எழுத்தாளர்: குட்டி பாலா
“ஆன்ட்டி, ஜெயபால் ஏன் மூன்று நாட்களாக ஸ்கூலுக்கு வரவில்லை?” பி.டி சார் அவனை தேடுகிறார்” என்றவளிடம் ” ஏதாவது தப்பு செஞ்சிட்டானா?” என்று பதற்றத்தோடு கேட்டாள் பத்மா.” “தெரியாது ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு அவள் சைக்கிளில் வேகமாக போய்விட்டாள்.
இரவில் மகனிடம் இது பற்றி கேட்டதற்கு “பி.டி வகுப்புக்கு போகவில்லை. அவ்வளவுதான்” என்ற அவன் பதில் அவளுக்கு திருப்தியாக இல்லை. அவனிடம் ” ஜெயா, உன் அப்பாவின் ஆசைப்படி நீ நன்றாகப் படித்து கலெக்டராகவோ டாக்டராகவோ இன்ஜினியராகவோ வரவேண்டும். அதனால் காரணம் இல்லாமல் பள்ளிக்கு மட்டம் போடாமல் ஒழுங்காகப் போய் கவனமாக படிக்க வேண்டும்” என்றாள்.
இரண்டாவது நாள் அதிகாலையிலேயே ஜெயபாலின் வீட்டுக்கு வந்த பி.டி. மாஸ்டரைப் பார்த்ததும் இருவருக்கும் ஆச்சரியம். “வாங்க, வாங்க” என்று அவரை வரவேற்று பத்மா பாய் ஒன்றை தரையில் விரித்து உட்காருமாறு சொன்னாள்.
அவர் “ஜெயபால், நாளை முதல் நீ பயிற்சிக்கு வரலாம்” என்றதும் “சார், நான் எப்படி…” என்று இழுத்தவனிடம் “ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொள்ள தேவையான உன் உடை மற்றும் ஷுவுக்கான பணம் வந்து விட்டது. இனி நீ மட்டும் தவறாமல் பயிற்சிக்கு வந்து போட்டியில் கலந்து கொண்டாலே போதும். மாநில அளவில் எல்லா ஓட்டப் பந்தங்களிலும் நீதான் முதலாவதாக வெற்றி பெறுவாய். நம் பள்ளிக்கும் பெருமை; பயிற்சியாளர் என்ற முறையில் எனக்கும் பெருமை. உனக்குள்ள அரிய திறமையை உலகறிய வேண்டுமப்பா” என்றார்.
ஜெயபால் “அவசியம் வருகிறேன் சார். ஆனால் எனக்காக பணம் தந்து உதவியவர் யார் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றதற்கு “போட்டிகள் முடிந்து வெற்றிக் கோப்பைகளோடு அவரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றார்.
போட்டிகள் முடிந்து கோப்பைகளோடு அவனை தாய் பத்மாவிடம் அழைத்துச் சென்று “இவர் தான் உனக்காக பணம் கொடுத்தது” என்றதும் விக்கித்து நின்றான் ஜெயபால்.
தாயின் காலில் விழுந்து வணங்கியவன் “அம்மா ஏதம்மா உன்னிடம் அவ்வளவு பணம்?”என்றதும் கண்களில் நீர் வழிய அவன் அப்பாவின் படத்தைக் காட்டினாள். “அங்கிருந்த உண்டியல் எங்கே அம்மா?” என்று கேட்கவும் அவன் கையிலிருந்த கோப்பைகளைக் காட்டி அவனைக் கட்டித் தழுவிக் கொண்டாள் ஜெயா. “படித்துத்தான் புகழடைய வேண்டும் என்றில்லை. அன்று உன் பி.டி.ஆசிரியர் மட்டும் உன் திறமை பற்றி விளக்கி இருக்காவிட்டால் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு சம்மதித்திருக்கவே மாட்டேன்.அதற்காக உண்டியலையும் உடைத்திருக்க மாட்டேன். நம் நன்றி அவருக்கே” என்றாள்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள
மேல் விபரங்களுக்கு: