எழுதியவர்: கீதாராணி. இரா
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு!!
கைகால்கள் கட்டப்பட்ட அந்த நிலையில் அவளுக்கு ஞானோதயம் வந்தது! காதல் தவறல்ல, காதலிப்பவன் சரியானவனாக இருக்க வேண்டும் என்று. காலம் கடந்த வந்த அறிவுதான். இருப்பினும், இப்போதாவது வந்ததே என்று நினைத்தாள்.
இனி சில மணி நேரங்கள் மட்டுமே மிச்சமிருப்பதால்…! தன் தவறுகளை உணர்ந்து கொள்கிறாள் போலும். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவளின் தாய் தலைப்பாடாக அடித்துக் கொண்டாள். “படிக்கும் வயதில் காதல் தேவையா?” என்று.. அவளோ அவரை துச்சமாக நினைத்து “ஆமாம், கண்டிப்பாக…” தலை சிலுப்பிக் கொண்டு கூறினாள். .
“நம் குடும்ப மானம்…?” என்றவரை இடைமறித்து, “மானத்திற்கும் காதலுக்கும் என்னம்மா சம்பந்தம்? தயவுசெய்து பழைய பல்லவியைப் பாடதே…! வேறு புதிதாக சொல்லுங்கள்.
அடுத்து என்ன சொல்வீர்கள் என்று தெரியும்! உனக்கு பின்னால் இருப்பவளைப் பார் என்றுதானே…? அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் பார்க்க வேண்டும்.” எடுத்தெறிந்து பேசிய அவளைக் கண்ணீரோடு பார்த்தார் அவர்.
அவளின் தந்தையோ இவள் நடத்தை கண்டு, எதுவுமே பேசாமல் ஒதுங்கி விட்டார். அதை அவளின் வெற்றியாக நினைத்து மகிழ்ந்து போனாள். அங்கு பேசியதை இவனிடமும் கூறி மகிழ அதற்கு விருந்து வைத்து கொண்டாடினான் அவன்.
அடேயப்பா…! அன்றுதான் எவ்வளவு மகிழ்ச்சி. உற்று உற்று பார்த்தவனை, காதலினால் தான் அவ்வாறு பார்க்கிறான் என்று நினைத்து வெட்கம் கொண்டாள் பேதை. ஆனால், நிஜம் இப்போது தெரிகிறது. எது நடந்தாலும் கேள்வி கேட்க ஆளில்லை என்றுதான் பார்த்திருக்கிறான் என்று.
அம்மாவிற்கும் அவளுக்கும் நடந்த அன்றைய சண்டைக்குப் பிறகு யாருடனும் அவள் பேசுவதில்லை. அவர்களும், அவளுடன் பேச முயற்சிக்கவில்லை. அளவுக்கு அதிகமான சுதந்திரமும், கைநிறைய தரப்பட்ட காசும், நினைத்ததை நடத்தியே பழக்கப்பட்ட மனமும் அவளை அதிகம் யோசிக்க விடவில்லை. இப்போது யோசிக்க அவளுக்கு நேரமுமில்லை. கண்ணீரோடு இதை நினைத்த மௌனமாக அவள் கதற, அவனோ திவ்யமாக பரோட்டாவை, சால்னாவில் குழைத்து விழுங்கிக் கொண்டிருந்தான்.
அவள் பார்ப்பதை கண்டதும் “சாப்பிடறாயா பேபி? ஆனால், சாப்பிட்டதும் உயிரோடு மண்ணுக்குள் புதைச்சா உடனே உயிர் போகாது…! உனக்குத்தான் கஷ்டம். உன்னை உயிருக்கு உயிராக நேசிச்சேன்…! அதனாலே, உன்னைக் கஷ்டப்படுத்தாமல் கொல்ல நினைக்கிறேன் ஓகே. இப்ப உனக்கு சாப்பாடு கிடையாது.” கூறியபடியே பெரும் ஏப்பத்தோடு எழுந்து அவள் அருகில் வந்தான்.
” உன் கண்கள் இரண்டும் என்னைக் கேள்வி கேட்கிற மாதிரி இருக்கு. சொல்லு பேபி என்ன தெரியணும்? சாகும் போது சந்தேகமா சாகக்கூடதில்லே…” நக்கல் பேச்சும் நமட்டு சிரிப்புமாக அவள் அருகில் அமர்ந்து கொண்டு, வாயில் சுருட்டி அடைந்திருந்த துணியை எடுத்து விட்டான்.
வாயிலிருந்து துணி எடுக்கப்பட்டதும் ” உவ்வே…” என்று ஓங்காரமிட்டவளைக் கண்டு “நான் ஒன்னும் பண்ணலையே… பேபி…! உனக்கு எதானலே வாமிட் வருது? ஓ…! இந்த துணியோட மணமா…! இருக்கும் இருக்கும். என் ஷீ துடைக்கிற துணி அதான் மணம் அதிகமா இருக்கு போல…” என்று ஆங்காரமாக அவன் சிரிக்க, பாவம் அவளுக்கு குமட்டலும் வாந்தியும் நிற்வேயில்லை.
அதைக் கண்டு கொஞ்சம் பாவம் பார்த்தவன், ஒரு வாய் தண்ணீர் கொடுத்தான். அருவருப்பில் இருந்தவள் அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க…! எரிச்சலாகி, தண்ணீர் பாட்டிலை மூடி வைத்து விட்டான்.
“ச்சீ… தூ, நீயெல்லாம் மனுஷனா? உன்னைப் போய் காதலிச்சேனே… என்னை நானே அடிச்சுக்கணும்.” கதறலோடு கூறியவளை “நீ எதுக்கு பேபி கஷ்டப்படறே ? அதுக்குத்தான் நான் இருக்கேனே…” கூறியபடியே பளாரென்று ஒன்று விட்டான்.
“பத்தொன்பது வருஷம் வளர்த்தவங்களையே தூக்கி எறிஞ்சிட்டே! என்னையே உனக்கு ஒரு எட்டு மாசமாத்தான் தெரியும். ஏதாவது பிரச்சினைன்னா என்னையும் தூக்கி எறியமாட்டேன்னே என்ன நிச்சயம்!
உன்னை மாதிரி பொண்ணுங்களை நம்பவே கூடாது. டாப்ஸ் மாதிரி, பாய்ஸை மாத்திட்டு போவீங்கடி… அதான் என்னை முதன் முதலா கல்யாணம் பண்ணி ஏமாத்தினவளையும் அதுக்கு அப்புறம் காதலிக்கிறதாச் சொல்லி ஊர் சுத்திட்டு, என்னைவிட பெரிய ஆளா, பொண்ணு கேட்டு வந்ததும், டாடா சொன்னவளையும் கொன்னேன்!
இப்ப வரைக்கும் அதான் செய்றேன். எனக்கு முன்னே ராகேஷ்னு ஒருத்தன் கூட சுத்திட்டு இருந்தியே நீ அவன் என்னானான்னு உனக்குத் தெரியுமா? செத்துட்டான்…! தூக்குல தொங்கி செத்தான். அவன் செத்தப்ப விட்டுது சனியன்னு சொன்னது நினைவு இருக்கா…?
என்னைப் பார்த்ததும் அவனை விட்டே, வேற எவனையாவது பார்த்தா என்னை விடுவே. அதான் உனக்கு சீக்கிரமே நாள் குறிச்சேன்.” பைத்தியம் போல் கத்தி விட்டு அவளருகிலேயே குழி வெட்டத் தொடங்கினான்.
இவனிடம் எப்படி விளக்குவது என்று புரியாது அவள் மருகியபடியே. “ராகேஷை நான் காதலிக்கவே இல்லை. என்னை ஒருதலையாக காதலிச்சு, நான் காதலிக்கலைனா தற்கொலை செய்து கொள்வேன்னு அடிக்கடி மிரட்டிட்டு இருந்தான்.
அவன் தற்கொலை செய்ய போறதுக்கு முன்னே என்னைக் கூப்பிட்டு , உடனடியாக நீ, நான் சொல்ற இடத்துக்கு வரணும் இல்லைன்னா ஏதாவது செய்துப்பேன்னு மிரட்டினான். அவன் மிரட்டலுக்கு பணிய இஷ்டம் இல்லாம, உன்னால் முடிந்ததை செய்ன்னு சொல்லிட்டேன்.
பட்டுன்னு ஃபோனை கட் பண்ணிட்டான். அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கு அவன் கிட்ட இருந்து எனக்கு எந்த தொல்லையும் இல்லை. அந்த நேரத்தில் தான் இனி எனக்கு நிம்மதினு சொன்னேன். சத்தியமாக அன்னைக்கு அவன் செத்ததே எனக்குத் தெரியாது ப்பா… அதுக்கு அப்புறம்தான் தான் தெரியும். ரொம்ப ஃபீல் பண்ணினேன். தயவுசெய்து புரிஞ்சுக்க ஃபீஸ்டா…” கதறிய அவளின் கதறல் அவன் செவியில் எட்டவே இல்லை.
அவன் கண்டு கொள்ளது தன் வேலையில் குறியாக இருக்க, இவள் மனத்தோடு அழுதாள்.
‘ நான் திமிர் பிடித்தவள் தான். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுபவள் தான். ஆனால், யாரையும் காதலித்து ஏமாற்றுபவள் இல்லை.’ இவனிடம் எப்படி புரிய வைப்பது என்று எனக்கு தெரியவுமில்லை ஆண்டவா…! என்னைக் காப்பாற்று என்று வேண்டிக் கொண்டாள்.
அவன் குழி வெட்டும் வேகம் கண்டு பயத்தில் அவளின் இருதயம் குதிரை வேகத்தில் துடித்தது. மூளையில் இரத்த ஓட்டம் அதிகமாகியதை அவளே உணர்ந்தாள் .
கல்லூரியில் இருந்து மதியம் ஒரு மணிக்கு வெளியே வந்ததிலிருந்தவள் இப்போது வரை இவனோடு தான் இருக்கிறாள். சனிக்கிழமை என்பதால் அவள் கோவிலுக்கு செல்ல விரும்பவும், நல்லவனாக அன்போடு அழைத்துச் சென்றான்.
அடுத்து ஐஸ்கிரீம் பார்லர், அங்கே காதல் சொட்டும் பேச்சுக்கள் என்று இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். இரவு எட்டு மணிக்கு அவள் வீட்டில் இறக்கி விடச்சொன்னதும் அவன் முகம் இறுகியது. முனங்கினயபடி “ம்ம்…” என்றான். காதல் கொண்ட மனது அவளைப் பிரிய மனமில்லாமல் இப்படியாகி இப்படி செய்கிறான் என்றெண்ணினாள்.
காரில் செல்லச் செல்ல தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் குடிக்கவும், சட்டென வண்டியை ஸ்பீட் பிரேக்கரில் வேகமாக ஏற்றினான். அதன் காரணமாக தண்ணீர் அவள் மூக்கில் ஏறி விட்டது. பதறிப்போய் விட்டான். உடனே கைக்குட்டையை எடுத்துத் தந்தான்.
அந்த கைக்குட்டையே அவள் தந்தது தான். வீட்டிற்கு அவள் கிளம்புகிறேன் என்றதும் அதை எடுத்து முத்தமிட்டான். அப்போது பரவசமாக பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது வெட்கமாக இருந்தது.
மெதுவாக அதை வாங்கி அவள் முகத்தை துடைக்க, உணர்ச்சிகளின் பிடியிலிருந்ததால் அவளால் கைக்குட்டையில் இருந்து வந்த மணத்தை உணர இயலவில்லை. அதை மூக்கில் வைத்த நொடி வித்தியாசம் தெரிந்து என்ன ஏதென்று அவள் யோசிக்கும் முன் மயங்கி போனாள் .
அவள் கண்விழித்த போது கைகால்கள் கட்டப்பட்டிருந்தது. ஏழு நாற்பதிற்கு கைப்பேசிக்கு, அவள் தங்கை அக்கா வீட்டிற்கு எப்போது வருவாய்? என்று செய்தி அனுப்பி இருந்தாள்.
எப்போதும் பதில் அனுப்ப மாட்டாள். ஏனென்றால் அது அவள் தாயின் கேள்வி என்று தெரியும் அதனால். இன்று ” எய்தவன் இருக்க அம்பை நோவதேன் ” என நினைத்து, இதோ சிறிது நேரத்தில் வந்து விடுவேன் என்று அனுப்பி இருந்தாள். அவர்களாவது தேடுவார்களா? இவனிடமிருந்து அவள் தப்பிப்புவாளா ? தெரியவில்லை.
அவளின் மனோநிலை கண்டு அவளுக்கே சிரிப்பாக வந்தது. யார் இவனிடமிருந்து பிரித்து விடுவார்கள் என்று நினைத்து ஓடினாளோ… அவர்களே இவனிடமிருந்து அவளைக் காப்பாற்ற வர வேண்டும் என்று விரும்புகிறாள்.
பயத்துடன் அவனைப் பார்த்தவளுக்கு படக்கென்றது. அரக்கன்! அதற்குள் ஆறடி அளவில் குழியை வெட்டி விட்டு புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
அவளுக்கு சுயபச்சாதாபமும், அவள் மீதே வெறுப்பும் தோன்ற கதறி அழுதாள். அது ஊருக்கு ஒதுக்குப் புறமான இடமாக இருக்க வேண்டும். மக்களின் நடமாட்டமோ , வண்டிகளின் சத்தமோ எதுவும் இல்லை. என்ன கதறினாலும் பிரயோஜனம் இல்லை என்றே அவளுக்கு தோன்றியது.
இனி செய்ய எதுவும் இல்லை என்ற நிலை காரணமாக முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய மனோநிலைக்கு வந்திருந்தாள். குழியின் மண்ணை சுத்தமாக மேலேடுத்துக் கொண்டிருந்தவன் குனிந்த வண்ணமே “உன் அதிருஷ்டம் என் மனைவியின் எலும்புக் கூட்டோடு உன்னை புதைக்கப் போகிறேன்!” வில்லன் சிரிப்போடு, இன்று மதியம் வரை அவளின் கதாநாயகனாக இருந்த அவன் கையில் ஒரு மண்டை ஓட்டை எடுத்துக் காண்பித்தான்.
அவள் உடலெங்கும் குளிர் பரவியது. “அடப்பாவி…!” வாய் அவளை அறியாமல் சொன்னதைக் கேட்டு சிரித்து கொண்டே, “வேற டயலாக், ப்ளீஸ்…” என்றான்.
அழுததாழும், அரற்றியதாலும் ஓய்ந்து போனவள், இனி தண்ணீர் கேட்டால் கூட கொடுப்பானா என்று தெரியாததால் வாயை மூடிக்கொண்டாள்.
குழி வெட்டி முடித்து விட்டு மூச்சு வாங்க தண்ணீர் பாட்டிலை காலி செய்து விட்டு அவளருகில் புன்சிரிப்புடன் வந்தான் அவன். அவ்வளவுதான்… கதை முடிந்தது என்று அவள் எதுவும் பேசவில்லை. தூணில் கட்டியிருந்த கைகளை அவிழ்த்து கையை மட்டும் ஒன்று சேர்த்து கட்டினான். முரண்டு பிடிக்கக் கூட அவளால் இயலவில்லை. ஏற்கனவே தூணில் இறுக்கிக் கட்டியிருந்ததால் கைகள் இரண்டும் மறத்துப் போய் இருந்தது.
சுலபமாக இழுத்து குழியில் தள்ளி நிற்க வைத்தான்! யாருக்கும் கிடைக்காத பாக்கியம்! அவளுக்குக் கிடைத்திருப்பதாக நினைத்துக் கொண்டாள்.
நிற்க வைத்த வேகத்தில் மண்ணை இடுப்பு வரை தள்ளி விட்டிருந்தான். மீண்டும் வேக வேகமாக அவன் மண்ணை அள்ளி வீசும் போது ஒரு கல் அவள் மண்டையைப் பதம் பார்த்தது!
“ஆ….” வென்று வாய்விட்டு அலறினாள். அதை எதிர்பார்க்காதவன் போல் பாய்ந்து வந்து வாயை மூடினான்! இதுவரை இருந்த நக்கல் நையாண்டி விடுத்து “அடியே விடிஞ்சு போச்சு…! கத்தினே கழுதை அறுத்து போடுவேன் ஜாக்கிரதை…!” கர்ஜித்தான்.
அவளுக்குள் இதுவரை இருந்த விரக்தி தொலைந்து பதட்டம் பற்றிக் கொண்டது. விடிந்து விட்டதென்றால் தப்பிக்க ஏதாவது வழி கிடைக்குமா? முயற்சி செய்து பார்க்கலாம் என்று நம்பிக்கை கொஞ்சம் எட்டிப் பார்த்தது.
கெஞ்சும் குரலில் ” திடீர்னு தலையில் கல் பட்டா யாரா இருந்தாலும் சத்தம் போடுவாங்க. வலி உயிர் போகுது ப்ளீஸ். எப்படியும் மருந்து தர மாட்டே… கொல்லத்தானே போறேன்னு சொல்லுவே. ஒரு வாய் தண்ணி மட்டுமாது கொடு. உனக்கு புண்ணியமாப் போகும்.” என்றவளை உற்று பார்த்து விட்டு அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதில் சுத்தமாக நீரில்லை.
குழி வெட்டி முடித்ததும் அதை முழுவதுமாக அவனே குடித்து விட்டிருந்தான். யோசனையுடன் இரண்டு எட்டு வைத்தவன், மீண்டும் குனிந்து பரபரவென்று மண்ணைத் தள்ளினான். அடப்பாவி! தண்ணீர் கூட தர மாட்டானா.. வேறு எந்த யுக்தியும் அவளுக்குத் தோன்றவில்லை.
கண்களில் நீரோடு அவனையே அமைதியாக அவள் பார்த்துக் கொண்டிருக்க, கழுத்து வரை மண்ணைத்தள்ளி மூடிவிட்டு ” அப்படியே போனா தப்பிக்க பார்ப்பே அதான் கழுத்து வரைக்கும் மண்ணை போட்டேன். பேசாது இருந்தா தண்ணீர் கொண்டு வரேன்.” என்றபடி வாயில் துணியை அடைத்து விட்டு தண்ணீர் கொண்டு வரக் கிளம்பினேன்.
அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வாயில் துணி வைக்க மாட்டான் என்று நினைத்தது அவளின் முட்டாள்தனம். அவன் நடக்கும் ஓசை தேய்ந்து போனவுடன் நம்பிக்கையாக ” ம்ம்….ம்…ம்…ம்…” என்று சத்தம் கொடுத்துப் பார்த்தாள். எந்த பலனும் இல்லை. முற்று முழுதாக தான் தப்பிக்க இயலாது என்று தோன்றியதும் உடைந்து போனாள்.
இறுதியாக தன்னைப் பெற்று மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்த தந்தையையும், தாயையும் நினைத்து கண்ணீர் விட்டபடி, மானசீகமாக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டாள். ஊட்டி ஊட்டி வளர்த்தவர்களுக்கு செய்த துரோகம் தான் தன்னை துரத்துவதாக நினைத்து அமைதி அடைந்தாள்.
அவளுக்கு காதல் வரும் முன் தோழியாக இருந்த தங்கையையும் நினைத்துக் கொண்டு கண்களை இழுத்து மூடிக் கொண்டாள்.
சிறிது நேரத்திற்கு பின் காலடி ஓசை கேட்டது. அவள் கண் திறக்க விரும்பவில்லை. தனக்கு சரியான தண்டனை தான் கிடைக்கிறது என்று தோன்றியது.
காலடி ஓசை அவளருகில் வந்து மெதுவாக நின்றது. அப்போதும் அவள் கண் திறக்கவில்லை. அவளின் வாயிலிருந்து துணி மென்மையாக எடுப்பது தெரிந்தும் பயத்தில் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டாள்.
இதமாக ஒரு கை அவள் தலை தடவ, லேசாக இமை திறந்தவளின் எதிரில் அவள் தங்கை!
தாய் பசுவினை கண்ட கன்று போல் அவளைக் கண்டதும் கதறி துடிக்க ஆரம்பித்தாள். பல பக்கங்களில் இருந்தும் காலடி ஓசை கேட்டது. அது காவல்துறை அந்த இடத்தை வளைத்து விட்டதை உறுதி செய்தது. அவள் என்னதான் காதலில் இருந்தாலும் ஒருநாள் கூட இரவு வெளியே இருந்ததில்லை என்பதாலும் வீட்டினர் உஷாராகி, காவல்துறையை அணுக, அவர்கள் இவள் தன் தங்கைக்கு அனுப்பி இருந்த செய்தியைக் கொண்டு ஏதாவது பிரச்சனையா என்று தேட, காரின் சடன் பிரேக்கில் சீட்டின் பின்னால் விழுந்த போன் உயிரோடு இருந்த காரணத்தால் அவள் காப்பாற்றப்பட்டாள். ஆனால், குற்றவாளி தப்பிவிட்டான்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.