எழுத்தாளர்: எஸ்.ராமன்
கிழித்துப் போட்ட நார் போல், அந்த சிவந்த உடல், பாயில் கிடந்தது. வற்றிப் போன இரத்த நாளங்கள், நிறத்தை இழந்து கொண்டிருந்தன.
கிள்ளிவிடக் கூட இடமில்லாமல், சதைகள் சுருங்கிப் போயிருந்தன. கண்கள் எதையோ எதிர்பார்த்து குத்திட்டு நின்றன.
நீர் வற்றிப் போக காத்திருக்கும் குளத்தில், எங்கோ ஓர் மூலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் சூரிய ஒளியில் பளிச்சிடுவது போல, கண்களிலிருந்து கண்ணீர் பளிச்சிட்டு நின்றது.
அந்த பங்களாவில், பல படுக்கை அறைகள் இருந்தும், கொல்லைப்புறத்தில், அவளுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு அறையை இவ்வளவு நாட்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.
அந்த அறையில் ஓர் மூலையில் தஞ்சம் புகுந்திருந்த ஒரு பீங்கான் தட்டு-டம்ளர் கூட்டணி, அந்த வீட்டில் அவளுடைய முக்கியத்துவத்தைப் பார்த்து, ஏளனமாக சிரித்துக் கொண்டிருந்தன.
வழக்கத்திற்கு மாறாக, இன்று கூட்டம் அவளை சூழ்திருந்தது.
பொத்தி.பொத்தி, முத்தமிட்டு வளர்த்த அவளுடைய ஒரே மகன் குமார், கையைக் கட்டிக்கொண்டு, நின்று கொண்டிருந்தான். அவன் இப்பொழுது ஒரு நிறுவனத்தில், பெரிய அதிகாரி. நான்கு வயதில் தந்தையை இழந்த மகனை சமையல் வேலை செய்து படிக்க வைத்தாள். தான் பட்டினி கிடந்து, அவன் வயிறார சாப்பிடுவதை கண்டு மகிழ்ந்தவள்தான் அவள்.
மகனும், அம்மா அம்மா என்று பாசத்துடன் அவளை சுற்றி வந்தான். நன்றாக படித்து, உபகார சம்பளத்தில், மேல் படிப்பை முடித்து, உத்தியோகத்தில் அமர்ந்து, படிப்படியாக முன்னேறினான். அம்மாவின் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று அடிக்கடி சொல்வான்…கல்யாணம் ஆகும் வரை.
அவனுக்கு வந்த மனைவி பெரிய இடத்துப் பெண். மாமியாரை தூசியாக மதித்தாள். உத்தியோகத்தில், கணவன் உயர உயர, மாமியார், தங்கள் அந்தஸ்த்துக்கு ஒரு இழுமானம் என்று நினைத்தாள். ஒரே வீட்டில் இருந்தும், தாயும் மகனும் பேசிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டாள்.
அவனும், மனைவிதான் உலகம் என்று நினைத்து, தன் தாயை ஏதோ வேண்டாத பொருள் போல் ஒதுக்க ஆரம்பித்தான். அவன், அவளிடம் பேசி, பல வருடங்கள் ஆகிவிட்டன.
அந்த தாயின் நெஞ்சம், அவனுடைய நன்மைகளுக்காக பிரார்த்தனை செய்துகொண்டே ஒடுங்கிக் கொண்டிருந்தது. மனம் தளர, அவமதிப்புகளும், அவமானங்களும் தாளாமல், உடல் ஒடிந்து விழத் தொடங்கியது.
மகனுக்கு தன்னால் அவமானம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில், தாயுள்ளம், வீட்டுப்படி தாண்ட மறுத்தது. தினமும், அறைக்கு வெளியிலிருந்து, அவளுடைய தட்டை நோக்கி வீசி எறியப்படும் உணவு கவளத்தை உண்டு, உடல் நாராகியது.
வழக்கத்திற்கு மாறாக, தன்னை சுற்றி நின்றிருந்த கூட்டத்தை கண்டு,அவளுக்கு,ஆச்சரியம் கண்களில் தேங்கி நின்றது.
“ஒரு வாரமாக, சாப்பாடே இல்லைங்க.
இன்னைக்கு கிழவி தாங்காதுன்னுட்டுதான் உங்களிடம் சொன்னேன்…” சமையல்காரன் சொன்னதை கேட்டு, மருமகள், தோளை முகவாயில் இடித்துக் கொண்டாள்.
“ஆமா…ஏதோ கேட்பதற்கு வாயை குவிச்சுக்கிட்டு இருக்கிற இந்த கிழம், இன்னும் நூறு வருஷம் உயிரோடு இருந்து, நம்ம உயிரை வாங்கப் போகுது…” மருகளின் வாயிலிருந்து சொற்கள், தீப்பொறிகளாக வெளிப்பட்டன.
பல வருடங்களுக்கு பிறகு, தன் மகனின் முகத்தை பார்த்த தாயின் முகம், ஆதவனைக் கண்ட தாமரை போல் மெல்ல மலர்ந்து, வாய் வழியே ஏதோ செய்தி சொல்ல முயற்சித்தது.
“நீங்க உங்க டயத்தை இங்கே வேஸ்ட் பண்ணாதீங்க.
கிழம் இப்ப சாகப் போவதில்லை. உங்களை பார்த்தால், எதையாவது கேட்டு தொந்தரவு பண்ணும். இதைவிட முக்கியமான வேலைகள் இருக்கு. அதை கவனியுங்க…”மனைவி கணவனுக்கு கட்டளையிட்டாள்.
மந்திரத்திற்கு கட்டுப்பட்ட பாம்பு போல்,அவன், திரும்பி நகர ஆரம்பித்தான்.
நாலடி கூட தாண்டி இருக்க மாட்டான். தாயின் ஈனஸ்வரத்தில் மிதந்த குரல், அவனுடைய நடையின் வேகத்திற்கு தடை போட்டது. அந்த குரலை, பல வருடங்களுக்கு பிறகு கேட்டவன், தன் வயிற்றில் ஏதோ வேகமாக பிசையப்படுவதைப் போல உணர்ந்தான்.
“கு…மா…ர்… நே…க்…கு…ஒ…ரு…ஆ…சை… நடுங்கும் குரலை கேட்டு திடுக்கிட்டவனின் உடல் நடுங்கியது. அவனுடைய அனைத்து உடல் தசைகளும் ஆடியதில். இரண்டடி பின்வாங்கினான்.
நடந்தவைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் மருமகள்.
“தனக்கு பிடிச்ச அல்வா, ஜிலேபி எதையாவது கேட்கும். சாகப்போற டயத்தில் கூட, கிழத்திற்கு சாப்பிடற ஆசை விடல…” மருமகள் ஆக்ரோஷத்துடன் கத்தினாள்.
கிழவி, சிரமத்துடன், இடது கையை தரையில் ஊன்றி, வலது கையை பிரயத்தினப்பட்டு உயர்த்தி, அவனை அருகே அழைத்தாள்.
“என்ன வேணும்…”குமார் சன்னக் குரலில் கேட்டான். அவனை உட்காருமாறு சைகை காட்டினாள்.
அதிக சிரமத்துடன் உதடுகளை குவித்தாள்.
“ஆ…சை…எ…ன்…ன ஒரு தடவை அம்மான்னு கூப்பிடேன்…”மூச்சை பிடித்துக் கொண்டு, வார்த்தைகளை வெளியேற்றினாள்.
அந்த வார்த்தைகளை கேட்ட குமார், தன் உடலுக்குள் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சியதைப் போல் உணர்ந்தான்.
அவன் உடல் முழுவதும் வியர்த்தது.
அந்த தாரக மந்திரத்தை, தான் பல ஆண்டுகளாக மறந்திருந்தது, அவன் நினைவில் மெல்ல நிழலாடியது.
அவன் சுய நினைவிற்கு வருவதற்குள், கிழவி அப்படியே கண்களை மூடி, தலை சாய்த்திருந்தாள்.
அந்த காட்சியைக் கண்ட அவனுடைய அடி வயிற்றிலிருந்து மானசீகமாக எழும்பிய ‘அம்மா’ என்ற ஒலி நாதம், அந்த வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பட்டு எதிரொலித்து, வேறு உலகத்திற்கு பயணித்துவிட்ட அந்த தாயின் உயிர் கீற்றுகளின் காலில் விழுந்து சரணடைந்தது.
முற்றும்.