைத்தவள் செவிகளில் “அம்மா” என்ற அலறல் விழவும் “கந்தப்பா” என்று கத்தியபடி கன்றின் குரல் கேட்ட தாய்ப்பசுவைப் போல் ஆட்டோவை நிறுத்தச் செய்து  இறங்கி ஓடினாள். கூட்டத்தை விலக்கி அடி வாங்கிக் கொண்டிருக்கும் அவனை கட்டிக் கொண்டாள். மறுபடியும்  அடிப்பதற்காக வந்தவனைத் தடுத்து “ஏன் என் மகனை அடிக்கிறாய்?” என்று கேட்டாள். “இரண்டு வருடமாக வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்டாமல் உன் கையெழுத்தை திருட்டுத்தனமாகப் போட்டு இந்த வீட்டை  பிணை வைத்து ஏமாற்றி இருக்கிறான் உன் மகன்” என்றதும் “இதற்காகவா அடித்தாய் என் மகனை.  இந்த வீடு என் பெயரில் தான் உள்ளது. நான் கையெழுத்திடுகிறேன்.
என்னிடம் உள்ள தொகையை வைத்து உங்கள் கடனை வட்டியுடன் ஆறு மாதத்தில்  அடைத்து விடுகிறேன்” என்றாள்.  அருகில் இருந்த நல்லசிவம் “ஆமாம்பா. 30 ஆண்டுகளுக்கு முன்பாக எங்களைப் போன்ற 20க்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தவணை முறையில் நிலம் வாங்கி குருவிக்கூடு போல் கட்டிய வீடுகளில் இந்த பரமேஸ்வரியின் வீடும் ஒன்று. கந்தப்பன் அரசியல்வாதி ஒருவருடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் செய்தது பிடிக்காமல் வீட்டை விட்டுப் போனவள். தன்னை அவமதித்து வெளியேற்றிய கந்தப்பனைக் காப்பாற்றுவதற்காகவே  ஆறு ஆண்டுகளாக தன் இருப்பிடம் பற்றி யாருக்கும் தகவல் தெரிவிக்காதவள் இன்று வந்திருக்கிறாள். இதுதான் தாய்ப்பாசம் என்பது. இறைவன் மனித குலத்திற்கு அருளியுள்ள கொடை. நான் சாட்சி கையெழுத்து போடுகிறேன். ஆறு மாதங்களில் உங்கள் கடனை வட்டியோடு திருப்பி விடுவாள்” என்றார்.

அன்று தாயை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கந்தப்பன் அத்தனை பேர் முன்னிலையில் தவறை உணர்ந்து தாயின் காலில் விழுந்து அழுதான்.

“வா கந்தா.வயிறு ஒட்டியிருக்கிறதே. முதலில் ஏதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவோம்” என்று ஆட்டோவில் ஏறினாள்.

” சென்ட்ரல் போக வேண்டாமா அம்மா? இரயிலுக்கு நேரமாகி விடுமே!” என்று கேட்ட ஓட்டுநரிடம் “இனி என் மகனோடு எங்கள் வீட்டில் தான்” என்று சொன்னாள்.

தாயின் மடியில் தலை வைத்து படுத்திருந்த கந்தப்பனை கண்ணாடியில் பார்த்த ஓட்டுநர் “தாய்க்கு நிகர் தாய் மட்டுமே” என்று தனக்குள் சொல்லிக் கொண்டதோடு அதை ஆட்டோவின் பின்புறம் எழுதிடவும் நிச்சயித்தார்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!